சரவணபவனின் “மாம்பழ இராஜதந்திரம்”… தெய்வீகன்
நான்கு வருடங்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்று மகிந்தவுக்கு யாழ்ப்பாண மாம்பழங்களைக் கொடுத்த, தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள், சில தினங்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவையிடம் மாம்பழங்களுடன் ஆஜராகியிருக்கிறார். தான் தேர்தலில் குதித்திருக்கும் புதிய கட்சிக்கு ஆசீர்வாதம் வேண்டி, மாவையிடம் மாம்பழத்தை நீட்டியிருக்கிறார். இனிப்போ புளிப்போ எதுவும் புரியாமல் அரசியல் சுவை மரத்துப்போயிருக்கும் பழம் தலைவரான மாவையரும் தன்னிடம் வந்தவர்களைப் பார்த்து அப்பாவியாகச் சிரித்திருக்கிறார்.
முருகனுக்கும் பிள்ளையாருக்கும் இடையிலான சகோதரச் சிக்கலுக்குக் காரணமாயிருந்த மாம்பழம்போல, தமிழரசுக் கட்சிக்கும் – ஜனநாயகத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான சகோதரச் சிக்கலுக்குள்ளேயும் பாவம் மாம்பழம்தான் இன்று அகப்பட்டிருக்கிறது.
இவர்களது தேர்தல் பிரச்சினைக்கு மாம்பழம் ஒரு மங்களகரமான தீர்வை வழங்குதோ இல்லையோ, வரலாற்று ரீதியாக “மாம்பழ இராஜதந்திரம்” – Mango Diplomacy- என்ற முக்கிய அரசியல் பாரம்பரியத்தை அவ்வளவு இலகுவாக எடைபோட்டுவிடமுடியாது.
இந்தியாவில் நேரு முதல் மன்மோகன் சிங் வரை இந்த மாம்மபழ இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் பல அரிய காரியங்களையும் அவர்கள் சாதித்திருக்கிறார்கள்.
இரண்டாயிரங்களில், இந்திய மாம்பழ இறக்குமதிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டிருந்தபோது, அப்போதைய ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் டில்லிக்கு விஜயம் செய்திருந்தார். அந்த விஜயத்தின்போது, மாம்பழ விவகாரத்துக்கு ஒரு முடிவெடுப்பது என்று தீர்மானித்த மன்மோகன் சிங், புஷ்ஷிற்கே மாம்பழத்தை உண்ணக்கொடுத்து மடக்கினார். அத்தோடு அமெரிக்காவில் இந்திய மாம்பழத்துக்கான தடை நீங்கியது. ஆனால், அதற்குப் பதிலாக – இந்தியாவில் அதுவரை தடைசெய்யப்பட்டிருந்த ஹார்வி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிள்களை அனுமதிப்பதற்கு மன்மோகன் ஒப்புக்கொண்டார்.
பாகிஸ்தானும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு மாம்பழம் வழங்குவதை பாரம்பரியமான இராஜதந்திரப் பழக்கமாகக் கொண்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் ஸியா அல் ஹக் அவர்கள், இந்திரா காந்திக்கு பாகிஸ்தானின் அதிசுவை வாய்ந்த rataul என்ற மாம்பழ வகையை அனுப்பி, இந்தியாவுடனான இன்னுறவை வெளிப்படுத்தினார். ஆனால், இந்திராவுக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்தியா இதனைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. “ஒரு பக்கம் குண்டு வைத்துவிட்டு, இன்னொரு பக்கம் மாம்பழம் அனுப்பி எங்களை மடையன் ஆக்கப் பார்க்கிறீர்களா” என்று முகத்தை திருப்பிக்கொள்வது வழக்கம். 2015 இல் அப்போதைய பிரதமர் நவாப் ஷெரீப், மோடிக்கு மாத்திரமல்ல, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மற்றும் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி ஆகியோருக்கும்கூட பத்து – பத்து கிலோ மாம்பழங்களை அனுப்பியிருந்தார். இந்தியா நாக்கை மடித்து முறைத்துப் பார்த்துவிட்டு இருந்துவிட்டது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மாம்பழப் பிரியம்தான் அண்மைக்காலத்தில் பலரும் அறிந்தது. அவர் இந்தியாவின் மாநிலத்தலைவர்களுக்குக்கூட மாம்பழங்களை அனுப்பிவைத்தவர். சரவணபவன் அவர்கள் மகிந்தவுக்கு மாம்பழம் கொடுத்த அடுத்தவருடம், ஷேக் ஹசீனாவும் மகிந்தவுக்கு ஒருதொகை மாம்பழங்களைப் பிரியத்துடன் அனுப்பிவைத்தார்.
தெற்காசியத் தலைவர்கள் இவ்வாறு மாறி – மாறி மாம்பழத் தட்டுக்களைப் பரிமாறிக்கொண்டாலும், மேற்குலகிற்கு ஆசியத்தலைவர்கள் மாம்பழங்களைப் பரிசளிக்கும்போது, அதற்கு மிகப்பெரிய பெறுமதி இருந்தது. கூடவே, மாம்பழத்தை எப்படி உண்பது என்றுகூட அவர்களுக்குப் பயிற்றுவிக்கவேண்டியிருந்தது. முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஒருவர் கூறும்போது, இந்தியத் தலைவர்கள் எனக்கு மாம்பழங்களை அனுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், எனக்கு அதனை எப்படி முறையாகச் சாப்பிடுவது என்று தெரியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
ஆக, இன்று ஜனநாயகத் தமிழரசுக் கட்சியென்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள தேர்தல் கட்சியோ அதிலுள்ளவர்களின் நடவடிக்கைகளோ பெறுமதியற்றதாக இருக்கலாம். ஆனால், அவர்கள் தாங்கப்போகும் சின்னமான மாம்பழத்திற்குள்ள அரசியல் – இராஜதந்திர பெறுமானம் வரலாற்றில் மிகப்பெரியது.
பழம் பத்திரம்!