50 கோடி ரூபா கடனை இலங்கை மீளச் செலுத்த இந்தியா சலுகை!; இந்த வாரம் வரவுள்ள அறிவிப்பு
இலங்கை அரசு இந்தியாவுக்கு வரும் வாரத்தில் திருப்பி செலுத்த வேண்டிய சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபா கடனைச் செலுத்த முடியாமல் போய், இலங்கைக்கு மீண்டும் கெட்ட பெயர் வந்து விடாமல் இருப்பதற்காக அந்தக் கடனுக்கு முற்கூட்டியே சலுகைக் காலத்தை மேலதிகமாக அறிவித்து, இலங்கையை மீண்டும் ஒரு தடவை காப்பாற்ற புதுடில்லி முன்வந்திருக்கின்றது எனத் தெரிகின்றது.
இதற்கான் சலுகைக்கால அறிவிப்பு இந்த வாரத்தில் புதுடில்லியிலிருந்து வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் தலைவர்கள் சம்பந்தப்படாமல் நேரடியாக இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டு இந்த இணக்க நிலை எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய – இலங்கை கடன் உடன்படிக்கையின் கீழ் , இந்திய ரிசர்வ் வங்கிக்கு மொத்தக் கடனாக இலங்கை 2.6 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டும்.
இதில் சார்க் ஒப்பந்தம், ஏனைய கடன் வசதிகள் மூலம் செலுத்தப்படும் தொகையை விட 1.7 பில்லியன் டொலர்களை 50 ஆயிரம் கோடி இலங்கை ரூபாவை இலங்கை வரும் வாரத்தில் இந்தியாவுக்குக் கடனாகச் செலுத்த வேண்டும்.
இந்தத் தொகையை இந்த வாரத்துக்குள் இலங்கை வழங்க வேண்டும்.
இன்றைய அரசியல் சூழலில், அரசோடு பேச்சு நடத்த முடியாத நிலையில், இந்தியாவும் இலங்கையும் இராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி, கால நீடிப்புக்கு இணக்கம் கண்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.