கட்டுரைகள்
வலதுசாரி போக்கில் ஐரோப்பா: ஆஸ்திரியாவில் வலதுசாரி கட்சி வெற்றி… ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஆஸ்திரியா நாட்டின் எல்லைகளை மூடுவதற்கு இக்கட்சி பிரச்சாரம் செய்வதுடன், சுதந்திர கட்சி அதன் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான நிலைப்பாட்டால் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சி (FPO) நடந்து முடிந்த தேர்தலில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தீவிர வலதுசாரி கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியை இது குறிக்கிறது. ஆயினும் இக்கட்சி
நாஜி படைவீரர்களால் நிறுவப்பட்ட சுதந்திரக் கட்சியாகவும் விளங்குகிறது.
ஆஸ்திரிய பாராளுமன்ற தேர்தலில் ஹெர்பர்ட் கிக்ல் தலைமையிலான சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்றது. மத்திய-வலது ஆஸ்திரிய மக்கள் கட்சி 26.5% மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியினர் 21% வாக்குகளைப் பெற்றனர்.
ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) கடந்த ஞாயிற்றுக்கிழமை 29/9/24 நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளமை, ஐரோப்பாவில் தீவிரமாக தலையெடுக்கும் வலதுசாரி போக்கின் வெளிப்பாடகவே கருதப்படுகிறது.
தீவிர வலதுசாரிகளின் முதல் வெற்றி:
பத்து மில்லியன் மக்கள் வசிக்கும் ஆஸ்திரிய நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன.
இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர்.
இத்தேர்தலின் மூலமே இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும்.
வெளியேறும் அரசாங்கமான நெஹாமரின் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைவாதிகளின் கூட்டணியானது நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மையை இழந்தது.
2021 முதல் சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் உள்துறை அமைச்சரும் நீண்டகால பிரச்சாரருமான ஹெர்பர்ட் கிக்ல் (Herbert Kickl) ஜனாதிபதியாக உள்ளார்.
ஆனால் ஆஸ்திரியாவின் புதிய தலைவராவதற்கு, அவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஒரு கூட்டணிக் கட்சி தேவை. அரசாங்கத்தில் கிக்லுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று மற்றய போட்டியாளர்கள் கூறியுள்ளனர்.
தேசியவாத, குடியேற்றத்திற்கு எதிரான கட்சிகளுக்கு பிரபல்யம் அதிகரித்து வருகிறது. பணவீக்கம், புலம்பெயர்ந்த மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் பொதுமக்களின் விரக்தியால் தூண்டப்பட்டதாகும். இதன் விளைவே தற்போது ஐரோப்பவில் தீவிர வலதுசாரி போக்கும், ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி வெற்றியானது பரந்த ஐரோப்பிய போக்கை பிரதிபலிக்கிறது.
ஆஸ்திரியா நாட்டின் எல்லைகளை மூடுவதற்கான சபதத்தில் இக்கட்சி பிரச்சாரம் செய்ததன் மூலம், சுதந்திர கட்சி அதன் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான, தேசியவாத சொல்லாட்சிக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
அத்துடன் ஆஸ்திரியல்லாத பிரஜைகளின் கட்டாய குடியேற்றம் மற்றும் புகலிடச் சட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாடு உட்பட, குடியேற்றத்தை ஒடுக்குவதற்கு சுதந்திரக் கட்சி உறுதியளித்துள்ளது.
இதேவேளை கட்சித் தலைவர் ஆஸ்திரியாவை “வோல்க்ஸ்கான்ஸ்லர்” அல்லது மக்களின் அதிபராக வழிநடத்துவதாக உறுதியளித்துள்ளார். இது அடோல்ஃப் ஹிட்லரைக் குறிக்க ஜெர்மன் நாஜி கட்சியால் பயன்படுத்தப்பட்ட சொல்லாடலாகும்.
அவரது பிரச்சாரம் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவது, ரஷ்யா மீதான ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளில் இருந்து ஆஸ்திரியாவை விலக்குவது போன்ற வாக்குறுதிகளுடன், தேசியவாத உணர்வில் பெரிதும் சாய்ந்திருந்தது.
ஆஸ்திரியாவின் வாக்குகளின் முடிவுகள் அண்டை நாடான ஜேர்மனியில், ஜேர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றுக் கட்சியான சமீபத்திய தேர்தல்களில் காணப்பட்ட போக்கை பெரிதும் பிரதிபலிக்கிறது.
(AfD) கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. ஜேர்மனியின் மாநிலத் தேர்தல்களில் கிராமப்புறங்களில் AfD பெரிய வெற்றியைப் பெற்றது. துரிங்கியா மற்றும் சாக்சோனி மாநிலங்களில் 30% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.
ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள்:
ஐரோப்பா முழுவதும் வலதுசாரி அரசியல் கட்சிகளின் செல்வாக்கு வெகுவேகமாக உயர்ந்து வருகிறது. தாராளவாத ஜனநாயகத்துக்கு இது மிகப்பெரிய ஆபத்து என்று பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனம், மதம், நிறம், ஜாதியே உயர்ந்தது என்ற கொள்கை வைத்திருப்பவர்கள், குறிப்பிட்ட மதத்தை வெறுப்பது, சமூக நலத் திட்டங்களில் அரசாங்கம் செலவு செய்யக்கூடாது என்று நினைப்பது, சமத்துவம், சமூக நீதி, தொழிலாளர் உரிமை ஆகியவற்றை வெறுப்பது, பழமைவாதத்தை விரும்புவது, வெளிநாட்டில் இருந்துவந்து குடியேறுகிறவர்களுக்கு தன் நாட்டில் இடம் தரக்கூடாது என்பதே வலதுசாரிகளின் முக்கிய கோட்பாடாகும்.
குடியேறிகளுக்கு உரிமைகள் தரக்கூடாது என நினைப்பது, மிதமிஞ்சிய தேசியவாதம் போன்றவை வலதுசாரிகளின் கொள்கையாகும். இவற்றை தங்கள் கொள்கையாக கொண்டு செயல்படும் அரசியல் கட்சிகள், தனி நபர்களை வலதுசாரிகள் என்பார்கள். இவற்றுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பவர்கள் இடதுசாரிகள். இது ஒரு பொதுப் படையான விளக்கம்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எந்த அரசியல் கட்சியாவது தீவிர வலதுசாரிக் கோட்பாடுகளைப் பேசினால் அவற்றை மைய நீரோட்டக் கட்சிகள் அருகே சேர்ப்பதில்லை. ஊடகங்கள் அவற்றை எச்சரிக்கையோடு அணுகின.
மிதமான பழமைவாதமும், மிதமான வலதுசாரிப் பார்வையும் கொண்ட கட்சிகள் ஐரோப்பிய மைய நீரோட்டத்தில் இருக்கவே செய்தன. இவற்றை மைய நீரோட்ட வலதுசாரிகள் என்று அழைத்தார்கள்.
இன வெறுப்பை அடிப்படையாக கொண்டு புதிதாக முளைக்கும் நியோ நாசிஸ்டுகள் போன்ற தீவிர வலதுசாரிகளை, வாக்காளர்களும் நீண்ட காலமாக ஐரோப்பாவில் ஓரம்கட்டியே வைத்திருந்தனர்.
குறைந்தளவு வாக்குகளைப் பெறுவதே அவர்களுக்குப் பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால், படிப்படியாக இந்நிலை மாறி இப்போது பல ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் மைய நீரோட்டக் கட்சிகளாக மாறிவருகின்றனர்.
அத்துடன் வலதுசாரிகள் பல ஐரோப்பிய நாடுகளில் அதிகாரத்தைப் பிடித்துள்ளனர். தொடர்ந்தும் பல நாடுகளில் அதிகாரத்தைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
நாஜி படைவீரர்களால் நிறுவப்பட்ட சுதந்திரக் கட்சி:
1950 களில் நாஜி படைவீரர்களின் குழுவால் நிறுவப்பட்ட ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சி, தற்போது ஒரு கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்தும் மைய வலது ஆஸ்திரிய மக்கள் கட்சியைத் தோற்கடித்துள்ளது.
இந்நிலையில் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சுதந்திரக் கட்சி வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாகவும், ஜனாதிபதி கார்ல் நெஹாமரின் ஆஸ்திரிய மக்கள் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும் தெரிவித்தது. மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரி சுதந்திரக் கட்சி வெற்றியை நோக்கி முன்னேறியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக தீவிர வலதுசாரி கட்சி தேசிய தேர்தலில் வெற்றி பெற்றதுள்ளமை ஐரோப்பிய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை அச்சமுற வைத்துள்ளது.