“கனகர் கிராமம்”…. தொடர் நாவல் அங்கம் – 51 …. செங்கதிரோன்
அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
பரந்தன் இராஜன் குழுவினருக்கு வழிகாட்டிச் சென்ற மரியசிங்கம், நல்லரட்ணம், கோகுலன் ஆகியோர் அவர்களை வாழைச்சேனை ஊருக்குள்ளும் அதன் அயல் கிராமங்களான பேத்தாழை, கல்குடா கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று ஊரவர்களை அறிமுகம் செய்து சூறாவளி நிவாரண வேலைகளில் அவர்கள் ஈடுபடுவதற்கு வேண்டிய சகல உதவிகளையும் ஒத்தாசைகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.
அடைபட்டுக் கிடந்த உள்ளுர் வீதிகளைக் ‘கிளியர்’ பண்ணுதல் – வீடு வளவுகளைத் துப்பரவு செய்தல் – சேதமடைந்த வீட்டுக் கூரைகளைத் திருத்துதல் – குடிநீர்க் கிணறுகளைத் துப்பரவு செய்தல் என பலதரப்பட்ட வேலைகளில் தொண்டர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் இவர்களும் முழுநாளும் நின்று நிவாரண வேலைகளுக்காக ஒத்தாசை புரிந்து பின்னர் மாலைக் கருக்கலில்தான் மட்டக்களப்பு திரும்பினர்.
மட்டக்களப்பையடைந்ததும் பரந்தன் ராஜன் குழுவினர் இடையில் இவர்களை விட்டுப் பிரிந்து அவர்கள் தங்கியிருக்கும் செல்வநாயகம் மண்டபத்திற்குச் சென்றுவிட்டனர்.
செல்வநாயகம் மண்டபம் மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர் இராஜன் செல்வநாயகத்திற்குச் சொந்தமாயும் அவருடைய முகாமைத்துவத்தின கீழும் இருந்தது. ஆரம்பத்தில் பரந்தன இராஜன் குழுவினர் மட்டக்களப்பு அரசடி மகா வித்தியாலயத்தில்தான் தங்கியிருந்தனர். அவர்கள் அங்கிருந்து அதிகாரிகளினால் அப்புறப்படுத்தப்பட்டுத்தான் செல்வநாயகம் மண்டபத்திற்கு மாறியிருந்தனர்.
மரியசிங்கமும் நல்லரட்ணமும் கோகுலனும் மட்டக்களப்பில் மரியசிங்கம் வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் ‘கேற்’ றடியில் ஐந்தாறு இளைஞர்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
மூவரும் காரை விட்டிறங்கியதும் மரியசிங்கத்தை நெருங்கி வந்த இளைஞன் ஒருவன் கைகூப்பி மரியாதையாக “வணக்கம் ஜயா!” என்றான். வணக்கம் கூறிய இளைஞனின் பின்னால் மற்ற இளைஞர்கள் அணிவகுத்தனர்.
மரியசிங்கமும் பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு “யார் நீங்கள் தம்பிமாரே?” என்றார்.
“நாங்கள் ஜயா! யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருக்கிறோம். எங்களில் சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாகவும் உள்ளோம். சூறாவளி நிவாரண வேலைகளுக்காகவும் பாதிக்கப்பட்ட க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தி உதவும் உத்தேசத்துடனும் தொண்டர்களுடன் வந்திருக்கிறோம். எங்களுக்கு வழிகாட்டி உதவ வேண்டும். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அதனால்தான் உங்களைத் தேடி வந்தோம்” என்றான் வணக்கம் கூறிய இளைஞன். தனது பெயர் குணசேகரம் என்றும் குறிப்பிட்டான். குணசேகரம் என்ற பெயர் ஏற்கெனவே கேள்விப்பட்ட பெயராகவே கோகுலனுக்கு இருந்தது. கூட நின்ற மற்றையோரை பத்மநாபா, முத்துக்குமார், தவராசா, தங்க மகேந்திரன், ராஜகாரியர், மனோகரன் எனப் பெயர்களைச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தான்.
அவர்களை உடனே உள்ளே அழைத்துச் சென்ற மரியசிங்கம், அவர்கள் எல்லோரையும் வரவேற்பு மண்டபத்தில் அமரச் செய்து அவர்களுடன் உரையாடி அவர்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டதுடன் மறுநாள் மட்டக்களப்பு தாண்டவன்வெளிப் பகுதியிலும் அதற்கு அடுத்து வரும் நாட்களில் வடமுனை, புணானை போன்ற இடங்களிலும் நிவரண வேலைகளை மேற்கொள்வது என்ற திட்டமிடலுடன் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
1970 இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக அனுமதிக்கு அறிமுகப்படுத்திய தரப்படுத்தல்-1972 இல் நிறைவேற்றப்பட்ட புதிய குடியரசு அரசியலமைப்பு – 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தால் ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்தமை போன்ற நிகழ்வுகளால், பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டிருந்த மிதவாதத் தமிழ் அரசியல் தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்த தமிழ் இளைஞர்கள் தீவிரவாதச் சிந்தனையுடன் சத்தியசீலன் தலைமையிலான தமிழ் மாணவர் பேரவை- புஸ்பராசா தலைமையிலான தமிழ் இளைஞர் பேரவை – ஈழ மாணவர் பொது மன்றம் போன்ற அமைப்புக்களைத் தோற்றுவித்தனர். தமிழ் இளைஞர் பேரவையைத் தனது செல்வாக்கிற்குள்ளும் கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வருவதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கம் முற்பட்டபோது எழுந்த உள் முரண்பாடுகள் காரணமாகத் தமிழ் இளைஞர் பேரவையிலிருந்து பிரிந்து வந்த அணியினரால் ‘தமிழீழ விடுதலை இயக்கம்’ உருவாக்கப்பட்டது. பின்னர் தமிழீழ விடுதலை இயக்கத்தினுள் எழுந்த தத்துவார்த்த முரண்பாடுகளால் மீண்டும் அதிலிருந்து பிரிந்த அணியினரால் இடதுசாரித்துவம் சார்ந்த ஈரோஸ் இயக்கம் உருவானது. பழைய தமிழீழ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் புதிய ‘ஈரோஸ்’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் ஈழ மாணவர் பொது மன்றத்தினருமே புரிந்துணர்வுடன் இணைந்து இப்போது சூறாவளி நிவாரண வேலைகளை மேற்கொள்வதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்கு வந்து மரியசிங்கம் ‘என்ஜனியர்’ ஐச் சந்தித்திருந்தனர்.
மட்டக்களப்புக்கு வந்த ஆரம்பத்தில் இந்த ‘ஈரோஸ்’ குழுவினரும் பரந்தன் ராஜன் குழுவினரும் மட்டக்களப்பு அரசடி மகா வித்தியாலயத்தில் ஒன்றாகவே தங்கியிருந்தனர். அங்கு வைத்து இரு குழுவினரிடையேயும் சில முரண்பாடுகள் தலைதூக்கின. எனினும் பெரிதாக வெடிக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வந்து மட்டக்களப்பில் அரசடி மகா வித்தியாலயத்தில் தங்கியிருந்த குழுவினரை அதிகாரிகள் வெளியேற்றியபோது பரந்தன் ராஜன் குழுவினர் செல்வநாயகம் மண்டபத்திற்குச் செல்ல, ‘ஈரோஸ்’ குழுவினர் மட்டக்களப்பு மத்திய கல்லூரிக்குச் சென்று தங்கினர். மத்திய கல்லூரிக்குச் சென்று தங்கிய ‘ஈரோஸ்’ குழுவினருக்குக் கல்லூரி அதிபர் பிரின்ஸ் காசிநாதர் சகல ஒத்தாசைகளையும் வழங்கி உதவினார். ஆனாலும் சில நாட்களின் பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவைக் கட்டிடத் தொகுதிக்கு இடம் மாறினர். இங்கிருந்துதான் இப்போது மரியசிங்கம் ‘என்ஜினியர்’ ஐச் சந்திக்க வந்திருந்தனர்.
இளைஞர் குழு புறப்பட்டுச் சென்றதும் மரியசிங்கம், நல்லரட்ணம், கோகுலன் மூவரும் தாகம் அடங்கத் தண்ணீர் பருகினர். காலையில் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை சென்று திரும்பும்வரை அவர்கள் மூவரும் எதுவுமே அருந்தியிருக்கவில்லை.
தாகத்தைத் தீர்த்துக் கொண்டதும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலை ஆரம்பித்தனர். நல்லரட்ணம்தான் உரையாடலை ஆரம்பித்தார்.
“சூறாவளி நிவாரண வேலைகள் ஒருபுறமிருக்கட்டும் அதப்பற்றியும் புறகு தொடர்ந்து பேசுவம். கோகுலன்! உங்களிடம் ஒரு முக்கியமான விசயத்தைச் சொல்லவேணும்.
நாங்க கொஞ்சப்பேர் – கொஞ்சப்பேரெண்டா பேராசிரியர் பெனடிக்ற், அமெரிக்கா – கணேசலிங்கம் எம்பி – காசி ஆனந்தன் – வாஸ் மாஸ்ரர் – சேர் வி சோமநாதர் – விஸ்வலிங்கம் – ஆலாலசுந்தரம் – அண்ணன் மரியசிங்கம் – நான் எல்லாரும் சேர்ந்து ‘கிழக்கு மாகாண சமூக பொருளாதார அபிவிருத்தி சங்கம்’ ( Eastern Province Socio Economic Development Association) எண்ட அமைப்ப உருவாக்கியிருக்கம். அத வடிவாக் கட்டியெழுப்பி எதிர்காலத்தில கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குச் சேவை செய்ய வேணும் என்றிரதான் எங்கட நோக்கம்.
முதல் வேலையாகச் சூறாவளி நிவாரண வேலைகளில் மட்டக்களப்புக் கச்சேரி நிருவாகத்திற்கு உதவுவதற்கெண்டு வாஸ் மாஸ்ரர் – வணசிங்க மாஸ்ரர் – ‘சேர்ஜன்’ சுப்பிரமணியம் – டொக்ரர் தியாகராசா – மரியசிங்கம் அண்ணன் எங்களோடு இன்னும் சிலர் அடங்கிய பத்துபேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவொண்டை ஏற்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கிறம். எதிர்காலத்தில கோகுலன்! நீங்களும் உங்களப் போன்றவர்களும் எங்கட அமைப்பில இணைந்து கொள்ள வேணும்” என்றார்.
“ஓம் உங்களப் போன்ற ஆட்களோட சேந்து மக்களுக்கச் சேவ செய்யிறது எனக்கு விருப்பம்தான்.
1970 களில மரியசிங்கம் சேர், வாஸ் மாஸ்ரர், டொக்ரர் பஞ்சாட்சரம் ஆக்கள் சேர்ந்து ABC- Aid Batticloa Club – என்றதொரு அமைப்பை உருவாக்கினது எனக்கு ஞாபகமிருக்கு. அது புறகு தொடர்ந்து இயங்கல்ல.
அதுபோலத்தான் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவில பெரிய கணபதிப்பிள்ளை வாத்தியார் என்றொருவர் – அவர் எனக்கு மாமா – தலைமையில்’ அம்பாறை மாவட்ட தமிழர் மகா சபை’ எண்ட அமைப்பு இரிந்த.
எஸ்.ஜே.வி. செல்நாயகம் உட்பட தமிழரசுக் கட்சித் தலைவர்கள் புறகு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் வரும்போது அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சபையினர் அவங்களச் சந்தித்து அம்பாறை மாவட்டத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக பொருளாதார அரசியல் பிரசசினைகளச் சொல்லுவாங்க. அனேகமா அந்தச் சந்திப்பு காரைதீவில பெரிய கணபதிப்பிள்ள வாத்தியார் வீட்டிலதான் நடக்கும். நானும் அந்தக் கூட்டங்களுக்குப் போயிரிக்கன். பிரச்சினைகளத் தலைவர்மார் கவனமாக் காது குடுத்துக் கேட்டிற்றுப் போவாங்க. அவ்வளவுதான். அதுக்குப் புறகு ஒண்டும் நடக்கிறதில்ல.
அது மாதிரி இல்லாம கட்சி அரசியலுக்கு அப்பால சிந்திச்சி வேல செய்யிறமாதிரி உங்கட அமைப்பப் பலமாகக் கட்டியெழுப்ப வேணும்.
கனகரட்ணம் எம்.பி. யா வந்தாப் புறகு என்ர முயற்சியால பொத்துவில் இலங்கை வங்கி முகாமையாளர் ஜெகநாதன் – திருக்கோவில் மெதடிஸ்த தேவாலயப் போதகர் கருணராஜ் – திருக்கோவில் கத்தோலிக்க தேவாலய ‘பாதர்’ சொய்சா சேந்து ‘பொத்துவில் சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகம்’ என்றிர பேரில ஒரு அமைப்ப உருவாக்கி இயங்கிக் கொண்டிருக்கிறம். எதிர்காலத்தில நாங்களும் உங்கட அமைப்போட சேந்து இயங்கலாம்” என்று கோகுலன் சாதகமாகப் பதிலளித்தான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மரியசிங்கம் சொன்னார், “தம்பிமாரே! கிழக்கு மாகாணத்துக்கு நாம தனித்துவமா நிண்டு என்ன நல்லது செய்ய வெளிக்கிட்டாலும் இந்த தமிழரசுக் கட்சிகாரனும் கூட்டணிக்காரனும் குழப்புவானுகள்” என்று.
”அதெண்டா உண்மதான். கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் எப்பவும் வடபகுதி அரசியல்வாதிகளுக்குக் கோயில்மாடு மாதிரி தலையாட்டித்து அவங்க அங்கிரிந்து எடுக்கிற தீர்மானங்கள ஏன்? எதுக்கு எண்டு கேக்காமக் கண்ணமூடி ஆதரிச்சித்து இரிக்கவேணுமென்றிரதுதான் அவங்கட எதிர்பார்ப்பு. கிழக்கு மாகாணத் தமிழரிர முன்னேற்றத்தில உண்மையான அக்கற அவங்களுக்கு இல்ல. தங்கட கட்சிக்குக் கிழக்கு மாகாணத்தில இரிந்து எம்பி.மார் வேணும். அவ்வளவுதான். இல்லாட்டிக் கனகரட்ணத்தச் சுட்டிரிப்பானுகளா?
இன்னொரு விசயத்தையும் சொல்லிறன் கேளுங்க. புலிகள் இயக்கம் ஆரம்பிச்ச காலத்தில மட்டக்களப்பில இரிந்து மைக்கல் என்றிர இளைஞனும் அதில சேர்ந்து யாழ்ப்பாணம் போனவன். புலிகள் இயக்கம் அவனிட்டத் துப்பாக்கியொண்டக் குடுத்து அப்ப மட்டக்களப்புத் தொகுதியில இரண்டாவது எம்.பி யா இரிந்த ராஜன் செல்வநாயகத்தச் சுடச் சொல்லி அவன மட்டக்களப்புக்கு அனுப்பின.
மட்டக்களப்புக்கு வந்தொன்ன மைக்கலிர மனம் மாறித்து. மட்டக்களப்பு மக்களுக்கு எம்.பி யா இரிந்து சேவ செய்யிற ராஜன் செல்வநாயகத்த ஏன் வீணாச் சுடணும் எண்டும் அதனால என்ன பிரயோசனம் எண்டும் யோசிச்சுச் சுடாம விட்டுத்தான். அதால யாழ்ப்பாணத்துக்கு அவனத் திருப்பிக் கூப்பிட்டுப் புலிகள் இயக்கம் அவன அங்க வச்சிச் சுட்டுச்சாக வைச்சிப் போட்டானுகள்” என்றான் கோகுலன்.
இதைக் கேட்ட நல்லரெட்ணத்தினதும் மரியசிங்கத்தினதும் முகத்தில் ஆத்திரத்தின் ரேகைகள் படர்ந்தன.
“ராஜன் செல்வநாயகம் இராசதுரயோடயும் காசி ஆனந்தனோடயும், முண்டித்துச் சண்டித்தனம் பண்ணிற்று ‘நட்டாமுட்டி’ அரசியல்தான் செய்த. அதுவேற. அத ஏத்துக்கொள்ளயும் ஏலாது. ஆனா இருபது வருசத்துக்கும் மேலாக எம். பி யா இரிந்துவாற இராசதுரயால கட்டேலாத வவுணதீவுப் பாலத்த அவன் எழுபதாம் ஆண்டிலிரிந்து எழுபத்தேழாம் ஆண்டு வரைக்கும் எம்.பி யா இரிந்த ஏழு வருசத்துக்குள்ள கட்டி முடிச்சானா இல்லயா?” என்றார் நல்லரட்ணம்.
“ஓம் அதுதான். என்னப்பொறுத்தவர உமாமகேஸ்வரனும் வாமதேவனும் வந்து கனகரட்ணத்தச் சுட்டதயும் ராஜன் செல்வநாயகத்தச் சுடச்சொல்லி மைக்கல அனுப்பினதயும் யாழ்மேலாதிக்கத்திர அடையாளமாகத்தான் நான் பாக்கிறன்” என்றான் கோகுலன்.
“நீ சொல்லிறது நூறு வீதம் சரி தம்பி. யாழ்ப்பாணத்தாக்கள் கிழக்கு மாகாணத் தமிழர்களக் கொஞ்சம் இளக்காரமாகத்தான் பாக்கிற. அங்கிரிந்து மட்டக்களப்புக்கு அரசாங்க வேலைக்கு வந்தவர்களெண்டாலும் சரிதான் வியாபாரத்துக்கு வந்தவர்களெண்டாலும் சரிதான் மட்டக்களப்பார மதிக்கிறல்ல. ஆனா மட்டக்களப்பாக்கள் அப்பிடியல்ல. மனதில வஞ்சகமில்லாம அவங்கள நல்லா ஆதரிச்சி விருந்தோம்பி உபசரிச்சி நல்லாத்தான் நடத்திற. மட்டக்களப்பாரிர விருந்தோம்பலிலயும் சகோதரத்துவ மனப்போக்கிலயும் மயங்கி யாழ்ப்பாணத்தாக்கள் மட்டக்களப்புப் பொம்பிளயளக் கலியாணம் கட்டிற்றாங்கெண்டா மட்டக்களப்பாக்கள் மந்திரத்தால அவங்களப் பாயோட ஒட்டவச்சிப் போட்டாங்க என்பாங்க” என்றார் மரியசிங்கம்.
“யாழ்ப்பாணத்தாக்கள் மட்டக்களப்புத் தமிழ் ஆக்கள இளக்காரமாகப் பாக்கிறதெண்டது உண்மதான். அவங்க மட்டக்களப்பாக்களப் பாத்துக் கதைக்கக்கொள்ளயும் ‘நீங்க மட்டக்களப்பாரே……. ஏ…… ஏ….-‘நீங்க மட்டக்களப்பே…..ஏ…..ஏ’ எண்டு அவங்கட தொனியிலேயே கொஞ்சம் கீழவச்சித்தான் கதைப்பாங்க” என்றான் கோகுலன்.
“தம்பி! யாழ்ப்பாணத்தாக்கள் நம்மள எப்படி மரியாதையில்லாம பாரபட்சமா நடத்திறவங்க என்றிரத நேரடியா அனுபவிச்ச நான் தம்பி!. அதிர வலி எனக்குத் தெரியும்.
நான் நீர்ப்பாசனத்திணைக்களத்தில கல்முனைப் பிரிவுக்குக் கீழ அந்த நாளயில 1960 களில பொத்துவில ரி.ஏ.ஆக வேல பார்த்த. கோகுலன் நீ அப்ப பொத்துவில் மெதடிஸ்தமிசன் பள்ளிக்கூடத்தில படிச்சுக் கொண்டிருந்திருப்பாய்.
ஒருநாள் நான் வேலையாட்களோட போய், தாண்டியடியிலிருந்து வயல்ப் பக்கம் போற காட்டுப்பாத உனக்குத் தெரியுந்தானே, அங்க அளக்கிற வேலையொண்டுக்குப் போய் அண்டு எனக்கு வாகனம் கிடைக்கல்ல – வேலய முடிச்சித்து நடு மத்தியானம் சரியான வெய்யில். அளக்கக் கொண்டுபோன கண்ணாடிப் பெட்டிசாமான்களோட வேலையாட்களுடன் வேர்த்து விறுவிறுத்து நடையில காட்டுப் பாதையிலிருந்து ‘மெயின்’ றோட்டுக்கு ஏறிரம். இனி ‘பஸ்’ சில பொத்துவிலுக்குப் போகணும். அப்ப கல்முன நீர்ப்பாசனப் பொறியியிலாளராக – எனக்கு மேலதிகாரியாக இரிந்தவர் ஒரு யாழ்ப்பாணத்தாள்.
நான் அளக்கப்போய்த்து வேல முடிஞ்சி வாறன் என்றிரதும் நானும் என்னோட வந்த இரண்டு மூண்டு வேலையாட்களும் பொத்துவிலுக்குத்தான் போகணுமென்றிரதும் அவருக்கு நல்லாத் தெரியும். அவர் கல்முனையிலிருந்து பொத்துவிலுக்குக் காரில போய்க் கொண்டிருந்தார். தாண்டியடியில எங்களக் கண்டித்துக் காரச் ‘சுலோ’ பண்ணினார்.
கார நிற்பாட்டல்ல. கார மெதுவாக ஓட்டிக் கொண்டேயிரிந்தார். நான் றோட்டு ஓரத்தால ஓடி ஓடி அளக்கப்போன வேல விபரங்களச் சொல்லிறன். நான் சொன்ன விளக்கங்கள ஆ! ஆ! என்று தலையாட்டிக் கேட்டு முடிஞ்சொண்ண கார வேகமாகச் செலுத்திற்றுப் போய்ற்றார் தம்பி. எனக்கு எப்படியிருந்திருக்கும் எண்டு யோசிச்சுப்பார். காரில அவர் மட்டும்தான். முன்சீட்டிலயும் பின் சீட்டிலயும் இடமும் இரிந்த. எங்கள வடிவாப் பொத்துவிலுக்கு ஏத்தித்துப் போயிரிக்கலாம். அவரிட மனம் அதுக்கு இடம் கொடுக்கல்ல. அண்டு நான் உணர்ந்தன் தம்பி யாழ்ப்பாணத்தான் எப்பிடிப்பட்டவன் எண்டு.
அண்டு எனக்கு வந்த அவமானத்திலயும் ஆத்திரத்திலயும் அவரப்போல நானும் என்ஜினியராக வரவேணும் எண்டு எண்ணித்தான் தம்பி இலங்கைப் பொறியியல் நிறுவனத்தில் மாணவனாகப் பதிவு செய்து படித்துச் சோதின பாஸ் பண்ணி என்ஜினியராக வந்த நான்” என்று தனது அனுபவத்தை உணர்ச்சிமயமாக எடுத்துச் சொன்னார் மரியசிங்கம்.
அந்த உணர்வுமயமான சூழலை மாற்ற நினைத்தான் கோகுலன்.
“நீங்க தாண்டியடியில அளக்கப்போன காட்டுப் பாதயத் தெரியும் சேர். அது இடயில வளுவின்னக்குளம் தாமரைக்கேணிக்குளம் எல்லாம் தாண்டிச் கிரான்புதுக்கண்டம் எண்ட இடத்துக்குப் போகுது. சோமன்குளம் எண்ட குளம் அங்க இரிக்கி. அந்த வட்டைக்குள்ள நிந்தவூர் முஸ்லிங்கள்தான் வேளாண்மை செய்யிறாங்க. முஸ்தபா எம்பியா இரிக்கக் கொள்ளதான் இந்தக் கிரான்புதுக்கண்டத்த உருவாக்கிக் குடுத்தவர். சோமன்குளத்தத் தாண்டினா அங்கால கடும்காடு. அப்பிடியே நேரே போனா ஒரு இடத்தில பத்தக் காட்டுத்துண்டொண்டு வரும். பக்கத்தால ஆறொண்டு ஓடுது. அது முந்தி சம்மாந்துற ஆக்கள் வந்து காடுவெட்டிச் சேன செய்து போட்டுப் புறகு உட்டுத்துப் போன பத்தக்காடு. அத இப்பவும் ‘சம்மாந்துறயாண்ட கணத்த’ எண்டுதான் சொல்லிற.
ஆத்தக் கடந்து அங்கால கொஞ்சத்தூரம் காட்டுக்குள்ளால போனா ‘வடமூசாக்குளம்’ வருகிது. பக்கத்தில ‘திவுலானவட்ட’ என்றிர பெரிய வெளியொண்டு காட்டுக்குள்ளவரும். நிறைய விளாமரம் நிக்கிது.
வடமூசாக்குளத்தக் கட்டினா ஐந்நூறு ஏக்கருக்குப் பாயும். அந்தக்குளத்தக்கட்டி அதுக்குக்கீழ தம்பிலுவில், திருக்கோவில், காரைதீவு, அக்கரைப்பற்றில காணியில்லாத தமிழாக்களுக்குக் காட்டப் பிரிச்சுக் குடுத்து வயல் நிலமாக்க வேணும் என்றிரதும் ஒரு திட்டம். கனகரட்ணத்திட்டச் சொல்லி வச்சிருக்கன்.
கஞ்சிக்குடிச்சஆத்துக் குளவேல முடிஞ்சொன்ன ‘வடமூசா’ க் குளத்திலதான் கை வைக்கோணும். இது மட்டுமில்ல சேர்!. உங்களுக்குத் தெரியுந்தானே சங்கமன்கண்டிக்கும் கோமாரிக்குமிடையில இரிக்கிற மூங்கில்சோலைக்குளம் அதுவும் ஒரு சின்னக்குளம். கட்டினா ஒரு இருநூறு ஏக்கருக்குப் பாயும். காணியும் கீழ இரிக்கு. இப்ப இரிக்கிற மும்மாரிக்குளத்தையும் கட்டப்போற மூங்கில் சோலைக்குளத்தையும் ஒண்டாச் சேர்த்து ஒரு குளமாகவும் கட்டலாம் சேர்” என்றான் கோகுலன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில இரிக்கிற கித்துள் குளத்தையும் றூகம் குளத்தையும் போலயா? எதிர்காலத்தில இந்த ரெண்டு குளத்தையும் ஒண்டாக்க வேண்டித்தான் வரும்” என்றார் மரியசிங்கம்.
“ஓம். அப்படித்தான் சேர். ஆனா கித்துள்குளம் – றூகம்குளம் போல பெரிய குளங்களல்ல. மும்மாரிக்குளமும் மூங்கில்சோலைக்குளமும் சின்னக் குளங்கள்தான். ரெண்டையும் ஒண்டாச் சேத்துக் கடடினா அது வடமூசாக்குளத்தப் போல ஒரு ஐந்நூறு ஏக்கருக்குப் பாயும்” என்றான் கோகுலன்.
இவையெல்லாவற்றையும் அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த நல்லரட்ணம் “நல்ல திட்டங்கள்தான் இதுக்கெல்லாம் அரசியல் செல்வாக்கும் மற்றது மரியசிங்கம் – கோகுலன் போல மண்ணிலயும் மக்களிலயும் பற்றுவைத்து வேலை செய்யிற அதிகாரிகளும் வேணும்” என்றார்.
“நல்லரட்ணம் சொல்லிறது சரிதான். தமிழன் இப்பிடிப் பின்னடைவுக்குக் காரணம். ஐம்பது வீதம் தமிழ் மக்களப் பாரபட்சமா நடத்தின பௌத்தசிங்களப் பெரினவாத அரசாங்கங்கள் எண்டா மீதி ஜம்பது வீதத்துக்கும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் உயர் அதிகாரிகளும்தான் காரணம். தமிழ் மக்களில அக்கறையில்லாம இரிந்துகொண்டு எடுத்ததுக்கெல்லாம் சிங்கள அரசாங்களக் குறை சொல்லித்தே காலத்த ஓட்டிற” என்றான் கோகுலன்.
கோகுலன் சொல்லிற சரிதான். தமிழ் உயர் அதிகாரிகள் இப்பிடி ஏனோதானோவென்று அக்கறயில்லாம இரிக்கிறதுக்குக் காரணம் இந்தத் தமிழரசுக் கட்சியும் கூட்ணியும்தான் தம்பி” என்றார் மரியசிங்கம்.
“ஏன் சேர் அப்பிடி? என்று கேட்டார் நல்லரடணம்.
“இவங்களுக்கு ‘எலக்சனி’ ல வெண்டாப் போதும். மக்கள் எப்படிப் போனாலும் பரவாயில்ல. உண்மயச் சொல்லப் போனாத் தம்பி! இந்த வடபகுதித் தமிழரசிக் கட்சிக்காரருக்கும் கூட்ணிக்காரருக்கும் ஆனையிறவுக்கு அங்காலதான் ‘தமிழீழம்” வேணும். அதுக்கு ஆனையிறவுக்கு இங்கால இரிக்கிற கிளிநொச்சி – வன்னி – கிழக்கு மாகாணப் பிரதேச மக்களிர நலன்களப் பலி குடுக்குறதுதான் தமிழன்ர போராட்ட அரசியல். சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலத்தில இரிந்து இதுதான் தம்பி நிலம. இது நமக்கு விளங்கிறல்ல. மட்டக்களப்பான் மடையன் தானே” என்றார் மரியசிங்கம்.
“மட்டக்களப்பான் மடையன் என்றிரது உண்மபோலதான். இல்லாட்டி திரும்பி வரச் சொல்லிக் கூப்பிட்டொன்ன மைக்கல் திருப்பியும் யாழ்ப்பாணம் போவானா. மடயனப்போலத் திரும்பிப் போய்த்தானே அநியாயமாச் செத்தவன்” என்றான் கோகுலன்.
நேரத்தைப் பார்த்தான் கோகுலன் இரவு 7.00 மணியைக் காட்டிற்று. சம்பாஷணையை அத்துடன் முடித்துவிட்டு எழுந்து முகத்துவாரம் தனது மனைவியின் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளை ‘ஸ்ராட்’ செய்தான் கோகுலன்.
தம்பி! கோகுலன் நாளைக்குப் புணானைக்குப் போக இரிக்கம். அடுத்த நாள் திங்கட்கிழமை நிவாரண வேலைகளுக்கு ‘ஈரோஸ்’ குழுப் பொடியனுகளக் கூட்டிப் போறதுக்குரிய ஒழுங்குகள முதல்நாளே போய்ப் பார்த்து வைச்சா நல்லம்தானே. ஏலுமெண்டா நாளைக்கும் வாங்க” என்று நல்லரட்ணம் சத்தமிட்டுச் சொன்னது கோகுலனது காதில் விழுந்தது.
யாழ்ப்பாணத்தார்களைக் குறை கூறிக்கொண்டும்- அவர்களுக்கு எதிராகவும் உரையாடிக் கொண்டே மட்டக்களப்பில் சூறாவளி நிவாரண வேலைகளுக்கு யாழ்ப்பாணத்து இளைஞர்களைத்தானே கூட்டிச் செல்கிறோம் எனக் கோகுலன் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே சிந்தித்தான். இதிலுள்ள முரண்நகையை எண்ணியபோது கோகுலனுக்கு உள்ளத்தில் முள் குத்தியது.
யாழ்க்குடாநாட்டு உயர்குடிக் குழாத்தை- மேட்டுக் குடியைச் சேர்ந்த மிதவாத வலதுசாரித் தமிழ் அரசியல்வாதிகளிடம் உள்ள மேலாதிக்க மனப்போக்கு இடதுசாரித் தத்துவங்களால் ஈர்க்கப்பட்ட இளைய தலைமுறையிடம் இல்லை அல்லது அருகி வருகிறது எனத் திருப்தியடைந்த கோகுலன், ‘யாழ் மேலாதிக்கம்’ என்ற கருத்தியலுக்கு எதிரான சிந்தனை காலவோட்டத்தில் யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு எனும் பிரதேசவாதமாகப் பிறழ்வடைந்து விடாமல் அதனைக் கவனமாகவே கையாள வேண்டும் என அவனது அறிவு உணர்த்திற்று.
இந்தச் சிந்தனையோட்டத்துடன் கோகுலன் முகத்துவாரத்திலுள்ள தனது மனைவியின் வீட்டையடைந்தான்.
(தொடரும்… அங்கம் – 52)