கட்டுரைகள்

பொது தேர்தலில் இருந்து பின்வாங்கும் முன்னாள் எம்.பி.க்களும்… இழுபறிப்படும் கட்சித் தலைமைகளும்… -நஜீப் பின் கபூர்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது.அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை.ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.தமது தனிப்பட்ட வெற்றி இதில் இருப்பதால் அவர்கள் அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். இந்தத் தேர்தலில் தனி நபர்களின் வெற்றி மற்றும் தேசிய மற்றும் பிராந்திய இன ரீதியான கட்சிகளின் செல்வாக்கு மேலோங்கி இருப்பதால் ஏதோ ஒருவகையில் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலையொன்றும் இருப்பதை நாம் மறுக்க முடியாது.

அந்தப் போட்டி ஆளும் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள், பிரதான எதிரணிக்கு எத்தனை ஆசனங்கள், ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாம் இடத்துக்கு வந்த ரணில் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள்? நான்காம் இடத்துக்கு வந்த மொட்டு அல்லது நாமல் தரப்புக்கு எத்தனை ஆசனங்கள்? மற்றும் உதிரிக் கட்சிகள், சுயேட்சைகள் என்றும் பல வரும். தேர்தல் முடிவுகளில் இவர்களுக்கான ஆசனங்கள் என்ன என்று தெரியவரும்.

வெள்ளிகிழமை நண்பகலுடன் முற்றுப் பெற்ற பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தொடர்பில் பரபரப்பான செய்திகளும் நகைச்சுவையான தகவல்களும் தமக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்பி இருந்து கடைசி நேரத்தில் ஏமாறியவர்களும் அவர்களது ஒப்பாரிகளும் என்று நிறையவே கதைகள் இருக்கின்றன. அதுபற்றியும் நாம் இங்கு பேச வர விரும்பவில்லை. அவை ஒரு பக்கம் இருக்க, இப்போது தேர்தல் களத்தில் அனுர தலைமையிலான என்.பி.பி. அணி பலமான நிலையில் இருக்கின்ற போது அடுத்த பிரதான கட்சியாக இருப்பது ஐக்கிய மக்கள் சக்தி.நமது பார்வையில் அடுத்து அதிக ஆசனங்களைப் பெறப் போவது வடக்கு, கிழக்கில் இருக்கின்ற தமிழ் தரப்பினராக இருப்பார்கள். ஆனாலும் அவர்களது பிரதிநிதித்துவம் கூட சிதறிப்போய் அமையும். ரணில் மற்றும் நாமல் தரப்பினர் மேலும் ஒரு படி கீழிறங்கி நான்காம் , ஐந்தாம் இடத்துக்குத்தான் இந்த முறை வருவார்கள்.

இப்போது நாம் கட்சிகளின் செல்வாக்கு மற்றும் வியூகங்கள் பற்றி பார்ப்போம். ஜனாதிபதி அனுரவை தலைமையாகக் கொண்ட கட்சி ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் என்பதனை மறுக்க முடியாது. அதனை அவர்களது எதிரிகள் கூட பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள். அதேநேரம், என்.பி.பி. கட்சியில் இருந்து போட்டிக்கு வருகின்ற பெரும்பாலானவர்களை பொது மக்களுக்குத் தெரியாது என்று ஒரு பலமான குற்றச்சாட்டு எதிரணியினரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதில் உண்மைகள் இருந்தாலும் என்.பி.பி. தமது பிரதிநிதித்துவங்களை வென்றெடுப்பதற்காக வியூகங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கின்றது என்பதனை தேர்தல் முடிவுகளில் இவர்கள் கண்டு கொள்ள முடியும்.

1994ல் சந்திரிக்கா அம்மையார் காலத்தில் ஜே.வி.பி. பட்டியலில் போட்டிக்கு வந்தவர்கள் யார் என்பது அப்போது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அந்தக் கூட்டணியில் எல்லா மாவட்டங்களிலும் அவர்கள்தான் முதலாம் இடத்துக்கு வந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தார்கள் என்பதனையும் இந்த விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்.பி.பி. வேட்பாளர் யார் என்று தெரியாமல் இருப்பது பற்றிய எதிரணியினர் விமர்சனங்களை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அடுத்து இன்று நாட்டில் இரண்டாவது பெரிய அரசியல் இயக்கமாக இருக்கின்ற சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதனோடு இருக்கின்ற கூட்டுக் கட்சியினரும்தான். ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்கள் வெற்றி பெற்றாலும் தோற்றுப் போனாலும் அங்கு மோதல்கள் இருக்கின்றன என்று நாம் முன்பே சொல்லி இருந்தோம். இப்போது தெருச்சண்டை போல அது அங்கு நடந்து கொண்டிருக்கின்றது. ஹர்ஷ டி சில்வா, திஸ்ஸ, சுஜீவ சேமசிங்ஹ, ஹிருணிக்கா, கிரியெல்ல என்று நிறையப் பேர் இப்போது முரண்பாட்டில் இருக்கின்றார்கள்.

அது எப்படி இருந்தாலும் தேர்தலில் என்.பி.பி.க்கு இன்று சவால் விடுக்கக்கூடிய மிகப் பெரிய கட்சி இது என்பதால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த சஜித் தரப்பு கட்சியுடன் இணைய ஒரு முயற்சியை மேற்கொண்டார்கள். இதற்கு அந்தக் கட்சித் தலைவர் ரணிலின் சம்மதமும் அனுசரணையும் இருந்தது. அதோடு இதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்யும் ஆப்பையும் தனது கரங்களில் வைத்துக் கொண்டுதான் ரணில் தனது ஆட்களை சஜித்திடம் அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால் ரணிலின் நயவஞ்சக அரசியலை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்ற சஜித் சுவரில் எறிந்த பந்து போல ரணிலின் இந்த முயற்சிக்கு பதில் கொடுத்திருந்தார். முதலில் ஐ.தே.க.வில் இருந்து ரணிலை வெளியேற்றிவிட்டு வாருங்கள் என்பதில் சஜித் உறுதியாக இருந்தார். அவரது அந்த நிலைப்பாட்டில் தனிப்பட்ட ரீதியில் நமக்கும் உடன்பாடுகள் இருக்கின்றன. ரணில் தரப்பில் அவருக்கு இதுவரை நெருக்கமாக இருந்தவர்கள் இந்தத் தேர்தலில் நொண்டிக் காரணங்களைச் சொல்லி தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கி இருக்கின்றார்கள்.

இவர்களில் முக்கியமானவர்கள் அவரது நெருங்கிய உறவினரும் அரசியல் வாரிசுமான ருவன் விஜேவர்தன முக்கியமானவர். தோல்வியைத் தழுவுகின்ற ஒரு தேர்தலில் தான் போட்டியிட விரும்பவில்லை என்று அவர் ரணில் முகத்திற்கே கூறி விட்டார். ஆனாலும் அவரை போட்டியிடுமாறு ரணில் கடைசி வரை கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தார்.

அடுத்து சர்ச்சைக்குரிய அவரது ஆலோசகர் ஆசு மாரசிங்ஹ. அவர் சஜித் அணியில் இணைந்து போட்டியிட வேண்டும் அல்லது யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கின்ற மொட்டுக் கட்சிக்காரர்களுடன் இணைந்து சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதால் தான் இந்தத் தேர்தலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக ஆசு மாரசிங்ஹவும் அறிவித்திருக்கின்றார்.

இவை எல்லாம் நொண்டிக்காரணங்கள் என்பதுதான் எமது கணக்கு. எதில் போட்டியிட்டாலும் கரை சேர முடியாது என்பதால்தான் இவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இது தவிர இன்னும் பெரும் எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதை தாமாகவே தவிர்த்திருக்கின்றனர். அதற்கு தமக்கு வாய்ப்பில்லை என்பதனை அவர்கள் அறிந்து வைத்திருப்பதுதான் முக்கிய காரணம்.

கடந்த தேர்தலில் சஜித் மற்றும் ரணிலுக்கு கிடைத்த வாக்குகளில் இருந்து டசன் கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை இருப்பதால் அதனை நம்பி பலர் இந்த தேர்தலில் குதித்திருக்கின்றார்கள். அவர்களின் நம்பிக்கையில் உண்மைகள் இருந்தாலும் அவர்களின் எத்தனை பேருக்குத்தான் வெற்றி பெற்று நாடாளுமன்றம் வர முடியும் என்று தெரியாது.

இந்தத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இருக்கும் அரசியல் கட்சிகள் மத்தியில் என்றும் இல்லாத அளவில் ஒரு குழப்ப நிலை காணப்படுகின்றன. அதனால் அந்தக் கட்சிகள் மீது மக்கள் மிகுந்த வெறுப்பில் இருக்கின்றார்கள். மூத்த தலைவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் தெற்கு அரசியல்வாதிகளின் அடாவடித்தனங்களுக்குமிடையில் எந்த வித்தியாசங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. இதன் பிரதிபலிப்புக்களை அங்கு வரும் தேர்தல் முடிவுகளில் நாம் பார்க்க முடியும். குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செயல்பாடுகள் சுமந்திரன் மற்றும் விக்னேஸ்வரனின் நடவடிக்கைகள் அங்கு கடும் விமர்சனத்துக்கு இலக்காகி இருக்கின்றது.

அதேபோன்று தனித்துவம் பேசுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கும் இந்தமுறை தேர்தலில் கடும் போட்டி நிலை இருப்பது தெரிகின்றது. கண்டியில் போட்டிக்கு வரும் ஒரு முஸ்லிம் தலைவர் இந்த முறை தனக்குக் கடும் நெருக்கடி நிலை இருப்பதனை எம்முடன் நடந்த ஒரு தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருந்தார். அடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி வகிக்கின்ற அமீர் அலி இளைஞர்களிடம் தற்போது ஏற்பட்டிருக்கின்ற என்.பி.பி. மோகம் தனித்துவ சமூக அரசியலுக்கு மிகவும் ஆபத்தானது. இதனால் எமது பிரதிநிதித்துவத்துக்கு ஆபத்து. இளைஞர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக்கூடாது. அத்துடன் அவர்களுக்கு நாம் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாய்ப்புக் கொடுப்போம். அவர்கள் இந்தத் தேர்தலில் சமூக நலன் கருதி எமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அலி கேட்டிருக்கின்றார்.

சமூகத்துக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களுக்கு மு.கா. இந்தத் தேர்தலில் வேட்புமனு கொடுக்க கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் கேட்டிருக்கின்றார். அப்படி ஹக்கீம் செய்வாராக இருந்தால் அவருடன் ஒரு இணக்க அரசியலுக்குத் தன்னால் வர முடியும் என்று அவர் ஹக்கீமுக்கு பகிரங்கமான ஓர் அழைப்பைக் கொடுத்திருக்கின்றார். ஆனால் தலைவரின் வேண்டுகோளுக்காகத்தான் நாம் அன்று அப்படி நடந்து கொண்டோம் என்பது கை தூக்கியவர்களின் வாக்குமூலமாக இருக்கின்றது. எனவே ரிசாட் விடுக்கும் இந்த அழைப்பு எந்தவகையில் சாத்தியம் என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

கட்சிகளில் வேட்புமனு கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தனது கட்சியில் வேட்புமனு தரமுடியும் என்று சீலரத்ன தேரர் பகிரங்க அழைப்பு விடுத்திருந்ததும் தெரிந்ததே. மொட்டுக் கட்சியின் முக்கிய செயல்பாட்டாளர்களாக இருந்த பலர் இன்று திலித் ஜயவீர அணியில் போய் இணைந்திருக்கின்றார்கள். அதில் வரும் வாக்குகளை வைத்து தேசியப் பட்டியல் உறுப்புரிமையை பெற்று நாடாளுமன்றம் போகலாம் என்று அங்குள்ள தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் போலும்.

இப்படியாக 2024ல் நாடாளுமன்றம் வரும் புதிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வயதுக்காரர்களாகவோ அல்லது இளைஞர்களாகவோ இருப்பார்கள்.அதிலும் அதிகமானவர்கள் என்.பி.பி. தரப்பில் இருந்துதான் பெரும்பாலானோர் வருவார்கள். வயதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முறை மண்கௌவ்வ அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அவர்களில் ஒரு சிலர் கட்சிகளின் தேசிய பட்டியலில்தான் வர எதிர்பார்க்கின்றார்கள் என்றும் தெரிகின்றது. பந்துல குணவர்தன இதன் பின்னர் தான் தேர்தலுக்கு வரப்போவதில்லை சினிமாத் துறைக்குப் போக இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.