கட்டுரைகள்
1987 அக்டோபர் 10 – அமைதியின் அஸ்தமனம்!… நிதர்சனம், ஈழமுரசு, முரசொலி தகர்ப்பு!!… நவீனன்
– நவீனன்
1987 அக்டோபர் 10ஆம் அதிகாலை வேளை, தமிழர் பூமியை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவம், தமிழர்களின் குரலாக வெளிவந்து கொண்டிருந்த ஊடகங்கள் மீதான தனது எதேச்சாதிகார நடவடிக்கையை மேற்கொண்ட கரி நாளாகும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தம் 1987 ஜூலை 29இல் கைச்சானதின் பின்னர், ஈழத்தில் ஊடகத்துறையின் சுதந்திரத்தை முடக்க உருவாக்கும் வகையில், நிதர்சனம், ஈழமுரசு, முரசொலி நிலையங்களின் தகர்ப்பு அழிப்பு நிகழ்ந்தது.
1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைகளான ஈழமுரசு, முரசொலி காரியாலயங்களுக்குள் புகுந்து, பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.
இந்திய அமைதிப் படை போர்:
இந்தியப் அமைதிப் படை 1987 அக்டோபர் 10 ஆம் நாள் விடுதலைப் புலிகளிற்கெதிராகப் போரைப் பிரகடனம் செய்து தமிழரிற்கெதிரான போரினை நடத்தியது. போரில் இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
அத்துடன் ஈழமுரசு, முரசொலி, நிதர்சனம் போன்ற ஊடகங்களை தகர்த்தொழித்து தமிழர்கள் மீதான போர் பற்றிய செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டது இந்திய அமைதிப் படை.
ஊடகம் என்பது மக்கள் ஜனநாயகத்தின் முக்கிய தூண். மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் உள்ள இடைவேளையில் கண்ணாடி போல நின்று அனைத்து செய்திகளையும் உலகிற்குச் சொல்லும் மிகப்பெரிய சாதனம் இந்த ஊடகங்களே.
இந்தியா என்கிற மிகப்பெரிய ஜனநாயக நாடு, உலகின் நான்காம் இராணுவத்தை கொண்ட நாடு, மக்கள் தொகையில் இரண்டாம் இடம் கொண்டுள்ள நாடு. அத்தகைய நாட்டில் ஊடகம் எத்தகைய செயல்பாடுகள் செய்ய வேண்டுமோ, அதற்கு சற்றும் தொடர்பில்லாத செயல்பாடுகளை இந்தியா ஈழத்தில் செய்தது.
ஈழத்தில் ஊடகம் என்பது தமிழரின் நிலைப்பாட்டைப் பொருத்தவரை உண்மைகளை முடக்கும் முகமானதாகவும், உண்மை நிலைக்கு மாறான பரப்புரைகளை நிகழ்த்துவோருக்கு சுதந்திரமானதாகவுமே நீண்ட காலமாக இருக்கின்றது. உண்மைச் செய்திகளைத் திரட்டி வெளியிட மறுப்பதை அல்லது தடுப்பதை ஊடக முடக்கம் எனலாம். ஊடக முடக்கம் செய்யப்படும் போது ஊடகச் சுதந்திரமும் அந்நாட்டில் அற்றுப் போய் விடுகின்றது என்பதும் உண்மையே.
ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை:
இந்திய அமைதிப் படைகளின் ஊடகப் போரை, இக்கோர நிகழ்வை சாட்சியப்படுத்தும் வகையில், ஈழமுரசு பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், இந்தியப் படையினரால் கைது செய்யப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுதிய ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற நூல் வரலாற்றுச் சான்றாக விளங்குகிறது.
இந்திய அமைதிப் படைகளால் சிறைவைக்கப்பட்டிருந்த போது, எழுதிய எஸ்.எம். ஜி இன் சிறைக்குறிப்புகள், தமிழ்நாட்டில் ஜூனியர் விகடன் இதழில் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தொடராக வெளியாகி பெரும் பரபரப்பானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை தாய் நாடு என்றும், இலங்கையினை சேய் நாடு என்றும் அழைத்து வந்த காலங்கள் இந்தியப்படையினரின் இப்படிப்பட்ட அநாகரியமான செயலினால் , இந்திய அரசின் சுயநல நோக்கத்திற்காக ஈழ மக்களினை பல துன்பியலுக்கு உட்படுத்தப்பட்டதனை எம் தமிழ் இனத்தின் சிந்தனையில் இருந்து ஒரு போதும் அழித்து விட முடியாது என்பதே நிதர்சண உண்மையாகும் என எஸ்.எம்.கோபாலரத்தினம் எழுதிய ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறையில் குறிப்பிட்டுள்ளார்.
அமைதி காப்பதற்காகவும் , ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பதற்காக வந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறிய பின் ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை அமைந்தது. இவ் இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு இச்சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பத்திரியாளரின் பதிவாக ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை எனும் நூல் அமையப்பெற்றுள்ளது.
ஈழத்தில் தமிழர்களால் நடாத்தப்படும் ஊடகங்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் உள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர்கள் கைது, காணாமல் போதல், கொலைச் செய்யப்படல் போன்றவை தொடர்கின்றன.
பல ஊடகவியலாளர்கள் கொலைச் செய்யப்பட்டும் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இலங்கையின் ஊடகவியலாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனால் பல ஊடகவியலாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறி உள்ளனர்.
தாயகத்தில் உண்மைச் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு “ஊடகச் சுதந்திரம்” மறுக்கப்பட்டுள்ளதோடு, கொலை அச்சுறுத்தல்களும் மிரட்டல்களும் இன்னமும் உள்ளன. உண்மை நிலைப்பாடுகளை மக்களுக்கு அறியத்தர முற்படும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
முரசொலி பத்திரிகை தகர்ப்பு:
முரசொலி ஆசிரிய தலையங்கங்கள் (இதய நாதம்), திலீபனின் உண்ணா விரதக் கோரிக்கைகளை வலியுறுத்தியதாகவும் மக்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியதாகவும் இருந்தது. திலீபனுக்கு ஏதாவது நடந்தால் இந்தியாவே பொறுப்பு என எழுதப்பட்ட தலையங்கம் மீது இந்தியத் தூதுவர் கொண்டிருந்த கோபம் கலந்த விசனத்தை முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
1987 அக்டோபர் 9ஆம் திகதி இந்தியாவின் அன்றைய பாதுகாப்பு அமைச்சராகவிருந்த கே.சி.பந்த் திடீரென கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, அமைச்சர் அத்துலத் முதலி உட்பட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பை நிகழ்த்திவிட்டு அன்றிரவே இந்தியா திரும்பினார். அன்று நள்ளிரவை அண்மிக்கும் வேளையில் கொழும்பிலுள்ள ஆங்கிலப் பத்திரிகையொன்றின் ஆசிரியரான நண்பர் ஒருவர் முக்கியமான தகவலொன்றை தொலைபேசியூடாகத் தெரிவித்தார். மறுநாள் பத்தாம் திகதி வடக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்படும். விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு இரத்தாகும், இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளை சுற்றி வளைத்துப் பிடிப்பதற்காக அல்லது கொலை செய்வதற்காக பொதுமக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றும் என்று அவர் தந்த தகவல் பிரத்தியேகமான ஒரு செய்தியாகத் தெரிந்தது. அக்டோபர் 10ஆம் திகதி முரசொலியின் முன்பக்கத் தலைப்பு செய்தியாக இதனை வாசகர்கள் புரியும் வகையில் பூடகமாக எழுதியிருந்தேன் என திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் இக்கட்டுரையில் விபரித்துள்ளார்.
முதல் நாளிரவு கொழும்புப்பத்திரிகை நண்பர் தந்த தகவல் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் முரசொலி அலுவலகம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது என்ற செய்தி என்னை வந்து சேர்ந்தது. எதுவாயிருந்தாலும் தாங்கிக் கொள்வதென்ற மனநிலையில் அலுவலகத்துக்குச் சென்றபோது மிகப்பெரிய கூட்டம் அங்கு நின்றது. மூன்றுமாடிக் கட்டிடத்தின் கண்ணாடிகளும் தளபாடங்களும் ஸ்ரான்லி வீதியில் சிதறிக் கிடந்தன. நிலப்பகுதியில் அமைந்திருந்த அச்சகம் நிர்மூலமாகியிருந்தது. ஒரு சில ஊழியர்கள் மட்டும் வெளியில் அச்சத்துடன் நின்றனர். தொடர் வாகன அணியில் வந்த இந்திய இராணுவத்தினர் அங்கிருந்த அச்சகப் பிரிவு ஊழியர்களை வெளியேற்றிவிட்டு உள்நுழைந்து அச்சு இயந்திரங்களுக்குள் குண்டுகளை வைத்து தங்கள் கைங்கரியத்தை நிறைவேற்றியதை அவர்கள் கலங்கியவாறு தெரிவித்தனர்.
ஆல் இந்திய ரேடியோவின் மாநிலச் செய்தியும்,டில்லிச் செய்தியும் இந்தக் குண்டுத் தாக்குதல் பற்றி ஒலிபரப்பிய செய்தி விநோதமானது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் முரசொலி, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளை இந்திய இராணுவம் இன்று காலை முடக்கியது என்று அந்தச் செய்தியறிக்கையில் சொல்லப்பட்டது.
குண்டினால் தகர்ப்பது என்பதை இந்திய ஊடக மொழிநடையில் முடக்குவது’ என்று சொல்வது என்பதை அன்றுதான் நான் அறிந்து கொண்டேன். இராணுவம் பத்திரிகை நிறுவனங்களை தகர்த்ததை விட, அதனை மூடி மறைத்து ‘முடக்கப்பட்டது’ என்று செய்தி வழங்கிய இந்திய வானொலியின் ஊடக (சு)தந்திரமே எனக்குப் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அக்டோபர் 10 முதல் 21ஆம் திகதி வரையான நாட்கள் கொழும்பில் 9ஆம் திகதி எடுக்கப்பட்ட முடிவின்படி எதுவுமே தவறாது இடம்பெற்றன. குடாநாடு இந்திய இராணுவத்தின் குண்டு மழையாலும் வேட்டு மழையாலும் நனைந்து பிளந்தநாட்கள் இவை. இலட்சோபலட்சம் மக்கள் ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் கோட்டைச் சிறைக்குள் தன்னை இந்திய இராணுவத்தின் ‘விருந்தினராக’ தடுத்து வைத்திருந்த வேளையில், அதன் தளபதி பிரிகேடியர் மஞ்சித் சிங்கிடமும், தினசரி தன்னைச் சந்தித்த கப்டன் சுரேஷிடமும்நான் கேட்ட ஒரேயொரு கேள்வி, “ஏன் முரசொலி குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது?” என்பதுவே. எவருமே இதற்கான பதிலை இதுவரை கூறவில்லை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடெனக் கூறப்படும் இந்தியாவும், உலகின் நான்காவது பெரிய இராணுவம் எனக் கூறிக் கொள்ளும் அந்நாட்டு இராணுவமும் தமிழர் தாயகத்தில் தங்கள்வரம்பு மீற எல்லை கடந்து ஊடக சுதந்திரத்தைஅராஜகக் கரங்களால் முறித்த சம்பவங்களுக்கு இதுவரை உரிமை கோரவுமில்லை, அதற்கான நஸ்டஈடு வழங்கவுமில்லை எனவும் முரசொலிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முதன்மை ஆசிரியராகவுமிருந்த திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவிட்டுள்ளார்.
இந்தியச் சிறையில் ஈழமுரசு, முரசொலி ஆசிரியர்கள்:
இந்தியச் சிறையில் விடுதலைப் புலிகள் என சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்ளுடன், ஈழமுரசு, முரசொலி பத்திரிகையின் ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கியமான வேதனைக்குரிய ஒரு விடயம் என்னவென்றால் இலங்கை இராணுவத்தினால் அமைக்கப்பட்ட ‘பூசா’ தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்பட்ட பலரும் இந்திய இராணுவத்தினால் கைது செய்யப்பட்டது, மட்டுமல்லாது பல கஷ்டங்களையும் சந்தித்தனர் என்பதனை நேரில் பார்த்த பல வேதனையினை ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை’ எனும் நூல் விபரிக்கின்றது.
இலங்கை தமிழ் மக்களின் பேச்சுச் சுதந்திரம் அவர்களது எதிர் நோக்கும் உண்மையானப் பிரச்சினைகளை, வாழ்வியல் நிலைப்பாட்டு உண்மைகளை வெளிக்கொணர்வதில் பாரிய ஆபத்துகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ் ஊடகங்களின் செய்தி சேகரிப்புக்கு ஊடக முடக்கம் இன்னமும் தொடர்கின்ற இவ்வேளையில்,அரசுக்கு சார்பான, உண்மைகளை மறைக்கும் மறிதலிக்கும் ஊடகங்களுக்கோ முழு சுதந்திரம் கிடைத்துள்ளது.
போர்க் காலத்தில் அரச ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் ஆயுத முனையில், அப்பப்போது சில செய்திகளை தமிழ் மக்கள் வாயாலேயே சொல்ல வைத்து, அவற்றைக் காட்சிப்படுத்தி உண்மைக்கு மாறான பொய் பரப்புரைகளை மேற்கொண்டும் வந்தனர். தமிழ்ப் பகுதியில் தனி நபர் துஷ்பிரயோகம், படுகொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை என்று எவ்வளவு பல இன்னல்களை அனுபவித்திருக்கிறது.
ஆனால் அந்தப் போர்க்கால கட்டத்திலும், அதற்குப் பின்னான காலப்பகுதியிலும் இந்தத் துன்பியல் வரலாறுகள் முறையாகப் பதியப்படவில்லை என்பது வருத்தற்குரியதாகும்.
ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம்:
1987 அக்டொபர் 10ம் நாள் இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார். இச்செய்தி கூட வெளி உலகிற்கு தெரிய விடாமல் இந்தியப் படைகளால் நிதர்சனம், ஈழமுரசு, முரசொலி போன்ற ஊடகங்கள் தகர்த்து அழிக்கப்பட்டன.
தமிழ் மக்களின் எந்தக் கருத்துக்களும் நிலைப்பாடுகளும் வெளியுலகம் அறியமுடியாதவாறு ஊடக முடக்கம் இந்தியப் படைகளால் தொடர்ந்தது.
அப்பாவித் தமிழ் மக்கள் வாய் பேசா ஊமைகளாக மௌனிகளாக இந்தியப் படைகளின் போர்க் காலத்தில் வாழத் தலைப்பட்டனர். இராணுவ இயந்திரத்தின் கட்டுப் பாட்டில் தமிழ் மக்களின் குரல் எப்படி வெளிவரும்? அவர்களின் அபிலாசைகள் எங்கேயும் எப்பொழுதும் வெளிவராமல் தடுக்கப்பட்டன.
ஆயினும் வியட்நாம் போரின்போது 1974-ஆம் ஆண்டு போர்க்களத்தில், பாஃன் தி கிம் என்ற வியட்நாம் சிறுமி ஒருவள் உடலில் தீக்காயங்களோடு நிர்வாணமாக ஓடி வரும் அந்த ஒரு காட்சி உலகையே உறைய வைத்தது. அந்தப்படம் போருக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட பேருதவி செய்தது. அதனை செய்ததும் இதே போன்ற ஊடகங்கள்தான்.
இதற்கு ஒப்பாகவே ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை என்ற நூல் ஈழத்தில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த போது நிகழ்த்திய நீண்ட துன்பியல் வன்முறைக் களத்தினை விபரிக்கும் சாட்சியமாக, மிக முக்கியமானதொரு ஆவணமாக உள்ளது.