கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதிவழங்கினாரா?
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதிவழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள் மத்தியிலான உரையாடல் மூலம் தெரியவந்துள்ளதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 12ம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டொவால்,கனடாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்ற வெளியில் தெரியவராத சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து கனடா அதிகாரிகள் தகவல்களை வழங்கியுள்ளனர்என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும் இடைமறித்து கேட்கப்பட்ட தகவல்களின் போது பெயர்கள் வெளியான நபர்களை விசாரணை செய்வதற்கு கனடா இந்தியாவின் அனுமதியை கோரியது என தெரிவித்துள்ள வோசிங்டன் போஸ்ட் அவர்களிற்கான இராஜதந்திர விடுபாட்டுரிமையை நீக்குமாறு கனடா விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது.இதனை தொடர்ந்தே இந்திய தூதுவர் உட்பட அதிகாரிகளை கனடா வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.