வடையும் பொருளாதார வீண்விரயமும்… ஏலையா க.முருகதாசன்
இங்கிருக்கும் வடை என்ற இந்த உணவுப் பொருள் உண்ணாமல் குப்பையில் வீசுவதற்காக ஒரு விழாவொன்றில் வைக்கப்பட்ட காட்சியாகும்.உணவை வீண்விரயம் செய்வது மிகப் பெரிய குற்றம் என்பதை நாம் உணரும் காலம் எப்போது.
இந்த இரண்டு வடைகளில் அப்படியென்ன பெரிய பொருளாதாரம் இருக்கப் போகின்றது என்ற கேள்வி வரலாம்.
நாம் பொருளாதாரம் பற்றிப் பேசும் போதெல்லாம்,ஒரு நாட்டிலுள்ள தொழில்துறைகள், வணிகம்,இயற்கை வளங்கள்,அந்நாட்டுப் பணத்தின் பெறுமதி,அந்நாட்டிலுள்ள தங்கத்தின் அளவு,எரிசக்திக் கனிம வளங்கள் இவை போன்றவற்றை விபரித்தும் சர்வதேச நாடுகளில் காணப்படும் பொருளாதார மூல வளங்கள் பற்றியும் பேசுவோம் அவைதான் பொருளாதாரத்தின் அலகுகள் எனவும் பல தரவுகளை உதாரணம் காட்டிப் பேசுவோம்.
ஆனால்,நாம் அன்றாடம் சமைக்கும் உணவு வகைகளே பொருளாதார மூலகங்களே; என்பதைக் கவனத்தில் எடுப்பதில்லை.
பொருளாதார நிலகைள் எதுவும் பெரும் திரட்சியாக உருவாவதில்லை.மிக எளிமையாகச் சொல்வதானால் எமது உடல் தொட்டு இந்தப் பூமி எனத் தொடங்கி நாம் பார்க்கும் அனைத்துப் பொருட்களும் ஒரேயொரு பெரும் திரட்சிப் பொருளல்ல.
உதாரணமாக எமது பார்வைக்குத் தென்படுகிற ஒரு மரத்தை எடுத்தக் கொண்டால் அது எமது கண் பார்க்கும் ஒரு பொருளாகத் தோன்றிடினும் அது பல கலங்களால் உருவாக்கப்பட்டவையே.
ஒரு குடும்பத்தின் பொருளாதாரமும் ஒரு நாட்டின் பொருளாதாரமும் அடிப்படையில் ஒன்றுதான்.
ஒரு வீட்டுத் தோட்டத்திற்கும் தொழில் ரீதியாக வணிக ரீதியாக பணத்தை ஈட்டித்தரும் பெருமளவு பயிர்ச் செய்கைக்கு ஒப்பான பெருந்தோட்டத்தின் அடிப்படைத்தன்மையைக் கொண்டதேயாகும்.
இதை இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வதானால் ஒரு குடும்பம் தனது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்காக அக்குடும்பத் தலைவன் அவன் மனைவி சில வேளைகளில் பிள்ளைகள் என எல்லா உறுப்பினர்களும் தமது குடும்பச் செலவுகளுக்காக வருவாயை ஈட்டும் பொருட்டு உழைப்பது போல, ஒரு நாடு தனது குடிமக்களுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து அவர்களின் வாழ்க்கைக்கான வருவாயைக் கொடுப்பதற்காக தனது நாட்டில் விவாசயத்தை அதிகரிப்பதுடன் தனது நாட்டில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பு,தொழில்துறை,வணிகம்,கனிமம் உட்பட்ட இயற்கை வளங்களை பொருளாதாரமாக்குவதும் இன்னும் குறிப்பாக காலத்துக்குக் காலம் மாறிவரும் உலக இயல்புகளையும் விஞ்ஞான வளர்ச்சியையும் கவனத்தில் எடுத்து அதனையும் தனது மக்களின் நல்வாழ்வக்காக பயன்படுத்துவதுதான் ஒரு ஆற்றல்மிகுந்த அரசின் கடமையாகும்.
ஒரு தனிமனிதனாக இருப்பவனையும்(ஆண்,பெண்) ஒரு குடும்பமாயின் அக்குடும்பகத்தில் எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையானவற்றை அரசே செய்து கொடுப்பதும் அதற்காக நிதியைச் செலவழிப்பதும் அரசாங்கத்திற்கு தேவையான நிதியை பல்வேறு வழிகளில் அவர்களிடமிருந்தே பெற்றுக் கொள்வதுமாக மக்களைச் சார்ந்து அரசும் அரசைச் சார்ந்து மக்களும் ஒன்றுக் கொன்று சார்பு நிலை கொண்டு தாங்குவது போல அரசு அரசாங்கத்தை நடத்தி வருகின்றது.
பொருளாதாரக் கட்டமைப்புகள் என்பது பல அலகுகளையும் கிளைகளையும் கொண்டதாகும்.
எனினும் குடும்பம் என்ற ஒன்றை உதாரணமாக எடுத்து அக்குடும்பத்திற்கும் ஒரு அரசிற்குமான பொருளாதார இணைப்பு,வருமானம் செலவுகள் என்பன தொடர்புடையவையாகவும் அதனால் அரசின்அ வருடாந்த வரவு செலவுகளில் அக்குடும்பத்திற்கான வரவு செலவு எவ்வாறு அணுகப்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.
ஒரு குடும்பத் தலைவர் தனது குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுக்காகவும் அக்குடும்பத்தின் ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்காகவும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அவரின் வேலை என்பது அவரின் கல்வித்தரத்திற்கு ஏற்பவும் வேலை கிடைத்தல் என்ற சூழ்நிலைக்கு ஏற்பவும் வேலைகளின் தன்மை மாறுபடுகின்றது.
விவசாயம்,தொழிற்சாலைகளில்,பணிபுரிதல்,வியாபார நிலையங்களில் பணிபுரிதல்,மருத்துவமனை,பாடசாலைகளில் பணி புரிதல்,காட்டு வளங்கள் சம்பந்தப்பட்ட பணிகiளில் ஈடுபடுதல்,அரச திணைக்களங்கள நிர்வாகத்தில் பணிபுரிதல்,மீன்பிடித் தொழில்,மின்சாரத்திணைக்களம், என இன்னும் பலவுள்ளன.
இவைகளில் விவசாயத்துறையில் ஈடுபடும் ஒருவர் தனது விவசாயத்திலிருந்து பெறப்படும் பயிர்களை விற்பனை செய்து அவ்வருமானத்தை தனது வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்துகிறார்.
மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் தாம் பிடித்த மீன்களை விற்று அதன் வருமானத்தை தனது குடும்பச் செலவுக்குப் பயன்படுத்துகிறார்.
இது போன்று தொழிற்சாலையில் வேலை செய்வோர் எனவும் மேலே காட்டிய மற்றைய பணிகளைச் செய்வோர் அவரவர் வருமானத்தை வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாட்டின் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சுகளின் திட்டமிடல் வழியாகவே உததாரணமாக இங்கே முன் வைக்கப்பட்ட குடும்பங்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
எனவே குடும்பங்களில் தேவை என்பதற்கு அப்பால் வீண் விரயமாகிக் கொண்டிருக்கும் பல விடயங்களால் குடும்பமும் சிரமப்படுகின்றது,நாட்டை நிர்வகிக்க அரசக்கு பணப் பற்றாக்குறையும் எற்படுகின்றது.
ஏளிய உதாரணமாகச் சொல்வதானால் ஒரு குடும்பம் பாவிக்கும் மின்சாரத்தின் பாவனை வீண் விரயமாக்கப்படும் போது அது அந்தக் குடும்பத்தின் மின்சாரச் செலவை அதிகரிப்பதுடன்,மின்சாரத்துக்காக அதிகளவு பணத்தை மின்சார சபைத் திணைக்களத்துக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.
இதில் கவனத்தை ஈர்க்காத விடயமாக இருப்பது சிறிதளவு தொகையை மேலதிகமாகக் கட்டும் போது பரவாயில்லை என்ற மனநிலை படிப்படியாக ஒவ்வொரு முறையும் மின்சாரக் கட்டணம் வீண் விரய மின்சாரப் பாவனையால் அதிகரிக்கும் போது பரவாயில்லை என்ற அலட்சியம் அக்குடும்பத் தலைவனின் வருவாயிலிருந்து மேலதிகமாக மின்சார சபைக்குப் போய்விடுகிறது.
இதனால் தமது பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான அத்தியாவசியு தேவைகளுக்காகவும் மருத்துவச் செலவுகளையும் சரிபடுத்த முடியாத நிலைக்கு அக்குடும்பமே தள்ளப்படுகின்றது.
தேவையான இடத்தில் தேவையான போதுமட்டுமே மின்சார விளக்குகளைப் பயன்படுத்தாது இரவு நேரத்தில் எல்லா அறைகளின் விளக்குகளை எரிய விடுவது.மின்சார அடுப்புக்களைப் பாவிப்பவர்களானால் அடிக்கடி மின்சார அடுப்புகளைப் பாவிப்பது.நிறுத்திவிடக்கூடிய இண்டிகேட்டர் விளக்குகளுக்கான பொறியினை நிறுத்தாது விடுவது போன்றவையாகும்.
இது ஒரு உதாரணமே,மின்சாரம் மட்டுமே வீண்விரயமாக்கப்படுவதில்லை,தேவைக்கு அதிகமாகச் சமைத்து உண்பது போக மிகுதியை குப்பைக்குள் கொட்டப்படுவதும் நடந்து கொண்டேதானிருக்கிறது.
சிறுதுளி பெருவெள்ளம் போல சிறுதளவு வீண்விரயங்கள் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சிக்கலாக்குகின்றது.
இதனால்,மின்சார பாவனையில் வீண் விரயம் காரணமாக மின்சா ரசபை அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டியோ அல்லது பாவனையாளரைக் கட்டுப்படுத்த மின்சாரத்தின் விலையையோ அதிகரிக்க வேண்டிய நிலை அதன் வழியாக அரசுக்கு ஏற்பட்டு தனது வருடாந்த வரவுச் செலவுக் கணக்கில் மின்சாரத்தக்கு அதிகளவு நிதியை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.இந்த அதிக ஒதுக்கீடு என்பது மின்சாரத்தை வீண்விரயமாக்கியதுக்கும் சேர்த்தே ஒதுக்கப்படுகின்:றது.
மின்சார உற்பத்தி என்பது சில நாடுகளில் அனல் மின்சாரம்,எரிபொருள் சக்தியிலிருந்து பெறப்படும் மின்சாரம்,அணுமின்சாரம்,மின்சாரத்திலிருந்து பெறும் மின்சாரம்,சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் மின்சாரம்,நீர்வீழ்ச்சசிச் சக்தியிலிருந்து பெறப்படும் மின்சாரம் எனப் பலவகை உண்டு. (இக்கட்டுரையில் குறிப்பிட்ட எரிபொருளைப் பயன்படுத்தியும் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் ;என்பதை இலங்கையில் நான் கண்டிருக்கிறேன்.காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலைக்குத் தேவையான மின்சாரத்தை ஆரம்ப காலங்களில் சீமெந்துத் தொழிற்சாலையின் ஒரு பகுதியாக காங்கேசன்துறையில் அமைக்கப்பட்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் டீசல் எண்ணையினால் இயக்கப்பட்டன.காங்கேசன்துறையில் கடற்கரையை அண்டிய பகுதியில் இவ்வுற்பத்திச்சாலை இருந்தது.எரிபொருள் பெரிய எண்ணத் தாங்கிகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.எனது தந்தை சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்தபடியால் அவருடன் சென்று மின்சார உற்பத்தி நிலையத்தைப் பார்த்திருக்கிறேன்.சமீப ஆண்டுகளில் இலங்கை சுண்ணாகத்தில் எரிபொருளைப் பாவித்து மின்சாரம் உற்பதஆ;தி செய்யப்படுவதாக அறிகிறேன்.)
அனல் மின்சாரமோ,அணுமின்சாரமோ,சூரியஒளிலிலிருந்து பெறப்படும் மின்சாரமோ எல்லா நாடுகளிலும் இல்லை.
எனவே மின்சார உற்பத்தி சாதாரண விடயமல்ல.அதற்குரிய மூல உபாயம் இல்லாதுவிட்டால் தேவைக்கு அதிகமாக மின்சாரத்தை உற்பத்தி செய்வது மிகச் சிரமமானதே.
இந்தக் கட்டுரையை எழுத வேண்டுமென்ற என்ற எண்ணத்துக்கு அடிகோலியது அண்மையில் நடந்த விழாவொன்றில் உபசரிhத்துக் கொடுக்கப்பட்ட வடைகளை உண்ணாது மலசல வாசலுக்கு எதிரே இருந்த மேசையில் குப்பையில் போடுவதற்காக வைத்த காட்சியோகும்.
உலகளவிய ரீதியில் பரவிய கொரோனாத் தொற்றும்,நடந்து கொண்டிருக்கும் ரஷ்ய உக்ரைன் போரும்; உணவையும் மின்சாரத்தையும் வீண் விரயம் ஏற்படாமல் எப்படி தேவைக்கேற்ற விதத்தில் மட்டுமே பாவிப்பது என்பதை உலகளவில் சொல்லிக் கொடுத்திருக்கின்றது.
கொரோனாக் காலகட்டத்தில் வளமான ஐரோப்பிய நாடுகளில்கூட உணவுப் பொருட்களைச் சிக்கனமாக வீண்விரயமில்லாது பாவிப்பதை எல்லோருமே எதிர்கொண்டிருந்தோம்.
மனித வாழ்வுக்குத் தேவையான எல்லாமே தேவைக்கேற்ற குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு வீண்விரயம் ஏற்படாதவாறு சிக்கனமாக பாவிப்பதன் மூலம் ஒரு நாட்டினது பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு இதுவும் உதவுகின்றது.
அலட்சியப் போக்கினால் ஏற்படும் வீண்விரயம் அரசைத் தள்ளாட வைப்பதுடன் விலைவாசி ஏற்றங்களுக்கு வழிவகுகின்றது.தவிர்க்க முடியாத நிலையில் மக்களின் வாழ்க்கை எவ்விதமான தடையுமின்றுp நடைபெற வேண்டுமென்பகதற்காக மற்றைய நாடுகளில் கடன்பெற வழிவகுக்கின்றது.
நாடு மட்டுமல்ல குடும்பமே வீண்விரயச் செலவினாலும் கடன்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
ஜேர்மனியில் ஒரு நகரில் நடைபெற்ற விழாவொன்றில் இந்த வடைகளை உண்ணாது குப்பையில் போடுவதற்காக வைக்கப்பட்ட காட்சியூடாக எனது மனதில் தோன்றிய சிந்தனைத் தொடரே இக்கட்டுரையாகும்..
இதைப் போல எம்மவரின் பொது விழாக்கள் தொட்டு குடும்ப நிகழ்வுகள் வரை உணவை வீணடித்துக் குப்பையில் போடும் சீர்கேடு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது.
விழாவை நடத்தியவர்கள் பலரிடம் பலகாரம் செய்து கொண்டு வரும்படி கேட்டிருப்பார்கள்.விழாக்காரர்களோடு தொடர்புடையவர்களில் உதாரணமாக ஒருவர் நூறு வடை சுட்டுக் கொண்டு வருகிறேன் என ஒப்புதல் அளித்து வடை செய்வதற்கான முக்கிய மூலப் பொருட்களான உழுந்து,பச்சையரிசி,எண்ணை,வடைக்குப் போடுவதற்கான சரக்கு வகைகள் வெங்காயம் மிளகாய் என்பதுடன் தனது வீட்டிலிருந்த உப்பிலிருந்து அவர் சுட்டுக் கொண்டு வந்த வடைகளுக்குப் பயன்படுத்தியிருப்பினும்,அது சில மில்லிகிராமாக இருப்பினும் பல மில்லிகிராம்கள் கொண்ட உப்பின் விலையில் அவர் பயன்படுத்திய உப்பின் மில்லிகிராமும் இருக்கவே செய்யும்.வடைகளைச் சுடுவதற்கு பயன்படுத்திய எரிவாயுவோ அல்லது மின்சாரமோ அதுவும் பணச் செலவுதான்.
நூறு வடைகளைச் செய்வதற்காக அவர் ஒரு குறிப்பிட்ட பணத்தைச் செலவு செய்திருப்பார்.இது அவரின் வருமானத்திலிருந்து செலவழிக்கப்பட்ட பணமாகும். அன்றாட வாழ்க்கைச் செலவிலிருந்து மேலதிகமாக செலவழிக்கப்:பட்ட பணமுமாகும்.
தனது குடும்பத்திற்கான மாதாந்தச் செலவில் இது அவருக்கு ஏற்பட்ட மேலதிகச் செலவாகும்.
இவ்வாறு செலவு செய்து வடை செய்து கொடுத்தவரின் உதவியை எண்ணிப் பார்க்காது,இந்த வடைகளுக்கான செலவுகளை எண்ணிப் பார்க்காமல்,அந்த விழாவிற்கு வந்தவர்களை உபசரித்து ஒவ்வொருவருக்கும் வடைகளைக் கொடுத்து உபசரித்தவரின் பண்பையும் அலட்சியம் செய்தவர்கள் பெருந் தவறைச் செய்துள்ளார்கள் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
ஒரு குடும்பத்தில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி போன்றதே ஒரு நாட்டுக்கும் மக்களின் அலட்சியத்தினால்,வீண்விரயத்தாலும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
அரசின் நல்ல திட்டங்களும்,அரசின் நிர்வாகத்தில் அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவதிலும்,மக்களும் அரசும் நாட்டுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்து வீண்விரயம் செய்யாதிருந்தால் நாடு வளமான நாடாக வளரும்.
வீண்விரயம் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தாது விடினும் சிறுதுளிகள் பெரும் வெள்ளமாகி அணை உடைப்பது போல மனிதர்களுக்கும் நாட்டுக்கும் ஆபத்தானதே.