மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எம்மால் வழங்க முடியும்!
மக்கள் விரும்பும் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை முன்னெடுக்க தமிழ் மக்கள் ஆணை தர வேண்டும் என சுயேட்சைக்குழு 7 இன் முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற இளைஞர், யுவதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஊழலற்ற ஒரு ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாற்றத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் மனங்களிலும், இளைஞர், யுவதிகள் மத்தியிலும் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அரசியலில் தமக்கான ஒரு மாற்றத்தை சரியாக கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது.
அதை நாம் வரவேற்கின்றோம். எமது இளைஞர், யுவதிகள் எதிர்பார்க்கும் மாற்றத்தை எம்மால் வழங்க முடியும். அதற்கான ஒரு வலுவான அணியை நாம் கொண்டுள்ளோம். எமது மக்களின் அடிப்படை தேவைகள், பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் பிரதேச வளங்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட வேண்டும்.
அத்துடன், உரிமை நோக்கிய பயணமும் இடம்பெற வேண்டும். அதற்கான ஒரு தெரிவு கோடரி சின்னமாக மட்டுமே உள்ளது. எனவே வன்னி மக்கள் அபிவிருத்தியுடன் கூடிய உரிமை அரசியலை மக்கள் விரும்பும் மாற்றத்துடன் முன்னகர்த்த இந்த தேர்தலில் எமக்கு ஆணை வழங்க வேண்டும்.
வன்னியில் ஏற்பட்டுள்ள எழுச்சியும், எம்முடன் கைகோர்க்கும் இளைஞர், யுவதிகளின் முயற்சியும் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். எமது வெற்றி என்பது வன்னியில் உள்ள ஒவ்வொருவரினதும் வெற்றி. அதுவே எமது மண்ணின் மீள் எழுச்சிக்கான ஒரு வெற்றி எனத் தெரிவித்தார்.