கட்டுரைகள்

பத்து ஆண்டுகளின் பின்னர் ஜம்மு – காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(காஷ்மீர் 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது)

காஷ்மீர் பிரச்சனை இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே நிலவி வரும் நீண்ட கால நில உரிமை தொடர்பான பிரச்சனையே முக்கியமானதாகும். ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது என்பதே உண்மை.

மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர்:

பத்து ஆண்டுகளுக்கு பின் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு,
ஜம்மு காஷ்மீரில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டுமே தற்போதய தேர்தல் நடைபெறுகிறது.

2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் இந்திய நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டது.

அத்துடன் 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பின்னர் 2020ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் 114 சட்டமன்றத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் 24 சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில் உள்ளது.

மூன்று போர் நிகழ்ந்த காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீர் பிராந்தியத்தின் மேற்கு பகுதிகளையும், வடக்குப் பகுதிகளையும் ஜூலை 1947-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததது. இப்பகுதிகளை ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் இப்போதும் வைத்துள்ளது.

மற்றொரு அயல் நாடான சீனா ஜம்மு காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்சய் சின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனது கட்டுப்பாட்டில் இப்போதும் வைத்துள்ளது. 1947இன் பின்னர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைய ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

காஷ்மீர் 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது.

சிறப்பு அந்தஸ்து ரத்து:

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு அந்த மாநிலம் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு பத்து ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 90 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

காஷ்மீர் மாநில முதல்கட்ட தேர்தல் கடந்த 18 ஆம் தேதி நடந்தது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், 25/9/24இல்்2 வது கட்ட தேர்தல் நடந்தது. 6 மாவட்டங்களில் உள்ள 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 57.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.

மூன்றாவது கட்டத் தேர்தல் கடந்த அக்டோபர் முதலாம் திகதி நடைபெற்றது. முழுமையாக இத்தேர்தலில் 65.8% வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட சர்ச்சைகளின் பின்னர், நவம்பர் 2018ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, 20 டிசம்பர் 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது. மாநிலத் தகுதி இழந்த பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.

2014 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்:

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

நவம்பர் 2014ல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் முப்தி முகமது சயீத் தலைமையில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசு அமைத்தது. அப்போது முப்தி முகமது சயீத் முதலமைச்சரானர்.

7 ஜனவரி 2016 முப்தி முகமது சயீத் காலமானார். பின் மெகபூபா முப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். ஜூன் 2018ல் முதலமைச்சர் மெகபூபா முப்தி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது.

அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. நவம்பர் 2018ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது அறிந்ததே.

மீள பாரதிய ஜனதா ஆட்சி?

ஜம்மு காஷ்மீரின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் தாரிக் ஹமீது கர்ரா ஒருவராவார். ஸ்ரீநகரைச் சேர்ந்த மத்திய ஷால்டேங் தொகுதியில் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா போட்டியிடுகிறார். மெஹபூபா முஃப்தியின் தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியில் பொறுப்பு வகித்தார். பின்னர் பாஜகவுடன் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி அமைத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் கடந்த 2017-ல் இணைந்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் உமர் அப்துல்லா 2024 சட்டப்பேரவை தேர்தலில் மத்திய காஷ்மீரில் உள்ள இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். மூன்று தலைமுறைகளாக அப்துல்லாவின் குடும்பத்தார் வாகை சூடிய கந்தர்பால் தொகுதி அதில் ஒன்றாகும்.

ஜம்மு காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா கடந்த 2014-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மீண்டும் அதே தொகுதியில் இம்முறை களம் காண்கிறார். இருப்பினும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் தேசிய மாநாட்டு கட்சியின் சுரிந்தர் சவுத்ரிக்கும் இவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.