நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவிலான கலைஞர்கள் போட்டி
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகளவிலான கலைஞர்கள் போட்டியிடுகின்றனர் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை வெளியான அந்த இணையத்தளத்தின் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பல பிரபல கலைஞர்கள் முக்கிய அரசியல் கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சின்னமான ஒலிவாங்கியில் மூத்த திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்கவும், திருகோணமலை மாவட்டத்தில் உவிது விஜேவீரவின் இரண்டாம் தலைமுறை கட்சியின் சார்பில் மூத்த நடிகர் கமல் அதர ஆராச்சியும் போட்டியிடுகின்றனர்.
கொழும்பு மாவட்டத்தில் ஊடகவியலாளரும் நடிகருமான விமல் கட்டபே ஆராச்சியும், கண்டி மாவட்டத்தில் நடிகரும் தொலைக்காட்சி நாடக இயக்குனருமான ஜகத் மனுவரனவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பாகவும் போட்டியிடுகின்றனர். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நடிகர் வமிலா பர்சாத்தும் போட்டியிடுன்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இலக்கியவாதி கீர்த்தி வெலிசரகே சேர்க்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் நடிகை அனுஷா தமயந்தி, நடிகர் ஜயந்த கட்டகொட மற்றும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் சுதத் ரோஹன ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான சுஜீவ சேனசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பிரபல நடிகர் ஜெஹான் அப்புஹாமியும் முன்னிலை சோசலிச கட்சி சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.