கதைகள்

வம்சத்தைத் தேடி… கதை… (சோலச்சி)

வரப்புகள்தோறும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பனை மரங்கள் வளர்ந்திருந்தன. ஒரு சில பனை மரங்களின் மட்டைகளில் தூக்கணாங்குருவிகள் கூடுகட்டி ஊஞ்சலாடிக் கொண்டு இருந்தன. வயல்வெளிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒன்றிரண்டு கிணறுகள் மட்டுமே எட்டிப் பார்த்தன. வானம் பார்த்த பூமி என்பதாலும் விவசாய குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்ததாலும் மணல் குளத்தை நம்பியே அனைவரும் வாழ்ந்தனர். மணல் குளத்து தண்ணீரை சிக்கனமாகவும் கண்ணும்கருத்துமாக பாதுகாத்து வந்தனர்.

இரண்டு போகம் விவசாயம் பலரும் செய்து வந்தனர். கிணறு வைத்து இருப்பவர்கள் மூன்று போகம் விளைச்சலை பார்த்தனர். ஒவ்வொரு வீட்டிலும் இருபதுக்கு குறையாமல் குதிர்கள் குடலை காண்பித்துக் கொண்டு இருக்கும். வீடுகளில் திரியும் மொகட்டு எலிகளுக்கு குதிருக்குள் நுழைந்து நெல்லை தின்பது சவால் நிறைந்தது. குதிருக்குள் நெல்லை கொண்டு போகும் வரை ராத்திரி நேரத்தில் மொகட்டு எலிகளுக்கு கொண்டாட்டம்தான். நெல்லை இதமான வெயிலில் உலர்த்தி விற்றது போக மீதியை குதிருக்குள் சேமித்து வைத்தனர். நெல்லை உற்பத்தி பண்ணுவதையே முக்கிய தொழிலாக செய்து வந்தனர். கிணறு வைத்திருப்பவர்கள் மட்டும் மூன்றாவது போகமாக கடலை, பருத்தி, சோளம், கேப்பை என ஏதாவது பயிரிட்டு வந்தனர்.

நெல்லை விற்று அதில் வரும் பணத்திலிருந்து மற்ற தேவைகளை சரி செய்து கொண்டனர். அந்த ஊரின் நெல்லை வாங்குவதற்காக உரங்களை கடனாக கொடுப்பதில் முத்திரை பதித்து வந்தார் பக்கத்து ஊரில் இருக்கும் ஊனையூர் கருப்பையா. இவரைக் கடந்து நெல் மூட்டைகள் வேறு எங்கும் சென்றதாக வரலாறு இல்லை.

சித்திரை வைகாசி மாதங்களில் இந்த ஊர் நுங்குகளுக்கு வரவேற்பு அதிகம். வரப்புகளில் வளர்ந்திருக்கும் பனை மரங்கள் அந்த வயலுக்குச் சொந்தக்காரர்களையேச் சேரும். மணல் குளக் கரையில் கூட்டம் கூட்டமாக வளர்ந்து இருக்கும் பனை மரங்கள் அனைவருக்கும் பொதுவானவை. அங்கு யார் வந்து நுங்கு வெட்டினாலும் தடை விதிப்பது கிடையாது. அதனால் வெயில் காலங்களில் பக்கத்து கிராமங்களும் இந்த ஊருக்கே படையெடுக்கும். மணல்குளத்து கரையில் அரிவாளும் கையுமாக ஆளும்பேருமாக திரிவதால் ஏதோ திருவிழா நடப்பது போல்தான் தெரியும்.

“எட்டிப் பார்த்த குளமும் ஏறெடுத்துப் பார்க்கும் வயலும்” என்று இந்த ஊருக்கான பழமொழி. வீடுகளுக்கு எதிரே வயலும் குளமும் இருப்பதால் அந்த ஊர் மக்களுக்கு எல்லா விதத்திலும் தோதாக இருந்தது. மழைக்காலத்தில் எப்போதாவது ஏற்படும் வெள்ளப் பிரச்சினையைத் தவிர வேறு எந்த பிரச்சனையிலும் சிக்கிக்கொண்டதில்லை.

அன்றொரு நாள்…
காலைப் பொழுதில்..

இடுப்பில் துண்டை மட்டும் கட்டியபடி ஆத்துச் செய்யிலிருந்து மூச்சிரைக்க ஊருக்குள் ஓடி வந்தான் மணி. காலை நேரம் என்பதால் வயவாய்க்காலு பக்கமாக பலரும் சென்றதால் ஒன்றிரண்டு பெரியவர்களை தவிர ஊர் வெறிச்சோடி கிடந்தது. என்ன செய்வது என்றே தெரியாமல் ஓடி வந்தவன் எதிரே தென்பட்ட கூரை வீட்டுக்குள் பொசுக்கென நுழைந்து கொண்டான். அவனுக்கு உயிர் பிழைத்தால் போதும் என்பதாக இருந்தது. நான்கைந்து கழுகுகளின் றெக்கைகள் ஒன்றோடுஒன்று மோதி பறப்பது போல் மனசு படபடத்தது. மாட்டிக்கொண்டால் பனம்பழத்தை பிக்கென பிச்சுப்புடுவானுகளே..! கோழிக்கழுத்த அறுக்கென அறுத்துருவானுகளே….! மனம் தானாய் பேசிக்கொண்டது.

ஒட்டுத் துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு யாரோ தன் வீட்டுக்குள் ஓடுவதைக் தூரத்திலிருந்து கண்டாள் ராசாத்தி. அவளால் இன்னார் என்று யூகிக்க முடியவில்லை. “யாரது.… வூட்டுக்குள்ள ஓடுறது..” னு கத்துவதற்கு வாயெடுத்தாள். ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ என்றும் நினைத்து கத்தாமல் வாயடைத்துக் கொண்டாள். நாத்து பறிச்சு அடிக்க பயன்படுத்தும் கடியலை எடுத்துக்கொண்டு வயலிலிருந்து வீட்டை நோக்கி பெருவிரலை வரப்பில் ஊன்றி விக்குவிக்கென ஓட்டமும் நடையுமாக விரைந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்தவளின் முகம் படபடத்தது. உள்ளே சென்றவன் என்ன செய்துகொண்டு இருப்பானோ…! ஆறு கல்லுக்கால் ஊன்றி தாழ்வாரம் இறக்கிய கூரை வீடுதான் என்றாலும் சுற்றும்முற்றும் கண்களால் துலாவினாள். யாரும் தென்படவில்லை. யாரா இருக்கும்…. இப்பதானே ரெண்டு கண்ணால பாத்தோம்… அதுக்குள்ளயா மாயமா மறஞ்சுட்டாக. ஒருவேளை முழிச்சுக்கிட்டே கனவுகினவு கண்டுட்டமோ… ஒத்த லைட் சுச்சியை அமுக்கினாள். லைட் எரியவில்லை. இந்தக் கரண்ட்டுகாரனுக எப்ப அமத்துறானுகனே தெரியல. மனம் ஏதேதோ அலசினாலும் யாரோ ஓடி வந்தது மட்டும் உண்மை என தீர்க்கமாக நம்பினாள். மனசை ஒருநிலைப்படுத்தி நிதானமாக கண்களை சுழலவிட்டாள். பெருமூச்சு விடும் சத்தம் துல்லியமாக கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி தன் பார்வையை திருப்பினாள். பெரிய குதிரின் பின்னால் யாரோ ஒளிந்திருப்பதை உணர்ந்து கொண்டாள்.

“யாரு அது… வெளிய வர்றியளா இல்லய்யா…..” கடியலை ஓங்கி கதவில் தட்டினாள். சத்தம் தாங்காமல் அஞ்சாறு வௌவால்கள் படபடவென அடித்துக்கொண்டு உள்ளிருந்து வெளியேறின.

அக்கா….. நாந்……தானக்கா….. உடல் படபடக்க படாரென அவள் காலில் விழுந்தான். பெருங்காற்றிலும் விழாத பனைமரம் விழுந்து நொறுங்கியதைப் போல் உணர்ந்தாள்.

ஆத்….தீ எந்திரிப்பா மொதல்ல….என்றவள் அவனது கைகளை தூக்கினாள். பகலில் காக்கையைப் பார்த்து அஞ்சி நடுங்கும் ஆந்தையைப் போல் பேந்த பேந்த விழித்தான். ராசாத்தி அக்காதான் இப்போது அவனுக்கு காக்கும் கடவுளாக தெரிந்தாள்.

வயசுக்கு வந்த ஆம்பள… அதுவும் நாலெழுத்து நாலுகடவு போயி படிச்சபுள்ள… திடுதிப்புனு காலுல விழுகுறத பாத்தா…. என்னானு நெனைக்கிறது. காலங்காத்தால எதப்பாத்தும் பயந்துருக்கமாட்ட. ஏதும் தப்புத்தண்டாலுல மாட்டிருப்பானோ. படிச்ச பய அப்டிருக்காது. தப்புத்தண்டாலு பண்றதுக்கு படிச்சவன் படிக்காதவன் பாத்துக்கிட்டா நடக்குது… நடுமடையை தொறந்துவிட்டா மளமளவென பாயிற தண்ணியப்போல யோசனை ஓடியது. அணையைக் கட்டி யோசனையை ஓர் ஓரமாய் வைத்தாள். வயிறு ஒட்டியிருக்குறத பாத்தா காத்தால நீச்சத்தண்ணி குடிச்சவன் மாறி தெரியல. குண்டான் சட்டியில் பழைய கஞ்சியை கரைத்தாள். இந்தா….. நீச்சத் தண்ணிய முதல்ல குடி….. என்றாள்.

வாங்கி குடித்து முடித்தவனின் உடல் அதிகமாக நடுக்கம் கொண்டது. ராசாத்தி அக்கா காட்டிக்கொடுத்து விடுவாளோ என்ற பயத்தில் உடல் முழுவதும் முத்துக்களை கோர்த்தது போல் வேர்க்கத் தொடங்கின.

என்னடா இது… சூரியன் மொகத்தையே இன்னும் முழுசா பாக்கல. காத்தாலயே உச்சி வெயிலுல நனஞ்சு வந்தவன் மாறி இருக்கான். ஏதோ பிரச்சனை என்பதை மட்டும் புரிந்து கொண்டாள். அவனே பேசத் தொடங்கினான்……

அக்கா இப்ப நான் வெளிய போனா மல்லாமலை காரனுக வெட்டி கொன்னே புடுவானுக. எம்புட்டு உசுர காப்பாத்துக்கா. எங்க அப்பன் ஆத்தா கிட்ட நான் இங்க இருக்குறத சொல்லிருக்கா. மீண்டும் அவள் காலில் விழ நினைத்தவனை தடுத்தாள். வெளியில் அலறல் சத்தம் கேட்டதும் குதிர் பின்னால் ஒளிந்து கொள்ளச் சொன்னாள்.

சந்தேகப்படாதவாறு பஞ்சாரத்தையும் பழைய துணிகளையும் குதிர் பக்கம் போட்டு வைத்தாள். அனைத்து கூரை வீடுகளுமே அரசாங்கத்தின் ஒத்த லைட் சர்வீஸ் கொண்டது. ஒரு குண்டு பல்பு தவிர வேறு லைட் கிடையாது.

அய்யய்யோ…… எழவு மயன காணோமே…. அய்யனாரே….. நா… பெத்த ஒத்த மயனக் காப்பாத்….து. ஊ….ரே கூடி வருதாம் லோ…. தலைவிரித்துக்கொண்டு உரக்க அலறினாள் சிகப்பி. சிகப்பியின் அலறல் கேட்டு காடு கரை பக்கம் போனவர்களும் ஊருக்குள் ஓடி வந்தனர்.

என்னத்தா ஆச்சு பாம்பு ஏதும் கடிச்சு புடிச்சா…

எங்கய்யா அவன காணோம்…..

ஏதும் வம்புகிம்புல மாட்டிக்கிட்டானா….?

என்ன ஏதுனே தெரியல….

ஓ….னு அலறுனா எதய்யா புருஞ்சுக்கிறது…..

நம்ம ஊருக்குள்ளேயே அவன் தானய்யா டவுனுல போயி காலேசு வரைக்கும் படிச்சிருக்கான்.

கூடியிருந்தவர்கள் பலவாறு பேசிக்கொண்டனர்.
அப்போது வயல்வெளிக்குள் “எங்கேருந்தாலும் ஆள மட்டும் விட்றாதீக…” “போடுற போடு பொடனில விழுறமாறி போடனும்” “ம்……குடியக் கெடுத்தவன…… விடலாமா..?” ம்……. சத்தம் போட்டவாறு கையில் அரிவாள் கடப்பாரை மண்வெட்டி தடிகளுடன் மல்லாமலைக்காரர்கள் திரண்டு வந்து கொண்டு இருந்தனர்.

அந்தப் பய என்ன பண்ணித் தொலஞ்சான்னு தெரியலையே..? ஊரே ஒன்னு கூடி வருது. முதல்ல அவன பாதுகாப்பா வையிங்க. வர்றவங்க கிட்ட என்னான்னு கேட்டு பேசி தீத்துக்குவோம். பெரியவர் ஒருவர் சொல்ல……

அதப் பாத்துக்குவோம். இப்ப அவன ஆளையே காணோமே…..! முணுமுணுத்தனர் பலரும்…

வெரசாக வந்தவர்கள் யார் தடுத்தும் நிற்கவில்லை. அவன எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சு கொல்லுங்கடா. எவனாச்சும் குறுக்க வந்தா தூக்கிப்போட்டு மிதிங்கடா…. மல்லாமலைக்காரர்களில் ஒருவன் சொல்ல, வந்தவர்கள் அனைவரும் கொடும் பசியில் திரியும் ஓநாயைப்போல் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்து தேட ஆரம்பித்தனர். சிக்கினால் தின்று கொழுத்துவிட வேண்டியதுதான் என்ற முடிவோடு வலை வீசினர்.

நில்லுங்கய்…யா கேட்கபாக்க ஆள் இல்லையா…. என்ன ஏதுன்னு சொல்லாம ஊருக்குள்ள இப்புடி அலசி எடுக்குறீங்க…..

உள்ளூர் காரர்கள் எவ்வளவோ தடுத்தும் அவர்கள் நிற்பதாக இல்லை. கொலை வெறியோடு தேடிக் கொண்டு இருந்தனர்.

என்னடா ஆளக் காணோம்….

எங்கடா ஒளிஞ்சிருக்கான்….

வேசிமயன காணோம் டா

பொட்ட பய எங்கடா போனான்

மல்லாமலை காரர்கள் ஒவ்வொரு வீடாக நுழைந்து தகாத வார்த்தைகளை பொழிந்து கொண்டு வந்தனர்.

ஏத்தா….. ராசாத்தி….. அந்தப் பயலே பாத்தியா….. நாக்கை மடக்கி நறுநறுவென கடித்துக்கொண்டான் ஒருவன்.

இந்தக் குரலைக் கேட்டதும் உள்ளே இருந்தவன் உருக்குலைந்து போனான்.

சாமி அந்தப் பய ஏம்புட்டு கண்ணுல பட்டா நானே கொன்னுப்புட்டு சேதி சொல்லி அனுப்புறேன்…. தலை முடியை அள்ளிக் கொண்டை போட்டபடி உரக்கச் சொன்னாள் ராசாத்தி. இப்போது அதிகமாகவே நிம்மதி பெருமூச்சு விட்டான் மணி. சத்தம் போட்டவன் கையில் அரிவாளோடு கடந்து போனான்.

ஊருக்கு வெளியில் இருக்கும் அரச மரத்துல ரெண்டு ஊர்க்காரர்களும் உட்கார்ந்தனர்.

அரச மரத்தில் அணில்கள் அங்குமிங்கும் தாவி விளையாடிக் கொண்டு இருந்தன. ஒரு சில அணில்கள் முன்னாங்காலைத் தூக்கி வேடிக்கைப் பார்த்தன.

உச்சிப்பொழுது சாயுறதுக்குள்ள அவன் இங்கே வந்தே ஆகணும். இல்லன்னா…. ரெண்டு ஊருக்கும் வெட்டு குத்துன்னு பெரிய பகையே வந்து சேந்துரும். இது மல்லாமலை காரர்களில் முக்கியமானவரான சின்னையாவின் பேச்சு.

ரெண்டு ஊரும் வேற வேற ஆளுகளா இருந்தாலும் தாயா புள்ளையா தானய்யா பழகிக்கிட்டு இருக்கோம். எப்புடியா மனசு வந்துச்சு அவனுக்கு… இது மல்லாமலை குமரேசனின் பேச்சு.

சிகப்பியும் மாறனும் ஊர் மத்தியில் கும்பிட்டு கும்பிட்டு விழுந்தனர்.

மாறா…. நாமெல்லாம் அண்ணன் தம்பியா பழகிக்கிட்டு இருக்கோம்கிறத மறந்தட்டியா….. கும்பிடுறத விட்டுட்டு உம் மவனே கூட்டி வர்றது பாரு… அழுத்தம் கொடுத்தார் குமரேசன்.

என்னய்யா வந்ததுல இருந்து நாம சும்மா உக்காந்து இருக்கோம் என்று உள்ளூரில் ஒருவர் சொல்ல..

எந்திரிங்கப்பா என்றபடி உள்ளூர் காரர்களும் ஒட்டுமொத்தமா எந்திரிச்சு மல்லாமலை காரர்களிடம் “என்ன ஏதுன்னு எதுவாருந்தாலும்…….. பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும். நாம எப்பவும் போல தாயாபுள்ளயா இருக்கனும்….” விழுந்து மன்னிப்பு கேட்க தயாராயினர்.

அட என்னப்பா….. மொதல்ல எல்லோருமா உட்காருங்கப்பா. அந்தப் பய செஞ்ச தப்புக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. தப்பு செஞ்சவனை தண்டிச்சாதான் அடுத்த தப்பு நடக்காது. ரெண்டு ஊருக்கும் அதுதானே நல்லது. கோபத்துல எங்க ஆளுங்க ஆயுதங்களோட வந்துட்டாங்கதான். அதுக்காக கொன்னாபுடுவோம்…. மலைராசனின் பேச்சு உள்ளூர் காரர்களுக்கு ஒருவித அமைதியை ஏற்படுத்தியது.

குதிர் பக்கம் ஒளிந்திருந்தவனை அதட்டி எழுப்பினாள் ராசாத்தி.

அக்கா….

இந்தா மொதல்ல இந்த வேட்டிய கட்டு….

தலை குனிந்தபடி… வேட்டியை வாங்கி கட்டிக் கொண்டான்.

ஊரே ஒனக்காக கூடி இருக்குது. நம்ம ஊரு சனங்க எதுக்காகவும் தல குனிஞ்சது இல்ல. ஆண்டாண்டு காலமா ரெண்டு ஊரும் அண்ணன் தம்பி அக்கான்னுதான் பழகிக்கொண்டு இருக்கோம். அந்த ஊராளுக இங்க வந்து தானடா புல்லு அறுத்துக்கிட்டு போவாங்க. தலைதெறிக்க ஓடி வந்தியே…. எதுக்கு..? அவனுக கண்ணுல சிக்கியிருந்த கொளத்தட்டையத் தேக்கென தேச்சிட்டுப் போயிருப்பானுக. வயக்காட்டுல என்னடா நடந்துச்சு…? சொல்லுடா… அதட்டலோடு தாவாயைப் பிடித்தும் கெஞ்சினாள் ராசாத்தி.

அமைதி காத்தவன் கண்களில் நீர் பெருகியது. புத்தி கெட்டு செஞ்சுபுட்டேனே தேம்பித் தேம்பி கண் கலங்கினான்.

காட்சி அவன் முன்னால் ஓடியது..

எப்போதும்போல் ஆங்காங்கே பலரும் வரப்புகளில் புல்லு அறுத்துக் கொண்டு இருந்தனர். நடு வாய்க்காலில்தான் செல்வி புல் அறுத்துக் கொண்டு இருந்தாள். பக்கத்திலேயே வயலுக்கு தண்ணிப் பாய்ச்சிக் கொண்டு இருந்தான் மணி.

நன்கு விளைந்திருந்த செல்வியின் தோற்றம் வாலிபனான மணியை கிரங்கடிக்கச் செய்தது. அவள் குனிவதும் தாவணி மாராப்பு காற்றில் விலகுவதும் அவனை நிலை தடுமாறச் செய்தது. புல்லறுத்துக் கொண்டு இருந்தவர்கள் ஒவ்வொருவராக கட்டுகளைத் தூக்கி கிளம்பி கொண்டு இருந்தனர். அவன் பார்வையெல்லாம் செல்வியைப் பார்ப்பதும் வேறு யாரும் அவனைப் பார்க்கின்றார்களா என நோட்டமிடுவதுமே….

யேய்…. நாங்க போய்கிட்டு இருக்கோம் கிளம்பி வாடி… சிட்டாள் சொன்ன போதுதான் புல்லை அள்ளி வைத்துக் கட்டவே ஆரம்பித்தாள்.

என்னண்ணே… அப்படி பாக்குறீங்க… யதார்த்தமான பேச்சுக்கு

ஒன்னு இல்லம்மா சும்மா…..தான் என்று பேச்சில் நழுவினான்.

புல்லை அள்ளி மொத்தமாகக் கட்டி முடித்தாள். எவ்ளோ முயற்சித்தும் அவளால் தூக்கி தலையில் வைக்க முடியவில்லை.

என்னங்…கண்ணே… பாத்துகிட்டே இருக்கீங்க. தங்கச்சிக்கு தூக்கி விடக் கூடாதா.. அவள் சொன்னது தான் தாமதம். கோழி அசந்த நேரம் குஞ்சை தூக்கும் கழுகு போல குறுகுறுனு பார்த்துக்கொண்டே அவளிடம் நெருங்கினான்.
தூக்கி தலையில் வைத்தவனின் கண்கள் அவளது நெஞ்சைக் குறி வைத்தது. தாமதிக்காமல் அவனது கைகள் செல்வியின் நெஞ்சைத் தடவியது. திடுக்கிட்டு அப்படியே புல்லுக்கட்டைப் போட்டுவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடினாள்.

“அண்ணா…னு அழச்சதுக்கா இந்தப் பரிசு” செல்வியின் கண்ணீர் பேசியது…

என்ன காரியம்டா செஞ்ச பாவிப்பயல…. பொம்பள சாவம் ஒன்ன வாழ விடாதடா. அவன் கைகளில் தனது கைகளால் ஆத்திரம் தீர அடித்தாள். படிச்சவனு ஊரே கொண்டாடுச்சேடா….. இப்புடி மண்ண வாரிக் கொட்டிட்டியே……புலம்பினாள் ராசாத்தி.

பண்ணுன பாவத்துக்கு ஊரு காலுல விழுந்து மன்னிப்பு கேளுடா…. அப்பவும் நீ பண்ணுன பாவம் தொலையாதுடா….. ஊர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு கைகளைப் பிடித்து இழுத்துச் சென்றாள் ராசாத்தி.

நம்ம புள்ளைய கண்டு அந்த வெறும்பயல இழுத்து வருதுயா… மல்லாமலை குணசேகரன் சொன்னதும் ஊரே திரும்பிப் பார்த்தது. நான்கைந்து இளைஞர்கள் அவனை அடிப்பதற்கு பாய்ந்தனர்.

அதற்குள் “ஏம்புட்டு வயித்துல பொறந்துட்டா இந்த காரியம் செஞ்ச… இத்தன நாளா கட்டி வச்சிருந்த இந்தக் குடியோட மானம்மருவாதைய்ய குழி தோண்டி பொதச்சிட்டியேடா…..சிகப்பி ஓடிவந்து அவனை மாறி மாறி அறைந்து…. கீழ விழுந்து மன்னிப்பு கேளடா…. மன்னிப்பு கேளடா என்று சொல்லி கும்பிட வைத்தாள். வேகமெடுத்த இளைஞர்கள் ஒதுங்கி நின்றனர். சிகப்பியின் செயலைப் பார்த்து மாறனும் கண்கலங்கினார்.

யாரும் ஏதும் பேசவில்லை. தலை குனிந்து நின்ற அவனைக் கடந்து மல்லாமலைக்காரர்கள் எழுந்து களைந்து சென்றனர்.

ஒன்றிரண்டு நாள் கழித்து செல்வி காஞ்சாரம் பழத்தைத் தின்று இறந்து போனாள்.

இப்போது மல்லாமலையிலிருந்து புல்லறுக்க யாரும் இங்கு வருவதே இல்லை. அந்த வயல்வெளிகள் விளைச்சல் பூமியாக இருந்த போதும் மல்லாமலைக்காரர்கள் இல்லாமல் வெறிச்சோடியே காணப்பட்டது.

திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த மணியின் செயலால் மாறனும் மாரடைப்பால் இறந்து போனார். மாறனின் இறப்பு சிகப்பிக்கு பேரிடியாக இருந்தது. ஒத்தப் புள்ளையப் பெத்துட்டு மாலை எடுத்துப் போட்டு கண்ணார பாக்க கொடுத்து வைக்கலயேனு சிகப்பி அழுவதைக் கேட்டு ஆறுதல் சொல்லக் கூட யாரும் வரவில்லை.

செல்வியின் இறப்பு இவனது கல்யாணத்துக்கு தடையாகவே இருந்தது. இப்புடி சுண்டுற நேரத்துல மோசம் செஞ்சுப்புட்டேனே…. காஞ்சாரம் பழத்த தின்னு அந்தப் புள்ள செத்துச்சா….. இல்ல கழுத்த நெரிச்சே கொன்னானுகளா…. மொத்தத்துல நல்லாருந்த ஊரும் போச்சே….. நெனச்சு நெனச்சு வாடினான்.

சொந்தக்காரர்கள் வீடெங்கும் இவன் செஞ்ச காரியம் புகைந்து பரவியது.

எந்த ஊருக்குப் போயி கேட்டாலும் ஏதாச்சும் மனசுல நெனச்சுக்கிட்டு சறுக்குச் சொல்லி பொண்ணு தர மாட்ரானுவ.. கல்லாணம் காச்சிய பாக்காமலேயே இந்தக் கட்ட போயி சேந்துருமோ….. எறவானத்தில் அமர்ந்து வெற்றிலையை போட்டபடியே புலம்பிக்கொண்டே இருந்தாள் சிகப்பி.

ஆண்டுகள் கடந்தது அவனுக்கும் நாற்பத்தைந்து வயதைத் தொட்டது. திருமணம் செய்து கொள்ளவே இல்லை. தள்ளாடும் வயதிலும் தன் வம்சத்தை தேடி பெண் பார்க்க போய்க்கொண்டு இருந்தாள் சிகப்பி.

 ( சோலச்சி solachysolachy@gmail.com )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.