“எண்ணியே பார்க்கிறோம்” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.
கால்வயிறு அரைவயிறு
கஞ்சிதான் குடித்தோம்
காலிலே செருப்புமின்றி
கண்ணுங் கருத்துமாய்
கல்வியைக் கற்றோம்
கசடறக் கற்றோம்
ஆசிரியர் எல்லோரும்
ஆளுமையாய் அமைந்தார்
அக்கறையாய் அனைத்துமே
கற்கவழி ஆகினார்
நல்லொழுக்கம் காட்டினார்
நல்லதையே ஊட்டினார்
அத்தகைய ஆசான்கள்
அகமமர்ந்து விட்டார்
கிடைத்தை உண்டோம்
படுத்ததும் உறங்கினோம்
அடுத்தவர் பசியை
அறிந்துமே உதவினோம்
நடிப்பது இல்லா
நாளுமே வாழ்ந்தோம்
வாழ்ந்ததை இப்போ
எண்ணியே பார்க்கிறோம்
உற்றார் வருவார்
உறவுகள் வருவார்
பெற்றார் பெரியவர்
பெருந்துணை ஆகினார்
கற்பவை அனைத்தும்
கற்றிடப் பணிப்பார்
கல்வியே வாழ்வில்
பெருந்துணை என்பார்
இறையை நம்பி
இருவென மொழிவார்
இரக்கம் ஈகை
ஏந்திடு என்பார்
பொறுமை என்பதே
அருந்துணை என்பார்
பொங்கிடும் சினத்தைப்
போக்கிடு என்பார்
உண்மை உளத்தில்
இருத்திடு என்பார்
உயர்ந்தோர் நட்பைப்
பேணிடு என்பார்
கடமை கண்ணியம்
காத்திடு என்பார்
கடவுளை எண்ணியே
வாழ்ந்திடு என்பார்
சொன்னவர் வழியில்
வாழ்ந்துமே நின்றோம்
நன்னயம் மிகுந்தது
நாளுமே சிறந்தது
இப்பவும் அவர்களை
எண்ணியே நடக்கிறோம்
எம்வழி வருவார்
இதையகம் இருத்துவீர்
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண். .. அவுஸ்திரேலியா