மீண்டும் யாழ். ரயில் சேவை ஒத்திவைப்பு!
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையிலான ரயில் சேவை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த சேவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகக் கொழும்பு கோட்டையிலிருந்து மஹவ வரை மாத்திரமே தற்போது ரயில் சேவை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் மணித்தியாலத்துக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கக்கூடிய வகையில் வடக்கு ரயில் மார்க்கத்தில் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு ரயில் பாதையில்,மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான பகுதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும் ரயில்களை இயக்குவதற்கு தேவையைான தரத்தை அது பூர்த்தி செய்யாத காரணத்தினால், இந்தப் பாதையூடான ரயில் சேவையை ஒத்தி வைக்கத் தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் புனரமைப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதால் இப் பாதையூடான, ரயில் சேவைகள் இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையான ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் 300 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி இந்த புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
புனரமைப்பின் பிரகாரம், மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்குமென அதிகாரிகள் கூறியிருந்தனர்.
இதன்படி, இன்று முதல் இந்த பாதையை ரயில் போக்குவரத்துக்கு வழங்க ரயில்வே திணைக்களம் தயாராகியிருந்த போதிலும், ரயில்வே சேவைக்கு தேவையான தரத்தை இந்தப் பாதை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த பாதையை பொதுப் போக்குவரத்துக்கு வழங்குவதை ஒத்திவைக்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.