அரசனை நம்பி புருசனை விட்ட கதையாகி விடுமா?… நியூசிலாந்து சிற்சபேசன்
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14 ம் திகதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி அரசியல்களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.
கடந்த செப்டம்பர் 21ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் முடிவின் தொடர்ச்சியாகவே, பாராளுமன்றத் தேர்தல் முடிவும் அமையக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகமாகத் தென்படுகின்றன.
சனாதிபதித் தேர்தலில் கிடைத்த முடிவு, மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளி என்பதாகவே பரவலாகச் சிலாகிக்கப்படுகின்றது. உலக இயக்கத்திலே மாற்றம் என்னும் ஒன்று மட்டுமே மாறாததாகும். மனிதர்கள் தொடர்ச்சியாக மாறுகின்றனர்.
தனியன்களாக மனிதர்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஒன்றுசேர்ந்து, சமூகத்தின் மாற்றமாகின்றது. அதுவே, தேசமாகத் திரள்சி கொள்கின்றது.
வானத்தில் பறக்கும் பறவையை, அண்ணாந்து பார்த்துக்கொண்டு, பறக்கவேண்டும் என யாருமே கனவு காண்பதில்லை.
ஒவ்வொரு நொடியும்பொழுதும் முயற்சிக்கின்றனர். உன்னதத்தை தேடுகின்றனர். உழைப்பைக் குருதியாக்கி ஓயாது உழைக்கின்றனர்.
உழைப்பு தலைமுறைகளைத் தாண்டுகின்றது. உழைப்பின் பலன் ஒரே தலைமுறையில் கிடைத்துவிடுவதில்லை. அப்பன் போட்ட விதையில், பேரனுக்கு மாங்கனி கிடைக்கின்றது.
இத்தகையதொரு ஆரோக்கியமான வளர்ச்சி, ஒரு தேசமாக இலங்கைக்குக் கிடைக்கவில்லை. பிரித்தானியாவிடமிருந்து கிடைத்த விடுதலை அர்த்தமற்றதாகியது. தனிமனிதர்கள் உழைத்தார்கள். ஆனால், அத்தகைய உழைப்பை முன்னோக்கி உந்தித்தள்ள வேண்டிய தேசக்கட்டமைப்பை உருவாக்க முடியவில்லை. அதனால், ஒரு தேசமாகத் திரள முடியவில்லை.
அதற்கான காரணங்களைத் தேடி அலையவேண்டியதில்லை. அவை காணுமிடமெல்லாம் சிந்திச்சிதறிக் கிடக்கின்றன.
மொழிக்கொள்கை, மதக்கொள்கை என ஆரம்பித்த மூர்க்கத்தனம், உயர்கல்வியில் தரப்படுத்தல் என விரிந்து இனக்கலவரமாகியது. ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் பொங்கினர். புலப்பெயர்வுகள் ஆரம்பித்தது. ஈற்றில், தேசம் வங்குரோத்து நிலையை எட்டிப்பார்த்தது.
அழிப்பது, அபகரிப்பது, ஆக்கிரமிப்பது போன்ற அபத்தங்களை அரசே மேற்கொள்ளும்போது, சாதாரண குடிமகனிடம் எதனை எதிர்பார்க்கலாம் என்பதாகவே 75 ஆண்டுகள் கழிந்துவிட்டன.
கூட்டிக்கழித்துப் பார்த்தால், நிகரலாபம் பூஜ்ஜியம் என்பது, இன்றும்கூட பரவலாகப் புரியப்படாத விஷயம் என்பதே குரூரமான யதார்த்தமாகும்.
இவ்வாறானதொரு, மூச்சைமுட்டுகின்ற புழுக்கமான, பின்னணியிலேயே, செப்டெம்பர் 21 சனாதிபதி தேர்தல் முடிவுகளைக் கவனிக்கவேண்டும்.
நிறைவேற்று அதிகார சனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைகின்றது. ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இலங்கை அரசியலிலும் மாற்றம் ஆரம்பித்துள்ளதான ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகின்றது.
அதிலே உண்மை இல்லாமலில்லை. அரசியல்பதவியின் அலங்காரங்களுடனேயே இறுதியாத்திரை என்னும், இலங்கை அரசியல்வாதிகளின் கனவுகலையத் தொடங்கியிருக்கின்றது.
ஐம்பதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் நவம்பரில் நடைபெறுகின்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதாக, ஒப்புக்குச் சப்பாணியாகவேனும், அறிவித்துள்ளனர்.
இது, இலங்கை வரலாற்றில் மாபெரும் அதிசயமாகும். இத்தகையதொரு மாற்றத்தை உந்தித்தள்ளியதில், தேசிய மக்கள் சக்தியின் பங்கு கணிசமானதாகும்.
அதற்கப்பால், மெச்சிக்கொள்ளும்படியான மாற்றங்களுக்கான சமிக்ஞைகளைக்கூட காணமுடியவில்லை.
அதுமட்டுமல்ல, ஒருவித தயக்கத்தையும் கவனிக்க முடிகின்றது. எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் ஒருவித மென்போக்கைக் காணமுடிகின்றது.
தேர்தலுக்கு முன்னர் காணப்பட்ட வேகம், துடிப்பு போன்றவை காணாமல் ஆக்கப்பட்டுவிட்டனவா எனக் கேட்காமல் விடமுடியவில்லை. அதிரடியான செயற்பாடுகளைத் தேடவேண்டியிருக்கின்றது. ஊழல் பெருச்சாளிகள் தொடர்பிலான குரல், ஈனஸ்வரமாகுவதைக் கவனிக்காமல் கடந்துபோக முடியவில்லை.
அரசியல்வாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட வாகனக்காட்சிப்படுத்தல் அலப்பறைகளைப் பதவியேற்ற காலத்திலே காணமுடிந்தது. தேசியகீதம் இசைக்கப்படுகின்றபோது பெளத்தபிக்குகள் எழுந்து நிற்கின்றனர் என்றும்கூட பரபரப்புக் காணப்பட்டது.
அவையெல்லாம் கனவுக்காட்சிகள். இனி இயல்பு நிலைக்குத் திரும்புங்கள் என்று சொல்வதுபோல, ஜேவிபியின் பொதுச்செயலாளர் உதிர்த்திருக்கும் ஞானமொழி நின்றுநிதானிக்கத் தூண்டுகின்றது.
75 ஆண்டுகால வரலாற்றைக் கறைப்படுத்திய, இனமுறுகல் தொடர்பிலே சொல்லப்பட்ட கருத்தை, போகிறபோக்கில் சொன்னதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
அவ்வாறு சொன்னவரும்கூட, லேசானவர் அல்ல. அதனாலேயே, ஒருபானை சோற்றுக்கு, ஒருசோறு பதம் என்பது பலித்துவிடுமோ என்னும் அச்சம் எழுகின்றது.
வரலாறு மிகப்பெரிய ஆசானாகும்.
1981ல் மாவட்ட சபை, 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கை, 2000களில் நோர்வே அனுசரணை, சுனாமி பொதுக்கட்டமைப்பு, வடக்கு-கிழக்கு இணைப்பு உள்ளிட்ட அனைத்து முயற்சிகளையும் ஜேவிபி எதிர்த்தது. அத்தோடு நின்றுவிடவில்லை. ஆணிவேர் வரையில் தேடித்தேடி அறுத்தது. அதிகாரப் பரவலாக்கல் என்னும் சொற்றொடரை தன்னுடைய அகராதியிலிருந்து கிழித்தெறிந்தது.
அதனாலேயே, சனாதிபதி அனுர குமார திசாநாயக்க தரப்பு, ஒட்டுமொத்த இலங்கைக்கும் பொதுவான மாற்றத்தை ஆத்மார்த்தமாக அவாவுகின்றது என்பதை அப்படியே நம்பமுடியவில்லை.
நம்பிக்கையை வளர்த்தெடுக்க அச்சாரம் தேவை. ஆனால், ரில்வின் சில்வாவின் ஞானமொழி வயிற்றில் புளியைக் கரைக்கின்றது. சாயம் வெளுத்துப் போகுமா, வேஷம் கலஞ்சு போகுமா என்னும் கிலியை ஏற்படுத்துகின்றது.
அதேவேளையில், தேர்தல் அரசியலின் விளிம்புநிலைக்கு, சிறுபான்மைச் சமூகம் வந்துவிட்டமை யதார்த்தமாகும். தம்முடைய சொந்த அரசியல்வாதிகளிடம் சிக்கிச் சிதறுதேங்காய் ஆகிவிட்டனர்.
“தமிழ்தேசியம்”, “அபிவிருத்தி” என்னும் இரண்டையும் தராசில் “நிறுத்துப்பார்க்கத்” துணிகின்றனர். அதிலே “அபிவிருத்தி”யே அதிகநிறை என்பதான தோற்றம் மைமலாகவேனும் தெரியத்தொடங்குகின்றது.
“அபிவிருத்தி” என்று முடிவெடுத்துவிட்டால், பிறகெதற்கு “இடையாள்” என்ற கேள்வி எழுகின்றது. நேரே “கொடுப்பவரிடம்” போகலாமோ? என்னும் எண்ணம் ஏற்படுகின்றது. அதனால், மாற்றி யோசிக்கத் தொடங்குகின்றனர்.
அந்தவகையிலேயே, சனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை வியந்து பார்க்கின்றனர்.
அஃது ஒருவகையில், சிங்கள அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட வெறுப்பினால், சனாதிபதித் தேர்தலிலே, திசைகாட்டியைத் தேடிய சிங்கள மக்களின் மனநிலையை ஒத்தது எனலாம்.
இத்தகையவொரு பின்னணியிலேயே, தேசிய மக்கள் சக்திக்கு, சிறுபான்மைச் சமூகங்களுடைய பரந்துபட்ட ஆதரவு கிடைக்கலாம் என்னும் கணிப்பு ஏற்படுகின்றது.
எதுஎப்படியாகிலும், சிறுபான்மைச் சமூகம் திசைகாட்டிப் பக்கமாகத் திரும்புவது, “அரசனைநம்பி புருசனைவிட்ட கதையாகிவிடுமா” என்பதைக் காலந்தான் சொல்லவேண்டும்.
அருமையான ஆழமான அலசல்
இலங்கைத் தமிழர் நிலை ஏற்றம் அடைவதற்கு ஆண்டவன் அருள் புரியவேண்டும் எனப் பிரார்த்தனை செய் வோம் .
Many thanks Sabes for your
Detailed observations
There is always Karma come first
No one can do damage without our consent
Thanks 👍
மிக அருமையான, ஆழமான விடயமாக பகிர்ந்தளித்து இருக்கிறீர்கள். இறைவன் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டுமென பிரார்த்திப்போம்.
இலங்கையரசியலை ஆன்ம நிலையிலிருந்து அலசும் பார்வை அருமை! சிறுபான்மைச் சமூகங்களை ஒதுக்கும் ஒடுக்கும் நாடுகள் என்றுமே முன்னேறியதில்லை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாத வரை, காலம்தான் பதில் சொல்ல வேண்டுமெனக் காத்திருப்போம்!
Thanks. Tamils also have to see alternate approach not just separate state or opposing stand at all time, it will lead to anihilation of tamils in Sri Lanka that means only upcountry tamils will remain