சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்த சிறீதரன்
வவுனியாவில் இடம்பெற்ற முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான ஊடக சந்திப்பை புறக்கணித்து முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வெளியேறிச் சென்ற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் நேற்று தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழுவின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் பின் ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அமர்ந்து கொண்டு குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனை அழைத்துள்ளார்.
ஆனால் அவர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்ளாமல் வெளியேறியுள்ளார்.
இதன்போது, பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கமும் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளார்.
கட்சியின் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் ரஞ்சினி ஆகியோர் சிறீதரனை கையால் பிடித்து இழுத்து அமருமாறு கோரிய போதும் அவர் அதை ஏற்காது வெளியேறிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, எம்.ஏ.சுமந்திரன் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கத்துடன் இணைந்து ஊடக சந்திப்பை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் சி.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.