ஐரோப்பிய நீர் நிலைகள் குறித்து எச்சரிக்கும் புதிய ஆய்வு!
ஐரோப்பாவின் மேற்பரப்பு நீரில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரம் ஆரோக்கியம் அல்லது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசுபாடு, வாழ்விட சீரழிவு, காலநிலை மாற்றம் மற்றும் நன்னீர் வளங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை ஐரோப்பா நீர் நிலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய சுற்றுச்சூழல் நிறுவனம் (EEA) வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
ஐரோப்பாவின் நீரின் ஆரோக்கியம் நன்றாக இல்லை. ஐரோப்பாவின் நீர் பாதுகாப்பு அச்சுறுத்தல் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளதாக EEA நிர்வாக பணிப்பாளர் லீனா யலா-மோனோனென் அறிக்கையில் குறிப்பிட்டார்.
EEA தொகுத்துள்ள 19 உறுப்பு நாடுகளின் தரவுகளின்படி, ஐரோப்பாவின் மேற்பரப்பு நீர்நிலைகளில் 37 சதவீதம் மட்டுமே சிறந்த சுற்றுச் சூழல் ஆரோக்கியத்துடன் உள்ளது.
இதற்கிடையில், 2015-2021 காலகட்டத்தில் 29 சதவீத மேற்பரப்பு நீர் மட்டுமே சிறந்த இரசாயன நிலையை கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
சிறந்த இரசாயன நிலை என்றால், இரசாயன ஊட்டச்சத்துக்கள் மற்றும் PFAS மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்களிலிருந்து தண்ணீர் அதிகப்படியான மாசுபாடு இல்லாமல் உள்ளமை ஆகும்.