ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவா?
சர்ச்சைக்குரிய வாகன மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக பிரதான சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேகநபரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுக்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக செயல்பட்டு வந்தாலும் அவர் தொடர்பில் எந்தவொரு தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.
சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தங்கியிருந்த வீடு மற்றும் அவர் தங்கியிருக்கும் ஏனைய இடங்கள் அனைத்திலும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாகன உதிரி பாகங்களை இரகசியமாக இறக்குமதி செய்து அவற்றை பயன்படுத்தி பி. எம்.டபிள்யூ. கார் ஒன்றை தயாரித்துப் பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த கார் பதிவு செய்யப்படவில்லை என்றும், அது போலி எண் மூலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கார் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வாகன தரிப்பிடத்தில் பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய பொலிஸார் மூலம் கைப்பற்றப்பட்டது.
‘டாக்சி அபே’ எனப்படும் காமினி அபேரத்ன ஹில்டன் ஹோட்டலுக்கு முன்பாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட காரை கைவிட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரில் இருந்து ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு சொந்தமான ஆவணங்களும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஹில்டன் ஹோட்டலின் வாகனம் நிறுத்துமிடத்தில், ‘டபிள்யூபி சி 24-0430’ என்ற எண் கொண்ட கறுப்பு நிற பி. எம்.டபிள்யூ. கார் சந்தேகத்திற்கிடமான முறையில் தரித்து நிற்பதாக கிடைத்த தகவலின்படி, கடந்த 10ஆம் திகதி முதல் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகளின் பணிப்பாளராக பணியாற்றிய காமினி அபேரத்ன, ஹில்டன் ஹோட்டலில் சில காலமாக தங்கியிருந்ததாகவும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இந்த கார் ஹோட்டலின் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் காமினி அபேரத்ன வாக்குமூலம் வழங்கவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வாக்குமூலம் வழங்க வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிவித்த போதிலும், சுகயீனமுற்றிருப்பதால் பின்னர் வந்து வாக்குமூலம் வழங்குவதாக முன்னாள் அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சருக்கு எதிரான பயணத்தடையை பெற்றுக்கொள்ளவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே, தற்போது முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.