இளைய சமூகத்துக்காக தேர்தலில் குதிக்கிறார் அனுஷா சந்திரசேகரன்
நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்குவதற்கு மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரனின் மகளான சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தீர்மானித்துள்ளார்.
பல தரப்பினரிடம் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே அவர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார் என்று கூறப்பட்டது.
மேலும், கட்சி மற்றும் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
இது தொடர்பில் அனுஷா சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-
“எம் மலையக மக்களுடைய மாற்றத்திற்காகவும், இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்திற்காகவும் புதிய ஒரு நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவ இடைவெளி காரணமாக பல சகோதரர்களின் அழைப்பிற்கிணங்க இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்துள்ளேன்.
இளைஞர் யுவதிகள், சகோதர சகோதரிகள், எம் தாய், தந்தையர் மற்றும் கல்விமான்களின் முழு ஒத்துழைப்பு இம்முறை எனக்கு கிட்டும் என்ற நம்பிக்கையில் இம்முறை தேர்தலில் களமிறங்க முடிவு செய்துள்ளேன்.
புதிய அரசாங்கத்தோடு இணைந்து பயணிக்க நான் தயாராக இருந்தாலும் அவர்களின் கட்சி கொள்கை காரணமாக எனக்கான ஆசனம் ஒதுக்கப்படுவதில் பல உள்ளக சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.
ஆகவே எமது தலைவர் பெ. சந்திரசேகரன் அவர்களது வழித்தடத்தில் எம் தனித்துவம் காத்து எம் மலையக மக்களுக்காக புதியதொரு அரசியல் அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.
போட்டியிடும் கட்சி சின்னங்களின் விவரங்களை விரைவில் அறிவிக்கிறேன்.” – என்று கூறப்பட்டுள்ளது.