கதைகள்

“பாகிஸ்தானி பிரியாணிக் கடை” … சிறுகதை- 87…. அண்டனூர் சுரா.

டெல்லி அசோக் மந்தர் பகுதியில் அக்கட்டடம் இருந்தது. அப்பகுதியின் பாழடைந்த கட்டடம் அது ஒன்றுதான். அக்கட்டடம் பார்க்க மசூதியைப் போன்றிருந்தது. ஆனால் அது மசூதி அல்ல. மசூதியைப் போன்ற கட்டட வேலைப்பாடுகள் கொண்ட பழைய காலத்து உணவகம் அது. கட்டடத்தில் இல்லாத இரண்டு ஸ்தூபிகள் இது வழிப்பாட்டுத் தளம் இல்லாத வேறொன்று எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அதன் மேற்கூரையும் திமில் போன்ற குடைவும் பார்க்க ஒரு வழிபாட்டு ஆலயம் போன்றிருந்தது. முகலாயக் கலை அம்சத்துடன் கட்டப்பட்டிருந்த அக்கட்டடத்தின் பெரும்பகுதி சாயம் இழந்துபோய் மேற்பகுதியின் ஒரு பகுதி இடிந்து வெளிப்புறமாக விழுந்துவிட்டிருந்தது.

இந்திய சுதந்திர காலத்தில் இப்பகுதியின் மிகப்பெரிய உணவகம் இதுதான். தென் இந்திய, வட இந்திய, மேற்கத்திய உணவுகள் கிடைக்கும் உணவகம். இந்த உணவகத்திற்கென்று வெளிநாட்டு வாடிக்கையாளர் நிறைய பேர் இருந்தார்கள். அந்தளவிற்கு பிரசித்திப்பெற்ற உணவகம் அது. இன்றைக்கு அக்கட்டிடத்தைச் சுற்றிலும் அடைசலாக புல், பூண்டு, புதர்கள். மேல், கீழ்த் தளத்தில் ஆலம், அரசு கன்றுகள் முளைத்திருந்தன. மேற்கூரையில் விட்டிருந்த ஆணி வேர் தரை வரைக்குமாக வளர்ந்துவிட்டிருந்தது. மேற்தளத்தில் வளர்ந்திருந்த மரங்களினூடே கட்டடத்தைப் பார்த்தால் மரவேர்களில் கட்டடம் தொங்குவதைப் போன்றிருக்கும்.

அன்றைக்கு இப்பகுதியின் பிரமாண்டக் கட்டடம் இதுதான். உல்லாச விடுதியாகவும் இருந்தது. ஆனால் இன்றைக்கு அக்கட்டடத்தை விடவும் பெரிய கட்டடங்கள் அதைச் சுற்றி முளைத்துவிட்டிருந்தன. அத்தனையும் வானளாவிய கட்டடங்கள். அவ்வுயரத்திற்கு முன்னால் இக்கட்டடமும் அதன் குவிந்து வளைந்த கோபுரமும் சிறியதாகி விட்டிருந்தது.
டெல்லியில் எந்த மூலையில் இந்து முஸ்லீம்களுக்கிடையில் கலவரம் நடந்தாலும் இக்கட்டடத்தின்மீது தவறாது தாக்குதல் நடந்தேறும். அப்படியான இடத்தில்தான் இக்கட்டடம் இருந்தது. எத்தனைபேர் சேர்ந்து தாக்கினாலும் கட்டடத்தின் கம்பீரம் சற்றும் குன்றாமல் இருந்தது. அதன் தலையில் முகலாய கால கட்டடக்கலையை சுமந்துகொண்டு அது நிற்கும் கம்பீரமே தனி அழகுதான்.

அக்கட்டடம் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானதன்பிறகு அக்கட்டடத்தின் வழியே கிடைக்கும் வருமானம் ஒரு கட்டத்தில் அதைச் சீர்செய்வதற்கே போதுமானதாக இருந்தது. இதற்கு மேலும் இதை நிர்வகிக்க முடியாது என்று உணர்ந்த அக்கட்டடத்தின் உரிமையாளர் கட்டடத்தின் முன்பு பெரிய பூட்டினைத் தொங்கவிட்டு வேறொரு நகரம்நோக்கி இடம்பெயரலானார். அவரால் தொங்கவிடப்பட்டப் பூட்டு பல வருடங்கள் திறக்கப்படாமலேயே இருந்தது.

அக்கட்டடத்தின் உரிமையாளர் உருது பேசக்கூடியவர். பெரிய செல்வந்தர். இதுமாதிரியான உணவகம் அவருக்கு நான்கு நகரங்களில் இருந்தன. சொகுசு உணவகம் தவிர வேறு பல தொழில்களையும் அவர் செய்துவந்தார். மற்ற தொழில்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க அவர் அந்த முகலாய வடிவிலான கட்டிடத்தை விற்கும் முடிவினை எடுத்தார். அவருக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் நல்ல விலைகொடுத்து அக்கட்டடத்தை வாங்கினார்.
அக்கட்டடத்தை விலைக்கு வாங்கியவர் அதை அடியோடு தகர்த்துவிட்டு இந்திய – முகலாயக் கட்டடக் கலை அம்சத்துடன் கூடிய ஒரு சொகுசு உணவகத்தைக் கட்டலாமென நினைத்தார். அதை அவர் வாங்கிய நாட்களில் இடித்திருந்தால் இடித்திருக்கலாம். அவர் பல ஆண்டுகள் கடந்து இடிக்கலாம் என்கிற முடிவுக்கு வருகையில் அக்கட்டடத்தைச் சுற்றிலும் நிறைய கட்டடங்கள் முளைத்துவிட்டிருந்தன. கட்டடங்களை விடவும் அக்கட்டடத்திற்கு வெளியிலிருந்த பிள்ளையார் கோயிலும் இடது புறமிருந்த அனுமார் கோயிலும் என்மீது சிறு துரும்பேனும் விழாமல் இடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும்விதமாக நின்றன. அக்கட்டத்தை இடிக்கவேண்டும் என்று ஆட்கள் அங்கு செல்கையில் ஒருவிதமான பதட்டம் அங்கு நிலவத் தொடங்கியது.

அக்கட்டடத்தை இடித்துவிட உரிமையாளர் படாதபாடுபட்டார். இடிமான நிறுவனங்கள் தினமும் அக்கட்டடத்தைப் பார்த்து சென்றார்கள். கட்டுமானப் பொறியாளர்கள் அக்கட்டடத்தை நான்கைந்து சுற்று வந்து பார்த்து சென்றார்கள். கட்டடத்தை இடிக்கமுடியவில்லை, ஏமாற்றம்தான் மிஞ்சியது. அடுத்தடுத்த கட்டடங்களுக்கு ஒரு பாதகமுமில்லாமல் அதைத் தகர்த்தெறிவதற்கான ஒரு வழியும் இருப்பதாக தெரியவில்லை. அருகாமை கட்டடங்களை விடவும் பெரிய அச்சுறுத்தலைக் கொடுத்தது பிள்ளையார், அனுமார் இரு கோயில்களும்தான்.
இடிக்கப்பட வேண்டிய கட்டடமாக இருந்த அக்கட்டடத்தின் உள்ளரங்கம் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே கிரிக்கெட் போட்டி நடத்தி முடிக்கும் அளவிற்குப் பரந்து விரிந்த பரப்பளவைக் கொண்டிருந்தது.

யானையைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டதைப்போல அதன் தூண்கள். மலையைக் குடைந்ததைப் போல மேற்கூரைகள். கூரையின் ஓவியங்களும் ,சித்திரங்களும் அதன் வேலைபாடுகளும் பார்க்கிறவர்களை மயக்கத்தில் ஆழ்த்தின. அதன் நுண் கலை வடிப்புகளில் நூலாம் படைகள் போர்வைப் போல படிந்துபோயிருந்தன.
அனுமார் கோயிலின் உயரம் அக்கட்டட உயரத்திற்கு இருந்தது. கோயிலின் கோபுரத்தில் புதுப்பித்தல் பணி நடந்துகொண்டிருந்தது. அதற்காக நான்குபுறமும் சாரம் கட்டப்பட்டிருந்தது. சாரம் இடிக்கப்பட வேண்டிய கட்டடத்தின் சுற்றுச்சுவரை ஒட்டியிருந்தது.

அக்கட்டடத்திற்கு வெளியே அதன் முகப்பிலிருந்த பிள்ளையார் மிகச்சிறிய கோயிலாக இருந்தது. அதன் உயரம் இரண்டு ஆள் மட்டம் அளவிற்கே இருந்தது. இக்கட்டடம் இடிக்கப்பட்டால் பிள்ளையார் கோயில் சேதாரம் அடையவே செய்யும். இரு கோயில்களுக்கும் ஒரு சேதாரமும் இல்லாமல் இடிக்க வாய்ப்பில்லாத அக்கட்டடத்தைத் தான் வைத்திருப்பது வீண் என்று உணர்ந்த அதன் உரிமையாளர் ஒரு வெளிநாட்டு நண்பரின் உதவியுடன் ஒரு வணிகரிடம் விற்றுவிட்டிருந்தார். அதை வாங்கிய வணிகர் அதை இடித்தால்மட்டும்தான் வாங்கிய விலைக்கேனும் இந்த இடத்தை விற்கமுடியும் என்பதை உணர்ந்து இதை எப்படியேனும் இடித்தாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளானார். அதற்கான வேலையில் முழுமூச்சாக இறங்கினார்.

முதற்கட்டமாக அவர் இரு கோயில் நிர்வாகத்துடனும் பேசிப்பார்த்தார். “ உங்கள் கட்டடம் நீங்கள் இடிக்கிறீர்கள். இதை ஏன் எங்களிடம் தெரிவிக்கிறீர்கள்? உங்கள் கட்டடம் நீங்கள் இடித்துக்கொள்ளுங்கள். ஆனால் இடிக்கும் கட்டடத்தின் ஒரு தூசி துரும்பு எங்கள் கோயில்மீது விழக்கூடாது. மீறி விழுந்தது என்னவேண்டுமானாலும் நடக்கும்…” என்பதை மிரட்டுவதைப் போல சொல்லிவிட்டிருந்தார். இதைக் கேட்டதும் கட்டட உரிமையாளர் இடிக்கும் முயற்சியிலிருந்து பின்வாங்கினார்.

இரண்டு மாதங்கள் கழித்து திரும்பவும் அருகிலுள்ள கோவில் நிர்வாகத்தினரிடம் பேசினார். கட்டடம் இடிக்கையில் கோவிலில் சேதாரம் நடந்தால் இழப்பீடு தருவதாகப் பேசினார். மசூதி போன்றிருக்கும் கட்டடத்தின் இடிபாடுகள் எங்கள் ஆலயத்தின்மீது விழவே கூடாது என்று உறுபட சொல்லிவிட்டிருந்தார்கள். அத்துடன் அவர் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.
என்ன நடந்தாலும் சரி, கட்டடத்தை இடிப்பது உறுதியென இடிப்பு இயந்திரங்களைக் கொண்டுவந்து அக்கட்டடத்திற்கு முன்பு நிறுத்தினார். இயந்திரங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டவர்கள் அந்த இடத்தைச் சூழத் தொடங்கினார்கள். இடம் சற்றுநேரத்தில் பெரும்பதட்டத்திற்கு உள்ளானது. நமக்கு ஏன் வீண் வம்பு என்று இயந்திரக்காரர்கள் இயந்திரத்தை எடுத்துகொண்டு தலை தெறிக்க ஓட்டமெடுத்தார்கள்.

அக்கட்டடத்தின் ஒரே குறை கட்டடத்திற்குள் நுழைவதற்கு போதுமான நுழைவுவாயில் இல்லாத ஒரு குறைதான். ஒரு குதிரை நுழையும் அளவிற்கே அதன் வாசல் இருந்தது. அந்நுழைவுக்குள் ஒரு இயந்திரத்தால் நுழைய முடியாத நிலை இருந்தது.
கட்டடத்தை எப்படி இடிப்பது என்கிற ஆலோசனையில் இறங்கினார். ஒரு நாள் டெல்லியில் வெளியாகும் அனைத்துத் தினசரிகளிலும் ஒரு பக்கம் அளவிற்கு விளம்பரம் கொடுத்தார். அருகிலிருக்கும் கட்டடத்திற்கு ஒரு சேதாரமில்லாமல் இடித்து தரைமட்டமாக்கும் நிறுவனத்திற்குப் பரிசும் மூன்று மடங்கு தொகையும் தரப்படும் என அறிவித்தார். அவர் விளம்பரம் கொடுத்த நாட்கொண்டு ஒவ்வொரு நிறுவனமும் கட்டடத்தை எட்டிப்பார்த்தார்களே தவிர யாரும் அதன் மீது கை வைக்கவில்லை. ஒரு வருடக்காலம் அப்படியே சென்றது. பல கோடிகள் அதற்குள் விழுந்து செரிமானமுமில்லாமல் இருக்கும் அக்கட்டடத்தை அவர் இன்னொருவரிடம் விற்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

நான்காவதாக இக்கட்டிடத்தை ஒரு வெளிநாட்டுக்காரர் விலைக்கு வாங்கினார். அவர் இந்தியர்களின் நுகர்வோர் கலாச்சாரம் எத்தகையது என்று நன்கு அறிந்தவர். அவர் அக்கட்டடத்தை விலைக்கு வாங்கியதும் அதைச் சீரமைக்கும் வேலையில் இறங்கினார். கட்டடத்தின்மீது முளைத்திருந்த புல், புதர் செடிகளை வேரோடு களைந்து ஒட்டடையடித்தார். வெடிப்புகண்ட இடத்தில் மேற்பூச்சு பூசினார். தினமும் இருபது பேர் இரவு பகல் பாராமல் கட்டடத்தைச் சீரமைக்கும் வேலையில் இறங்கினார்கள். இரண்டு மூன்று முறை கட்டடத்திற்கு வெள்ளையடித்தார்கள். அதன் மீது வண்ணப்பசை பூசினார்கள்.

பழைய பாழடைந்த கட்டடம் ஒரு வாரக் காலத்தில் புதுக்கட்டடமானது. போகிறவர்கள் வருகிறவர்களின் பார்வையைச் சுண்டி இழுத்தது. இன்றோ, நாளையோ தானாக இடிந்துவிழப் போகிற கட்டடத்திற்கு இவர் வண்ணமடிப்பதைப் பாரும் என்று கிசுகிசுத்துக்கொண்டார்கள். அந்த வெளிநாட்டுக்காரர் யார் பேச்சையும் காதுகொடுத்து கேட்கவில்லை. கட்டடத்தை எப்படியெல்லாம் சீரமைக்க முடியுமோ அப்படியெல்லாம் சீரமைத்தார்.

அடுத்ததாக அவருடைய கவனம் கட்டடத் திறப்பு விழாவை நோக்கித் திரும்பியது. கடைத் திறப்புக் குறித்து விதவிதமாக விளம்பரம் செய்தார். கடை திறப்புவிழா காணப்போகும் நாள் நெருங்கியிருந்தது. கடை திறப்புக்கு இரண்டு நாட்கள் இருக்க கடையின் முகப்பில் பெரிய எழுத்துகளால் கடையின் பெயர் பலகையை நிறுத்தினார். அதை மின்விளக்குகளால் அலங்கரித்தார். கடையின் பெயர் ஒரு விதமான பதட்டத்தைக் கூட்டியிருந்தது.

கட்டடத் திறப்பு விழாவிற்கான வேலைகள் முழுமூச்சாக நடைபெற்றன. கட்டடத் திறப்பு விழா பற்றிய விளம்பரங்கள் எல்லா தினசரிகளிலும் தொடர்ந்து வந்தபடியிருந்தன. விளம்பரத்தைக் கண்டிருந்த பலர் கும்பலாக அக்கட்டடத்திற்கு வரவும் பார்க்கவும் திரும்பிச் செல்வதுமாக இருந்தார்கள்.

கடை திறக்கப்படவிருந்த முதல் நாள் நகரத்திலிருந்து டெல்லியிலிருந்து வெளியான அனைத்து தினசரிகளும் இப்படியான ஒரு செய்தியை வெளியிட்டன. “புதிதாகத் திறக்கப்படவிருந்த பாகிஸ்தானி பிரியாணிக் கடைக்குப் பலத்த எதிர்ப்பு. ஆயுதங்களுடன் கடைக்குள் நுழைந்த பெருங்கும்பல் கடைமீது தாக்குதல் நடத்தி ஒரே இரவில் கடையை இடித்து தரைமட்டமாக்கினர்.”

கட்டடத்தின் உரிமையாளர் தூரத்தில் நின்றபடி இடித்து தரைமட்டமாகியிருந்த கட்டடத்தைப் பார்த்தார். ஒரு நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டிருந்தால்கூட இவ்வளவு கச்சிதமாக இதை இடித்திருக்கமுடியாது, என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவர் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.