இறுதி தருணத்தில் பெயர் நீக்கம்: கடும் கோபமடைந்த தமிதா
பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதி தருணத்தில் தமது பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடிகையும் சமூக செயல்பாட்டாளருமான தமிதா அபேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு கடந்த வியாழக்கிழைமை வருகைதந்த அவர், ஐ.ம.சவின் வேட்பாளர் பட்டியலை பார்த்துவிட்டு தமது பெயர் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களிடம் கூறினார்.
2022ஆம் ஆண்டு காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் முக்கிய செயல்பாட்டாளர்களில் ஒருவராக செயல்பட்ட தமிதா அபேரத்ன, போட்டத்தின் பின்னர் ஐ.ம.சவில் இணைந்து அரசியலில் செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, பிரச்சாரங்களிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஐ.ம.சவின் சார்பில் பொதுத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாக கூறிவந்த அவர், இன்று வியாழக்கிழமை வேட்பாளர் பட்டியலில் தமது பெயரை இறுதி தருணத்தில் நீக்கி கீழ்த்தரமான செயலை செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.