“யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம்”; வைத்தியர் அர்ச்சுனா தெரிவிப்பு
யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தனக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து, பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவோம்.
தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டுள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
எமது போராட்டம் அரசியல் சார்பற்ற போராட்டமாக முன்னெடுத்தோம். அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை சுட்டி காட்டிய போது எனக்கு எதிராக திரும்பினார்கள்.
அப்போதே அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன்.
உண்மையான அரசியல் செய்ய நிதி தேவையில்லை. அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருடம் சம்பளம் போதும்.
மக்களுக்காக அரசியல் செய்ய பணம் தேவையில்லை. எனக்கு 10 கோடி ரூபாய் பெறுமதியான காணி இருக்கின்றது. அது எனக்கு போதும்.
மக்களிடம் பணம் பெற்றால் அது தொடர்பில் வெளிப்படை தன்மையாக செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார்.