அனுரவும் இந்தியாவின் உறவும் தொடருமா?…. தெய்வீகன்
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் கொழும்புக்கு வந்து, சம்பிரதாயபூர்வமாகப் பலருக்குக் கை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதிபர் அனுரவை டில்லிக்கு வரச் சொல்லியிருக்கிறார். மோடியும் இலங்கைக்கு வருவார் என்று உறுதியளித்திருக்கிறார்.
தங்களுக்கு உவப்பான ஆட்சியை கொழும்பில் கொண்டுவரமுடியவில்லை என்பது மாத்திரமல்லாமல், தங்களது பிடியிலிருந்து முற்றாகவே கழன்று தொங்கும் இலங்கையை இனி எவ்வாறு கோர்த்து எடுப்பது என்ற கூட்டான கவலை இந்தியாவுக்கிருப்பதை சங்கரது அனைத்து கொழும்பு உரையாடல்களும் பிரதிபலித்திருக்கின்றன. ஆனால், புகைப்படம் எடுத்துக்கொள்வதைத்தவிர, இந்தியாவிடம் தமக்கு இப்போதைக்கு சொல்லிக்கொள்ள எந்தத்தேவையுமில்லை என்பதுபோல, சங்கரை வழியனுப்பி வைத்திருக்கிறார்கள் கொழும்பின் புதிய ஆட்சியாளர்கள்.
இதுதான் இந்தியா “அவர்களை” நினைவுகூரவேண்டிய இடம்.
வரலாறு ஒவ்வொருவரையும் தனது வட்டத்தின் சரியான புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தி, சிறிதுநேரம் நிதானமாகத் தியானம் செய்து, தங்களை உணர்வதற்குச் சற்று அவகாசம் அளிக்கும். இது இந்தியாவுக்கான நேரம்.
“அவர்கள்” தங்களது மக்களது உரிமைக்காக மாத்திரம் போராடவில்லை. முப்பது வருடங்களுக்கு மேலாக முன்னெடுத்த தங்களது போராட்டத்தின் ஊடாக, தெற்காசிய அரசியலின் கேந்திரத்தன்மைக்கு பலம் சேர்க்கும் முக்கிய சக்தியாக “அவர்கள்” உருவாகியிருந்தார்கள். பிராந்திய சமநிலையைத் தாங்கும் சக்திகளில் ஒன்றாக அவர்கள் செயல்வலுப் பெற்றிருந்தார்கள். எடுத்தார் கைப்பிள்ளைபோன்ற கொழும்பு அரசியலை “அவர்கள்” பிடரியில் பிடித்து வைத்திருந்தார்கள். இந்தப் பிடி மறைமுகமாக இந்தியாவுக்கும் ஏனைய சக்திகளுக்கும் கொழும்பை டீல் பண்ணுவதற்கு எப்போதும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.
தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து “அவர்கள்” இந்தியாவின் பிராந்தியத் தேவைகள் பற்றிய குறிப்பறிந்து நடந்தார்கள். முன் இழைத்த தவறுகளிலிருந்து தங்களைத் திருத்தினார்கள். அதனைத் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு நற்செய்திகளாக அனுப்பிக்கொண்டேயிருந்தார்கள். தங்களது இருப்பும் பாதுகாப்பும் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரமல்ல, இந்தியாவுக்கும் இந்தப் பிராந்தியத்துக்கும் முக்கியமானது என்பதை, ஒவ்வொரு நவம்பர் மாதமும் 27 ஆம் திகதி ஆறு மணிக்கு சொல்லிக்கொண்டேயிருந்தார்கள்.
ஆனால், “அவர்களை” அடியோடு அழிக்கவேண்டும் என்பதை இந்தியா தனது கௌரவத்துக்குரிய கடமையாக எண்ணியது. அதனைச் செய்துமுடிக்காமல், தனது ‘பிராந்திய அரசியல் அதிகாரம்’ என்றைக்கும் முழுமையாகாது என்று நம்பியது. அதற்காக எந்த எல்லைவரைக்கும் போகவும் எந்த அயோக்கியரையும் நம்பவும் கூட்டுச்சேரவும் தயாராகவிருந்தது.
இறுதியில் இந்தியா தன்னாலான அத்தனை அழுக்கடைந்த வழிகளாலும் “அவர்களை” அழித்தது. சிறுகச் சிறுகச் சிதைத்து, “அவர்களோடு” ஒட்டியிருந்த பெரும் மக்கள் கூட்டத்தையும் பெருங்குழியில் போட்டு மூடியது. தீயைத் தின்று திருப்தியடைந்தது. கொள்ளி வைத்த கொழும்பிற்குக் கிரீடம் சூட்டியது.
இன்று, இலங்கையில் போர் முடிந்து பதினைந்து வருடங்களாகிவிட்டன. இற்றைவரைக்கும் “அவர்கள்தான்” இலங்கை அரசியலின் ஒவ்வொரு புள்ளியிலும் நிறைந்திருக்கிறார்கள். கிட்டத்தட்டத் தீர்மானிக்கவும் செய்கிறார்கள். (இதனை ஏழு வருடங்களுக்கு முன்னர், எனது அரசியல் கட்டுரைகளின் தொகுப்பிற்கு ‘காலியாக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கும் புலி’ – என்று பெயரிட்டிருந்தேன்) ஆனால், இந்தியாவின் இராஜதந்திரம், இன்று ஈஸ்டர் குண்டுவெடிப்பு மீள்-விசாரணையை நிறுத்துமாறுகூட கொழும்பினைக் கேட்கமுடியாத நிலையில்தான் மடங்கிப்போயிருக்கிறது.
கொழும்புக்கு வந்த ஜெய்சங்கர், சீனா போட்ட நெடுஞ்சாலை வழியாக கட்டுநாயக்க போகும்போது நிச்சயம் எண்ணிப்பார்த்திருப்பார் இந்தியாவின் உண்மையான நண்பன் யாரென்று.