“பிராண நிறக் கனவு” …. சிறுகதை – 90 ….. அண்டனூர் சுரா.
இருபத்தொரு வருடக் கனவை இருநூற்று எண்பது நாட்கள் வயிற்றில் சுமந்து அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தாள் கோதகி. அடிவயிறு நிறைந்திருந்ததைப் போல அவளது ஆழ்மனம் ஆத்மத்தால் நிறைந்திருந்தது. கர்ப்பப் பையை ‘வெடுக்’கென்று உருவி வெளியே எறிந்துவிடுவதைப் போல வலி விட்டுவிட்டு வலித்துக்கொண்டிருந்தது.
சூட்டு வலிக்கும் பிரசவ வலிக்குமான வித்தியாசத்தை அவள் அப்பொழுதுதான் உணர்ந்தாள். சூட்டு வலி, மாமியார் ‘நீயொரு மலடி’ என்று பத்துப்பேர் கேட்கும் படியாகச் சொல்லுகையில் மனதில் எழும் பூகம்ப வலி என்றால் பிரசவ வலி அவளது கற்பைச் சந்தேகிக்கும் பொருட்டு கணவன் அர்த்தராத்திரியில் வார்த்தைகளால் தைக்கையில் அடிவயிற்றிலிருந்து மார்புகூடு நோக்கி பிரவாகமெடுக்கும் வலி என்று உணர்ந்துகொண்டாள்.
இருபத்தொரு வருட சந்தேகக் குத்தல், பிடுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவள் குழந்தையை வயிற்றில் சுமந்து நிறை குடமென மருத்துவமனைக்கு வந்திருந்தாள். கீழிலிருந்து மேல்நோக்கி எழும் நெருப்பாக வலி பிரவாகமெடுத்தால் அது சூட்டு வலி. மேலிருந்து கீழ்நோக்கி மின்னலைப் போல வெட்டினால் அது பிரசவ வலி. சூட்டு வலியை விடவும் பிரசவ வலியை உள்வாங்குகையில் அவளுக்குச் சுகமாக இருந்தது. வலியை உள்ளூர உள்வாங்கியவள் குழந்தைப்பேறு கனவான காலத்தில் காதினில் வாங்கிய வசவுகளை மென்றபடி வலியைத் தொடைகளுக்கிடையில் இறக்கிக்கொண்டிருந்தாள்.
கோதகி நிறைமாதக் கர்ப்பிணி. ஆனால் அவள் வயிறு பார்க்க நான்கைந்து மாத கர்ப்பிணி வயிற்றைப் போலிருந்தது. நிறை மாத கர்ப்பிணி ஒருவர் குளிக்கையில் தலையில் ஊற்றும் தண்ணீர் நெற்றி, மார்புக் கடந்து வயிற்றை அடைகையில் தண்ணீர் வழுக்கிக்கொண்டு தரையில் விழுந்து தெறிக்க வேண்டும். அப்படியாகத் தெரித்தால் அவள் ஆரோக்கியமான கர்ப்பிணி. ஆனால் கோதகியின் வயிறு அப்படியாக இல்லை. அவள் குளிக்கையில் தண்ணீர் மேல்வயிற்றுப் பள்ளத்தில் தேங்கி இரு பக்கமும் வழிந்தது. அவளது அடிவயிறு கர்ப்பப் பெருக்கத்தைக் கொண்டிருந்தாலும் இரைப்பையுடன் கூடிய மேல்வயிறு பசியாலான பள்ளமாக இருந்தது.
அவளது கையில் பேறுகால குறிப்பேடு இருந்தது. அதை அவள் மருத்துவரிடம் நீட்டினாள். அவளால் நிலையாக ஒரே இடத்தில் நிற்க முடியவில்லை. பசி மயக்கம் அவளைக் கிறங்கடித்தது. கீழே விழுந்துவிடாமல் இருக்க அவள் மருத்துவரின் நாற்காலி பின்பக்கச் சட்டத்தை இறுகப் பிடித்துகொண்டாள். மருத்துவர் அவளது குறிப்பேட்டை வாங்கினார். குறிப்பேட்டை விடவும் பார்க்கும் படியான இத்யாதிகள் அவளிடம் நிறைய இருந்தன. “உனக்கு காச நோய் எதுவும் இருக்காம்மா?” கேட்டார் மருத்துவர்.
எலும்பு மட்டுமே கொண்ட அவளது உடலில் அப்படியொரு நோய் இருந்தாலும் இருக்கலாம் என்பதாக அவளது உடம்பு காட்டிக்கொண்டிருந்தது. “இல்லைங்களே டாக்டர்” என்றாள் கோதகி.
“உன்னோட மார்பு கூடு ஏன் இப்படி எலும்பாத் தெரியுது?”
மருத்துவரின் கேள்விக்கு அவளிடம் நிறைய பதில்கள் இருந்தன. சாப்பிட வழியில்லை. சரியான நேரத்திற்குச் சாப்பிட முடியவில்லை. குழந்தைபேறுக்காக பல வருடங்கள் விரதமிருந்த வயிறு இது. என் உடல்வாகு இப்படிதான்,.. இப்படியாக. ஆனால் மருத்துவரின் கேள்விக்கு அவள் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டிருந்தாள். அச்சிரிப்பு, “இந்த உடம்பை வைத்துகொண்டுதான் நான் ஓர் ஆம்பிளைப் பிள்ளையைப் பெற்றெடுக்கப்போகிறேன்..” என்று சொல்வதாக இருந்தது.
மருத்துவர் அவளது வயிற்றில் ஸ்டெதாஸ்கோப் வைத்துப் பார்த்தார். “பேரு?”
“கிருஷ்ணா”
மருத்துவர் அவளை நிமிர்ந்து பார்த்தார். “ யாரோட பேரு கிருஷ்ணா?”
“ பிறக்கப் போகிற புள்ளையோட பேரு”
மருத்துவருக்குக் கோபம் வந்தது. பின்னே! பிள்ளையே இன்னும் பிறக்கவில்லை. அதற்குள் பெயர் என்ன வேண்டிக்கிடக்கிறது! முகத்தைக் கோபமாக வைத்துகொண்டு கேட்டார். “உனக்குப் பிறக்கப்போவது ஆம்பளைப் பிள்ளைனு யார் சொன்னது?”
“ஆம்பளெப் புள்ளதான் பிறக்கும்!”
“அதான் எப்படிங்கிறேன்?”
“இருபத்தொரு வருசம் விரதம் இருந்திருக்கேன்.”
“விரதமிருந்தா ஆம்பளப் பிள்ள பொறந்திருமா?”
“நான் விரதமிருந்து கேட்டது ஆம்பளப் புள்ளைதான்.”
அவளிடமிருந்து பார்வையை எடுத்த மருத்துவர் கருத்தரித்த தேதியைப் பார்த்தார். அதிலிருந்து நாட்களை எண்ணினார். ஏட்டில் கையெழுத்திட்டு மகப்பேறு வார்டுக்கு அனுப்பி வைத்தார்.
“டாக்டர், பிரசவ தேதி இன்னைக்குத் தானே?”
மருத்துவர் குனிந்த தலையைச் சற்றே நிமிர்த்தி, “போம்மா, இன்னும் கொஞ்சநேரத்தில உன் புள்ளைய நீ பார்த்திடலாம்…” என்றதும் கோதகியின் முகத்தைப் பார்க்க வேண்டுமே. அப்பப்பா! இருபத்தொரு வருட மனவலியை இறக்கி வைக்கப்போகிற பூரிப்பில் அவள் பூத்தாள்.
அவள் வார்டுக்குள் நுழைவதற்கு முன்பாக வடக்குப் பக்கமாகத் திரும்பினாள். அவளது பார்வைக்குக் கிருஷ்ணன் கோயில் கோபுரம் தெரிந்தது. அவளுக்கு இந்தக்குழந்தையைக் கொடுத்தது கிருஷ்ணன்தான். அப்படியாகத்தான் அவள் நம்பிக்கொண்டிருந்தாள். மாதத்திற்குப் பத்து நாட்கள் ஒவ்வொரு சாமிக்கென விரதமிருந்து வந்தாள். கடைசியாகக் கிருஷ்ணன் சாமிக்கென்று விரதமிருக்கையில்தான் அவள் வழக்கமாகத் தலை குளிக்கும் நாள் தள்ளிப்போயிருந்தது. அதற்குப் பிறகு அவள் நலுங்காமல் குலுங்காமல் நடக்கலானாள். உரக்கப் பேசாமல் தொண்டைக்குள் பேசினாள். ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்தாள். அவள் கருத்தரித்த செய்தியை அவள் கணவனிடம் சட்டெனச் சொல்லிவிடவில்லை. அவள் பிறந்த ஊரில், அவளது உறவினர் ஒருத்திக்கு நடந்தேறிய கசப்பான ஓர் அனுபவம் அவளை எச்சரித்தது.
கோதகிக்கு ரேணுகா, சித்தி முறை வேணும். அவள் தாய் மாமனைக் கட்டிக்கொண்டவள். பல வருடங்களாகக் குழந்தை பேறு இல்லை. பத்து, பதினைந்து, இருபது வருடங்களென அவள் கோயிலுக்கும் மருத்துவமனைக்குமாக அலைந்தாள். ஒரு நாள் அவள் தலைக்குளிக்க வேண்டிய நாள் தள்ளிப்போனது. அவளுடைய பிறந்த வீடு, அக்காள், அத்தை, சித்தியென…ஒருவர் விடாமல் சொல்லி மனதிற்குள் பூரித்தாள். ஒரு மாதம் கடந்து மருத்துவரிடம் சோதிக்கச் செல்கையில் மருத்துவர் சொன்னார். மாதவிடாய் நின்றுபோனதற்குக் காரணம் கர்ப்பமில்லை, வயோதிகம் என்று.
ரேணுகா பாவம்! இடி இறங்கிய மரமாக ஒடுங்கி நொறுங்கிப் போனாள். அதன்பிறகு அவள் ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் காட்டிற்குச் செல்கையில் யாருமில்லா நேரம் பார்த்து கையை இறுக மூடி வயிற்றில் குத்திக்கொண்டு அழுதாள். அப்படியான வயோதிக மாதவிடாய் நிறுத்தம்தான் தனக்கும் வந்துவிட்டதோ,..இதை நினைக்கையில் அவளுக்கு அழுகை வந்தது. கண்ணாடி முன் நின்று முகத்தைப் பார்த்தாள். திருமணக் காலப் புகைப்படத்தையும் கண்ணாடியில் தெரியும் முகத்தையும் ஒப்பிட்டாள். அவளது முகத்தோற்றம் வயோதிகத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டிக்கொண்டிருந்தது. கூந்தலை நன்கு வாரியெடுத்து பவுடர் பூசி, பூ வைத்துப் பார்த்தாள். ஓரளவு இளமைக்குத் திரும்பியிருந்தாள். நாற்பத்து
இரண்டு வயதெல்லாம் ஒரு வயதா? அவளவள் ஐம்பது வயதில்கூட பிள்ளைப் பெற்றுக்கொள்கிறார்கள். எனக்கு என்னவாம்! கண்ணாடி முன் நின்றுகொண்டு அவளது வயிற்றை ஒரு கணம் பார்த்துகொண்டாள்.
இவளது கணவன் கோராக்பூர் பேருந்து நிலையம் கடையில் சாயா ஆற்றுபவர். அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து, முகத்தைக் கழுவி ஒரு பீடியைப் பற்றவைத்துகொண்டு கடைக்குச் சென்றுவிடுபவர். வீடு திரும்ப மாலை நான்கு மணியாகும். வீடு என்றால் வீடு அல்ல. இரண்டு மாடி வீடுகளின் இடைப்பட்ட சந்து.
கோதகி, மருத்துவமனைக்குச் சென்று எதற்கும் கர்ப்பத்தை உறுதிப்படுத்திவிட நினைத்தாள். கடைசி கடைசியாகக் கிருஷ்ணன் சுவாமிக்கு விரதமிருக்கையில்தான் மாதவிடாய் நின்றுவிட்டிருந்தது. “கிருஷ்ணா, நான் உண்டாகியிருக்கணும்” மருத்துவமனை வரைக்கும் அவள் சுவாமியை வேண்டியபடியே சென்றாள்.
மருத்துவமனையின் நீண்ட வரிசையில் தன்னை முடிந்துகொண்டு நின்றாள். அவளைப் பார்த்து ஒரு கர்ப்பிணி சொன்னாள். “இது கர்ப்பிணி வரிசை. நோய், நொடி வரிசை அங்கே இருக்கு.” கோதகிக்கு அழுகை வந்தது. அவள் பதிலுக்கு எதுவும் பேசிவிடவில்லை. அவளுக்குக் கோபத்தால் படபடப்பு வந்தது. தான் கோபப்பட்டால் கருவிற்கு என்னவேண்டுமானாலும் நடக்கக்கூடும் என்கிற முன்னெச்சரிக்கையில் வரிசையிலிருந்து விலகிச் சற்றே ஒதுங்கி நின்று பிறகு வரிசையில் தன்னை முடிந்துகொண்டாள்.
மருத்துவரை நெருங்குகையில் அவளது உதடுகள் வேண்டிக்கொண்டேயிருந்தன. “கிருஷ்ணா, கிருஷ்ணா நான் உண்டாகியிருக்கணும்… உண்டாகியிருக்கணும்… உண்டாகியிருக்கணும்…”
மருத்துவர் சொன்னார், “உறுதியாகச் சொல்லும் படியாக இல்லை. இருக்கலாம் அப்படியாகத்தான் தெரியுது. எதுக்கும் இரண்டு வாரங்கள் கழிச்சி வாங்க. இன்னொருக்கா சோதனை செய்துபார்க்கணும்.” மருத்துவரின் வார்த்தைகள் அவளுக்குச் சற்றே மனஆறுதலைக் கொடுத்தாலும் மென்மெல்லிய பயம் மனதை அறுத்துக்கொண்டிருந்தது.
“இருக்கலாம், அப்படியாகத்தான் தெரியுது.” என்கிற சொற்கள் அவளது மனப்பரப்பை நிரப்பின. நான் கர்ப்பமாகியிருக்கிறேன் என்பதை அவள் உறுதியாக நம்பினாள். பசியும் சாப்பிட முடியாமையும் எதை நினைத்தாலும் உமட்டும்படியான அருவறுப்பும் மண்ணையேனும் தின்னவேண்டும் என்கிற உணர்வும் அவளை அப்படியாக நம்பிக்கைக்கொள்ள வைத்தது. ஆனாலும் அவளுக்குள் ஏமாற்றக் கிறக்கம் பச்சை நரம்பாக ஓடியது. வாசலில் நின்றுகொண்டு போகிறவர் வருகிறவர்களை அழைத்து இரண்டு விரல்களை நீட்டி இரண்டில் ஒன்றைத் தொடச் சொன்னாள். “வலது விரலைத் தொட்டால் உண்டாகிருக்கேன். இடது தொட்டால் இல்லை.” வலது விரல்தான் தொடப்பட்டது. திரும்பவும் அவள், “இப்ப இடது விரலைத் தொட்டால் உண்டாகிருக்கேன். வலதைத் தொட்டால் இல்லை.”
அவள் நினைத்தப்படியே இடது விரல்தான் தொடப்பட்டது. அடுத்து அவளுடைய பார்வை வெட்டவெளிக்குச் சென்றது. அதோ ஒரு காக்கை பறந்து வருகிறது. காக்கை இந்த மரத்தில் உட்கார்ந்தால் உண்டாகியிருக்கிறேன். இல்லையென்றால் இல்லை. ஆம் காக்கை அம்மரத்தில் உட்கார்ந்து அவளது கர்ப்பத்தை உறுதிப்படுத்தியது.
மருத்துவர் சொல்லிருந்த நாள் வந்திருந்தது. மருத்துவர், “ஆம், கர்ப்பம்தான்..”’ என்று உறுதிப்படுத்தினார். அவளுடைய கண்கள் ஆனந்தத்தில் கலங்கி கன்னத்தில் வழிந்தது.
“அப்படியே எய்ட்ஸ் டெஸ்ட்டும் பண்ணிட்டு வந்திடும்மா” என்றார் மருத்துவர்.
எய்ட்ஸ் சோதனை என்றதும் அவளுக்குப் பயம் வந்தது. ஒரு முறை அவளுடைய வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருந்தாள் அவளது தோழி சீதா. அவள் வீட்டிற்குள் நுழைகையில் சொல்லிக்கொண்டே நுழைந்தாள். “என்னடி கோதகி எய்ட்ஸ் பிடிச்சவள் மாதிரி இருக்கே…”
சீதா எப்பவும் அப்படித்தான்! எந்த நேரத்தில் எப்படிப் பேச வேண்டுமெனத் தெரியாதவள். அந்நேரத்தில்
கோதகி சிரித்துகொண்டு பதிலடி கொடுத்தாள். “நீ மட்டும் என்னவாம்?”
“உன்கிட்ட பேசியா நான் தப்பிக்கப் போறேன்..” என்று நழுவியவள் கோதகியை இறுக அணைத்து அவளை எச்சரிக்கும்படியாக காதினில் சொன்னாள். “எதற்கும் வீட்டு ஆம்பள மேல ஒரு கண்ணு வையடி. சோறு கிடைக்கிற இடத்தில பசியாறிடப் போறாரு.” இதைக் கேட்கையில் கோதகிக்கு அழுகை வந்தது. “என்னடி சொல்றே?”
“கற்புள்ள புருசனாகவே இருந்தாலும் பொண்டாட்டி காலத்தோட உண்டாகாட்டி, அவனோட ஆண்மையைச் சோதிச்சுப் பார்க்க எவளையாவது தேடத்தான் செய்வாங்க. நீ உண்டாகாதவ. அதுக்காகச் சொல்றேன்..”
சீதையின் கொடுக்குப் பேச்சு அவள் நினைவுக்கு வந்ததும் எய்ட்ஸ் சோதனை செய்துகொள்ள அவள் தயங்கினாள். என் உடம்பு நாளுக்கு நாள் குன்றி வர புருசனின் நடத்தைதான் காரணமோ! அவருக்கு எய்ட்ஸ் இருக்கும்தானோ?’ அவள் மனநடுக்கத்திற்கு உள்ளானாள்.
“கோதகி, டெஸ்ட் பண்ணிட்டீயா?” மருத்துவர் அரற்றிக் கேட்டதும் அவள் தயக்கத்துடன் அறைக்குள் நுழைந்தாள்.
“டெஸ்ட் ரிசல்ட் எப்ப கிடைக்கும் டாக்டர்?”
“நாளை மறுநாள் வந்து வாங்கிக்கோ.”
இரண்டு நாட்கள் அவளுக்குத் தூக்கம் வருவேனா என்றது. புருசனிடம் கேட்டுவிடலாமா என யோசித்தாள். எப்படிக் கேட்பதாம்? ஏங்க உங்களுக்கு எவ கூடாவது தொடர்பு இருக்கா, என்றா? அப்படிக் கேட்டால் என்ன சொல்வார். சொல்லவா செய்வார். உதைக்க அல்லவா செய்வார். உதை ஒருவேளை என் வயிற்றில் விழுந்து விட்டால்? வேண்டாம்! புருசன் நல்லவர்! இத்தனை வருடங்கள் என்னையே சுற்றிச்சுற்றி வந்தவர். எனக்குத் துரோகம் செய்திருக்க மாட்டார். முதுகுக்காட்டி படுத்திருந்தவள் கணவன் பக்கமாகத் திரும்பி அவரை இறுகக் கட்டிப்பிடித்துகொண்டாள். அவரது கையை எடுத்துச் சீலையை விலக்கி வயிற்றைத் தடவிக் கொடுத்தாள்.
“என்ன கோதகி?”
“நான் உண்டாகிருக்கேன்க.”
அவருடைய கண்கள் ‘படக்’ கெனத் திறந்து கொண்டன. அந்த இருட்டிலும் அவரது உதடுகள் துடித்ததை அவள் கண்டாள். “இம், உண்டாகிருக்கேன்.” அவளது கண்கள் கலங்கின. கோதகியை அவர் இறுக அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்.
மறுநாள், முதல் ஆளாக மருத்துவமனை வாசலில் போய் நின்றாள். “எய்ட்ஸ் டெஸ்ட் நெகடிவ்” என வந்து அவளது பிராண வாயுவில் ஆக்ஸிசனைக் கூட்டியது.
கோதகி கர்ப்பமான செய்தி ஐந்தாவது மாதம்தான் சுற்றங்களுக்குத் தெரியவந்தது. அவரவர் கோதகி வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துச் சென்றார்கள். வளைக்காப்பு முடிந்து பிள்ளை பெற்றுக்கொள்ள மருத்துவமனைக்கு வந்தாள்.
மருத்துவமனை வாசலில் கணவர் பீடியைப் புகைத்தவாறு உட்கார்ந்திருந்தார். அவரை அழைத்தாள் கோதகி. அவர் பாதி புகைந்துபோயிருந்த பீடியை உள்ளங்கையால் அணைத்து மீதியைக் காதில் சொருகிக்கொண்டு நடந்துவந்தார்.
“இன்னைக்கு புள்ள பொறந்திருமாய்யா. டாக்டர் சொல்லிட்டாரு.”
அவரால் எதுவும் பேச முடியவில்லை. மனைவியைப் போலவே அவர் கோயில் கோபுரத்தைப் பார்த்தார். உதட்டிற்கு விரல்களைக் கொண்டுச்சென்று ‘இச்’ கொட்டினார்.
“ஓட, ஒடியார வேண்டிருக்கும்யா. எங்கேயும் போயிடாதே. கழட்டித் தர்ற நகையப் பத்திரமா வச்சிக்கோ. கவரிங்க்தான். ஆனாலும் கடன்ல வாங்கினது. பத்திரம்…” அவளது காது, கழுத்தில் கிடந்த நகையைக் கழட்டி புருசனிடம் நீட்டினாள். அவர் அதை வாங்குகையில் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. எப்படியேனும் எனக்கொரு குழந்தை வேணும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் கண்களின் விளிம்பில் புரையோடியது.
கோதகியின் இரைப்பையைச் சுத்தம் செய்ய மருந்து கொடுத்திருந்தார்கள். வயிறு சுத்தமானதும் மகப்பேறுதான். அவள் அதற்காக மருந்து எடுத்துக்கொண்டு அரை மணிநேரம் ஆகிவிட்டிருந்தது. வயிற்றுப்போக்கு போவேனா என்றது. வயிற்றுப்போக்கு போக வயிற்றில் ஏதேனும் இருக்க வேணுமே!
வயிறு சுத்தமானால்தான் பிரசவம் பார்க்கலாம் எனச் செவிலியர்கள் சொல்லிவிட்டிருந்தார்கள். அவள் கழிப்பறையில் குனிந்து, உட்கார்ந்து முக்கிப் பார்த்தாள். குழந்தைதான் வெளியே வருகிறேன் என்றது. வயிற்றுப்போக்கு போக வேண்டிய நேரத்தில் போகாவிட்டால் என்ன! குழந்தை பிறக்கவேண்டிய நேரத்தில் பிறந்தாகவேண்டும்! அவள் அடிவயிற்றில் கையைக் கொடுத்து மெல்ல நடந்து மருத்துவரிடம் வந்தாள். மருத்துவர் சுற்றிலும் மூன்று செவிலியர்கள் நின்றார்கள். “நர்ஸ், எனக்கு வரல…”
“என்ன வரல. வலியா, போக்கா?”
அந்த நொடியில் அவள் விதிர்விதிர்த்து போனாள். செவிலி கேட்கும்பொழுதான் அவளுக்கு நினைவு வந்தது. இத்தனை நேரம் கடுத்துக்கொண்டிருந்த இடுப்பு வலி அரை மணி நேரமாக இல்லாமல் இருந்தது.
அவளது கை, கால்கள் உதறின. “டாக்டர், இடுப்பு வலியும் வரல.”
செவிலி முணுமுணுத்தார். “உடம்பா வச்சிருக்கா உடம்பு. எங்க வேலையை உண்டு இல்லைன்னு பண்ண வந்திருக்காள். புள்ளப் பெத்துக்கிற வருகிறவள்வ திடகாத்திரமா வர வேணாமா…” நான்கு பேருக்குக் கேட்கும்படியாகத் திட்டிக்கொண்டே செவிலி அவளை அழைத்துகொண்டு உள்ளறைக்குள் சென்றாள்.
“பெட்லப் படு…“
மெத்தைக்கு ஒரு கையைக் கொடுத்துப் பிட்டத்தை மெத்தையில் வைத்து உட்கார்ந்தவள் மெல்ல படுக்கலானாள். அவளது ஆடையை விலக்கிக் கால்களை விரித்துப் பார்த்தார்கள் செவிலியர்கள். பிறப்பு வழிப்பாதை காய்ந்துபோயிருந்தது. செவிலியர்கள் தலையில் அடித்து மருத்துவரிடம் ஓடிவந்தார்கள். வெளியே நின்றுகொண்டிருந்த அவளது கணவனை அழைத்தார்கள். மூன்று இடங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள்.
“கிரிட்டிக்கல் பொசிசன். தாய்க்குக் குளுக்கோஸ் ஏறிக்கிட்டிருக்கு. போதுமான நீர்ச்சத்து தாய்க்குமில்ல, சேய்க்குமில்ல. சீசேரியன் பண்ணிதான் குழந்தைய எடுக்கணும்..” கையெழுத்து வாங்கிக்கொண்டு அவர்கள் வார்டு நோக்கி ஓடினார்கள். சற்றுநேரத்திற்குள் கோதகி வயிற்றிலிருந்து ஆண் குழந்தையொன்றை வெளியே எடுத்தார்கள்.
அழவேண்டிய குழந்தை உடம்பை முறுக்கி மட்டும் கொடுத்தது. உயிர் இருப்பதற்கான சமிக்ஞை குழந்தையின் வாய் அசைவில் தெரிந்தது.
கோதகி மயக்கத்திலிருந்து மீண்டாள். தனக்குப் பிறந்திருப்பது ஆண் குழந்தைதானா எனத் தெரிந்துகொள்ள கண்களை விழித்துப் பார்த்தாள். குழந்தையைத் துழாவினாள். அவளது அருகில் குழந்தை இல்லை!
“நர்ஸ், எங்கே என் புள்ள…” உதடுகளால் கேட்க முடியாத கேள்வியை அவளது கனிந்த கண்கள் கேட்டன. “குழந்தைக்கு மூச்சுத் திணறல். பிராண வாயு கொடுக்க கொண்டுபோயிருக்காங்க” என்றார் ஒரு செவிலி. கோதகியின் உடம்பு நடுங்கியது. உடம்பு சலசலவென வியர்த்துவிட்டது. அவளது உயிர் அறுந்துவிடுவதைப் போலிருந்தது. இதே மருத்துவமனையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு சிலிண்டரில் பிராண வாயு இல்லாமல் குழந்தைகள் செத்து, தாய்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு
அழுதார்கள். அதை நினைக்க அவளது கண்கள் இடுங்கின. அவளால் கட்டிலில் படுத்திருக்க முடியவில்லை. இதயம் ‘திடும் திடும்’ என்று இடித்தது. நெஞ்சுக்குழிக்கும் அடிவயிறுக்கும் சற்றுமேலே இத்தனை நேரமில்லாத ஒரு விதமான வலி பிரவாகமெடுத்தது.
“ஏன் இப்படி பதைக்குறீங்க. குழந்தைக்கு ஒரு குறையுமில்ல. சுவாசம் மட்டும்தான் பிரச்சனை. பிராணவாயு கொடுத்தால் உயிர் பிழைச்சிக்கிரும்..” ஒரு செவிலி சத்தமிட்டார். அவளுக்கு மயக்கம் கிறுகிறுத்து வந்தது. “கிருஷ்ணா , கிருஷ்ணா,.. என் குழந்தைக்குப் பிராண வாயு கிடைக்கணும்.” கண்களை மூடியவளாய் வேண்டிக்கொண்டாள். அவளது நெஞ்சுக்கூடு ஏறி இறங்கியது. கன்னத் தசைகள் துடித்தன.
அவளுக்கும் அருகில் ஒரு செவிலி நின்றுகொண்டிருந்தார். அவரைத் தன் அருகினில் அழைத்து இரண்டு விரல்களை நீட்டினாள். “நர்ஸ், ரெண்டு விரல்ல ஒன்றைத் தொடுங்க..” இடது விரலைத் தொட்டால் பிராண வாயு கிடைக்கும். வலதைத் தொட்டால் கிடைக்காது.
“ராமா, ராமா..” அவளது உதடுகள் துண்டிக்கப்பட்ட இறக்கைகளாகத் துடித்தன. செவிலியர் இரண்டில் ஒன்றைத் தொட அருகினில் வந்தார். கோதகியின் விரல்கள் நடுங்கத் தொடங்கின.