இந்தியா – சீனா இடையில் ஒப்பந்தம்; லடாக் பகுதியில் குறைவடைந்த பதற்ற நிலை
கிழக்கு லடாக், அருணாச்சல பிரதேச எல்லைத் தொடர்பில் இந்தியா – சீனாவுக்கிடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
2020 ஆம் ஆண்டு கால்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலில் இந்திய இராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்தியா – சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து, கிழக்கு லடாக் பகுதிகளில் இந்தியாவும் சீனாவும் தங்கள் இராணுவ வீரர்களை குவித்து வந்தது.
இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைகள் துல்லியமாக வரையறுக்கப்படாததால், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு நிர்ணயிக்கப்பட்டு இரு நாட்டு வீரர்களும் அவர்களது பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இரு நாட்டினரும் இராணுவ வீரர்களை குவித்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் மூளும் என்ற நிலைப்பாடு இருந்து வந்தது.
இதற்கு தீர்வைக் கொண்டு வரும் நோக்கில் இரு தரப்பு இராணுவ அதிகாரிகளும் சுமார் நான்கு ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எதுவித உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் தற்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் உடன்பாடு ஏற்பட்டு இரு நாட்டு இராணுவத்தினரும் எந்தெந்த பகுதியில் ரோந்து செல்வது என ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோல் ப்ரிக்ஸ் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்நிலையில், எல்லையில் இராணுவ வீரர்களை வோபஸ் பெறும் முடிவுக்கு இரண்டு நாட்டு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
அதன்படி இரு நாட்டு தலைவர்களும் தங்கள் நிலைகளிலிருந்து பின் வாங்க ஆரம்பித்துள்ளனர்.
கிழக்கு லடாக் பகுதிகளில் தங்கள் வாகனங்களின் எண்ணிக்கையை சீன இராணுவம் குறைத்துள்ளது. அவ்வாறே இந்திய இராணுவமும் தங்கள் படைகளை திரும்பப் பெற்றதோடு, எல்லையிலிருந்த கூடாரங்களும் அகற்றப்பட்டன.
இவ்வாறிருக்க லடாக் பகுதியில் இராணுவ வீரர்கள் விலக்கி கொள்ளப்பட்டாலும் சிறிது தொலைவில் முகாமிட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.