உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் தீவிர வறுமையால் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானவர்கள் தீவிர வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (United Nations Development Programme) மூலம் வெளியிடப்பட்ட புதிய உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீட்டு (Global Multidimensional Poverty Index – MPI) அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களுள் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் குழந்தைகள் எனவும் அது 27.9 வீதம் எனவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முயற்சி (Oxford Poverty and Human Development initiative – OHPI) அமைப்புடன் இணைந்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது போர் சூழல் நிலவும் நாடுகளில் இந்த வறுமை நிலையானது மூன்று மடங்கு அதிகமாக காணப்படுவதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் 2010ஆம் ஆண்டிலிருந்து மேற்படி அமைப்பு இந்த அறிக்கையை வெளியிடப்பட்டு வருகிறது.
இம்முறை இந்த அறிக்கைக்காக உலகளாவிய ரீதியில் 112 நாடுகளில் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் போது வறுமையை மதிப்பிட வீடு, சுகாதாரம், மின்சாரம், உணவு , சமையல் எரிபொருள், போசணை மற்றும் பாடசாலை கல்வி போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள 1.1 பில்லியன் மக்களுள், 828 மில்லியன் மக்கள் சரியான சுகாதார வசதிகள் இன்மை, 886 மில்லியன் மக்கள் வீடு இன்மை, 998 மில்லியன் மக்கள் சமையல் எரிபொருள் இன்மை போன்ற நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் ஏழ்மையால் பாதிக்கப்பட்டுள்ளதால், அடிப்படை வசதிகளை கூட பூர்த்திசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையின்படி, இன்று வரையில் உலகளாவிய ரீதியில் 18 வயதுக்கு குறைந்த 584 மில்லியன் பேர் வறுமையில் வாடுவதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.