85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!
ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று (21) தெரிவித்தார்.
ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்கிழமை இருதரப்பு சந்திப்பை நடத்துவார்.
இதன்போது, மீதமுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் முதல், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் குடிமக்களை இராணுவ சேவையில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.