ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி உதயம்; டில்சான்,வடிவேல் சுரேஷும் இணைவு; தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் போட்டி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
‘ஐக்கிய ஜனநாயக குரல்’ என்ற பெயரில் இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் கட்சி போட்டியிடவுள்ளது.
அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை தவிர்ந்த மற்றைய அனைத்து மாவட்டங்களிலும் தமது கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று புதன்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றதுடன், இந்த நிகழ்வில் கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் தேசிய அமைப்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.டில்சான் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுடன் அந்தக் கட்சியின் பாராளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ரஞ்சன் ராமநாயக்க கூறுகையில்,
இது மக்களின் எதிர்பார்ப்புக்கான வெளிப்பாடே, மக்கள் ஊழல் அற்ற புதிய மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றத்தை எங்களால் ஏற்படுத்த முடியும் என்பதனாலேயே நாங்கள் இந்த கட்சியை ஆரம்பித்துள்ளோம். மக்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்க்கும் எதிர்பார்ப்புடன் மக்களின் குரலாக ஒலிவாங்கி சின்னத்தில் நாங்கள் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளோம்.
அந்த வகையில் நான் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளேன். 3 தடவைகள் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஆனால் கடந்த முறை ஒருவருடத்திற்குள் எனது குடியுரிமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்த சிலரால் நான் சிறைக்கு செல்ல நேரிட்டது.
எனினும் நான் விடுதலையாகி இருந்த போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டும் வந்திருந்தது. அவ்வேளையில் நான் வெளிநாட்டில் இருந்தேன். இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கேட்டதுடன், எனது சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டு இம்முறை தேர்தலில் போட்டியிடும் வகையில் இந்தக் கட்சியை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். என்னால் தேர்தலில் போட்டியிட முடியும். அதன்படி போட்டியிடுகின்றேன். பாராளுமன்த்தில் அமர முடியாது போகுமா என்றும் தெரியாது. ஆனால் என்னால் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதனால் போட்டியிடுகின்றேன்.
இப்போது பாராளுமன்றத்தில் உண்மை பேசுவோருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள. அதனை நிவர்த்தி செய்து அதிகமானோர் பாராளுமன்றத்திற்கு செல்வோம் என்ற எதிர்பார்ப்பு எனக்கு உள்ளது. பொருத்தமானவர்கள் எங்களின் வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இதன்படி அதிக ஆசனங்களை பெறுவதே எங்களின் இலக்காக உள்ளது. வடக்கு, கிழக்கிலும் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.