ஐயப்பனை தரிசிக்கச் செல்வோர் விபத்தில் உயிரிழந்தால் 5 இலட்சம்!
ஐப்பசி மாத பூஜைகளின் நிமித்தம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை முதல் வழக்கமான பூஜைகள் ஆரம்பித்தன.
5 நாட்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளின் பின்னர் நாளை திங்கட்கிழமை இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
இதுதொடர்பில் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது,
“நடப்பு மண்டல, மகர விளக்கு பருவ காலத்தையொட்டி இணைய வழி மூலமாக முன்பதிவு தொடங்கியுள்ளது.
நாள்தோறும் 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படுகிறது.
உடனடி தரிசன முன்பதிவின் அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இந்த வருடம் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
ஐயப்பனை தரிசிக்க வருவோர் ஏதேனும் விபத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
விபத்தில் காயமடைந்தால் அவர்களுக்கான செலவுத்தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இத் திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் தினசரி கூலி தொழிலாளர்கள் அனைவரும் பயன்பெறுவர்” இவ்வாறு கூறினார்.