யாழ்., நீதிமன்றை தவிர வேறு எந்த நீதிமன்றிலும் சாட்சியமளிக்க கோட்டாபய தயாராம்!

2011 ஆம் ஆண்டு காணாமல் போன இரண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தைத் தவிர நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் சாட்சியமளிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவரது சட்டத்தரணி ரொமேஷ் டிசில்வா ஊடாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் காணாமல் போன செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்ச, யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றில் சாட்சியமளிக்க முதலில் அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், பாதுகாப்பு காரணங்களால் அவர் அங்கு ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டது என உயர் நீதிமன்றில் நேற்றைய தினம் (22) விசாரணையின் போது ரொமேஷ் டிசில்வா சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்றாலும், இலங்கையில் உள்ள வேறு எந்த நீதிமன்றத்திலும் சாட்சியங்களை சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகவும் கோட்டபாய ராஜபக்சவின் சட்டத்தரணி இங்கு குறிப்பிட்டார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னைய தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புக் கவலைகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக இருக்கும் போது ராஜபக்சவை சாட்சியாக அழைக்க முடியாது என்று முந்தைய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தற்சமயம் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகிக்காததால், சாட்சியம் அளிக்கும்படி கட்டாயப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

இந்த வழக்கை மேலும் பரிசீலிப்பதற்காக, அடுத்த விசாரணையை 2025 மார்ச் 18 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button