லெபனான் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: இக்கட்டான நிலையில் இலங்கையர்கள் – நாடு திரும்புவதில் சிக்கல்
கடும் இராணுவத் தாக்குதலுக்கு உள்ளான லெபனானில் 7,600 புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்களும் 126 இலங்கை ஐ.நா. அமைதி காக்கும் படையினரும் தற்போது இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் லெபனானை விட்டு வெளியேறுவதா அல்லது அங்கேயே தங்குவதா என்பது குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைப் படையினர் நிலைகொண்டுள்ள தெற்கு லெபனானில், ஐ.நா அமைதி காக்கும் நிலைகள் மீது இஸ்ரேல் பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த இரு இலங்கையர்களில் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதுடன், மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில், அமைதி காக்கும் படையினர் பதுங்கு குழிகளில் நீண்ட மணிநேரம் செலவிடுவது உட்பட மிகவும் கடினமான சூழ்நிலையில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் ஏன் லெபனானை விட்டு வெளியேறவில்லை?
இலங்கையின் தூதுவர் கபில ஜயவீரவின் கூற்றுப்படி, “பெரும்பாலான இலங்கையர்கள் தாயகம் திரும்ப விரும்பவில்லை, மாறாக காத்திருக்க முடிவுசெய்துள்ளார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
இங்கே பல தசாப்தங்களாக வாழ்ந்த சிலருக்கு இலங்கையில் உள்ள குடும்பத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை…… சில சமயங்களில் அவர்கள் லெபனானில் குடியேறியவர்கள் மற்றும் அகதிகளுடன் தங்களது குடும்ப வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.
இதனால் லெபனான் அவர்களின் இரண்டாவது தாயகமாக மாறியுள்ளது” என்று தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருந்தும், அவர்கள் அல்லது அவர்களிள் குழந்தைகள் லெபனான் அமைப்பில் சட்டப்பூர்வமாக உள்வாங்கப்பட முடியாது. அவர்கள் பொதுப் பாடசாலை கல்வியைப் பெற முடியாது.
கஃபாலா அமைப்பின் கீழ், அவர்களின் முதலாளியின் விருப்பப்படி மட்டுமே லெபனானில் இருக்க முடியும் என்று தூதர் விளக்கினார்.
இலங்கைத் தூதரகம் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆதரவுடன் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆதரவளித்து வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், புலம்பெயர்ந்தோர் பிரச்சினைகளில் பணியாற்றும் அரசு சாரா நிறுவனமான சமூக மேம்பாட்டு சேவைகளின் இயக்குனர் ஆண்ட்ரூ சாமுவேல், தங்குமிடங்களில் நிலைமை மோசமாகி வருவதாக எச்சரித்துள்ளார்.
குறிப்பாக நோய்கள் வேகமாக பரவுகின்றன, மேலும் லெபனானின் சுகாதார அமைப்பு ஏற்கனவே அழிவின் விளிம்பில் உள்ளது.
லெபனானில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர், பெரும்பாலான வைத்தியசாலைகள் தனியார் மற்றும் விலையுயர்ந்தவையாக இருப்பதால், பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், குறிப்பாக காலாவதியான விசாவில் உள்ளவர்கள், அரசு சாரா அமைப்புகளின் ஆதரவுடன் மட்டுமே சுகாதாரத்தைப் பெற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே, நிலைமை மோசமடைந்தால் இலங்கைக்குத் திரும்புவது குறித்து தொழிலாளர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்ளலாம் என்று ஆண்ட்ரூ சாமுவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடு திரும்புவதற்கு தடையாகியுள்ள ஆவணங்கள்
சில புலம்பெயர்ந்தோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் போலி கடவுச்சீட்டுகள் அல்லது வருகை வீசாக்களில் லெபனானுக்கு வந்ததாக சாமுவேல் கூறியுள்ளார்.
மற்றவர்கள் தங்கள் கடவுச்சீட்டை நாட்டை விட்டு வெளியேறிய முதலாளிகளிடம் கையளித்துள்ளனர். பலர் பல தசாப்தங்களாக லெபனானில் வசித்து வருகின்றனர், பெரும்பாலும் பாலஸ்தீனிய அல்லது சிரிய அகதிகளுடன் குடும்பமாகி குழந்தைகளைப் பெற்றுள்ளனர்.
இரண்டு வெளிநாட்டவர்கள் லெபனானில் திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்பதால், இந்த குழந்தைகள் திருமணத்திற்கு வெளியே பிறந்ததாகக் கருதப்படுவதால், அவர்களின் ஆவணங்களை ஒழுங்காகப் பெறுவது மிகவும் சிக்கலானது.
எவ்வாறாயினும், அவசரநிலை ஏற்பட்டால் அனைத்து இலங்கையர்களின் ஆவணங்கள் குறித்து கருத்திற்கொள்ளாது அவர்களின் பாதுகாப்பிற்கு “அதிக முன்னுரிமை” வழங்கப்படும் என்று கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் சிசிர செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர்களின் ஆவணங்கள் ஒழுங்காக இல்லாவிட்டாலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தற்காலிக பயண ஆவணத்திற்காக தனிநபர்களை பரிந்துரைக்க பெய்ரூட் தூதரகத்திற்கு அதிகாரம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிநபர்கள் தூதரகத்தால் நேர்காணல் செய்யப்படுவார்கள். இதன்போது அவர்கள் இலங்கையில் எங்கிருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் பற்றி விசாரிக்கப்படும்.
இந்தத் தரவு பின்னர் உள்ளூர் பொலிஸ் மற்றும் கிராம சேவகர்கள்களுக்கு வழங்கப்பட்டு சரிபார்க்கப்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களுக்கு நாடு திரும்புவது சவாலாக இருக்கும்
ரீட்மிஷன் கேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனப்படும் இந்த அமைப்பின் மூலம், குழந்தைகள் பிறப்பு பதிவு செய்யப்படாத சிக்கலான நிகழ்வுகளிலும் அதிகாரிகள் “மனிதாபிமான அணுகுமுறையுடன்” செயல்பட முடியும் என்று குடிவரவுத் துறை அதிகாரி ஒருவர் விளக்கினார்.
அவ்வாறான அவசரச் சூழலில் அமைச்சு, தூதரகம், குடிவரவுத் திணைக்களம், கிராம சேவகர்கள், புலனாய்வு அதிகாரிகள், பொலிசார் மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
“அரசு அதிகாரிகளின் ஒப்புதலின் பேரில், முதலில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்து பதிவு செய்யலாம்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களுக்குப் பிறகு தங்கள் நாட்டிற்குத் திரும்பும் இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பல சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக லெபனானில் பெரும்பான்மையான இலங்கைக் குடியேற்றப் பெண்களுக்கு நாடு திரும்புவது சவாலாக இருக்கும் என சாமுவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இலங்கையில் தங்களுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லை என்று பலர் கருதுகின்றனர்.” என அவர் தெரிவித்துள்ளார்.