தேர்தல் களம்

மூக்கை வெட்டினால் உயிரிழக்க நேரிடும்!

இந்த நாட்டில் பலமான எதிர்கட்சியை அமைப்பதை விட பலமான அரசாங்கம் ஒன்றை எமது தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்க வேண்டும் என்பதே தமிழ் முற்போக்கு கூட்டணியின் நோக்கமாக உள்ளது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வட்டவலை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த பிரச்சார கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான எம். உதயகுமார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளர் சோ.ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த வேலுசாமி இராதகிருஷ்ணன்,

நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான தமிழ் மக்கள் வாழுகின்ற ஒரு மாவட்டமாகும் இதில் தொடர்ச்சியாக தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக ஜந்து உறுப்பினர்கள் வெற்றி பெற்று வருகிறோம். இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்தால் மலையகத்தில் உள்ள ஒட்டுமொத்த பிரதிநிதித்துவம் குறைவடையும்.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை தெரிவு செய்கின்ற பொறுப்பு மக்கள் கைகளில் இருக்கிறது. அதன் அடிப்படையில் என்னையும் திகாம்பரம், உதயகுமார் ஆகியோரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

மக்களுக்கு சேவைகளை செய்துவிட்டு மக்கள் மத்தியில் வந்து வாக்கு கேட்கிறோம். புதிதாக வருபவர்கள் மக்கள் மத்தியில் சென்று கூறுகிறார்கள் எமக்கு வாக்களியுங்கள் பிறகு உங்களுக்கு எமது சேவையினை முன்னெடுப்போம் என கூறுகின்றனர். புதிதாக வாக்கு கேட்பவர்களை ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை காண்பது என்பது கடினம் ஏனெனில் மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வரும்போது அவர்கள் வருவதில்லை.

ஆகவே நுவரெலியா மாவட்டத்தில் எம்முடைய பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உங்களுடைய வாக்குகள் உறுதுணையாக இருக்க வேண்டும். தற்போதய அரசாங்கத்திற்கு 48 சதவீதமானோர் வாக்களித்து இருக்கிறார்கள். ஏனைய 52 சதவீதமானோர் அரசாங்கத்திற்கு எதிராகவே தான் செயல்படுகின்றனர்.

அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளை பெற்று 154 உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து 20 ஆவது திருத்தம் கொண்டு வந்தமையினால் இரண்டு வருடங்களில் மக்கள் அவரை இல்லாமல் செய்தனர். மக்களுக்கான சேவையினை அரசியல்வாதிகள் முறையாக செய்யாவிட்டால் மக்களின் மனநிலை மாறும்.

மலையக இளைஞர், யுவதிகள் கொழும்புக்கு வேலைக்கு அமர்த்தப்படும் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி தலவாக்கலையில் தெரிவித்தார். அதற்கு அவரிடம் என்ன தீர்வு உள்ளது. அந்த காலத்தில் செளமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் மூக்கு இருக்கும் வரைக்கும் சலி இருக்குமென கூறுவார். சலியை இல்லாமல் செய்ய மூக்கை வெட்ட வேண்டும். அவ்வாறு மூக்கு வெட்டப்படும் பட்சத்தில் உயிரிழக்க நேரிடும்.

மலையக மக்களின் பிரச்சினை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. பிரச்சினைகளை சுட்டி காட்டுவது இலகு. அதற்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பது கடினம். ஜனநாயக ரீதியாக அவர் ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, மக்கள் பிரச்சினைக்கு தீர்வினை சொல்ல கூடிய ஒரு ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்பதை தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.