தொன்மம்…. கனடா சிறு கதை-05… எஸ்.ஜெகதீசன்
கனடாவின் சஸ்காட்சுவான் மாநிலத்தில் ஒரு குக்கிராமம் – மேரிவெல். கனடாவிலுள்ள முதற்குடி மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று. சர்வமும் சரக்கு மயம். குடியின்றி அமையாத சிறு உலகம். போதை விளையும் பூமி. காலாகாலமாய் கஞ்சா அனுமதிக்கப்பட்ட பிரதேசம்.
751 முதற்குடி மாணவர்களது எலும்பின் எச்சங்களை நில ஊடுருவி கதிரலை மூலம் மேரிவெல்லில் கண்டு பிடித்தார்கள் என்ற உலகை உலுப்பிய செய்தி 2021 ஆண்டின் நடுப்பகுதியில் பலரைப் போலவே எம்மையும் அங்கு இழுத்துச் சென்றது.
காட்டெருமைகளின் சிறிய மந்தையொன்றின் மீது ஊளையிட்டவாறே பதுங்கியிருது பாய்ந்த ஓநாய் கூட்டத்தை தெறித்து ஒட விட்ட துப்பாக்கி வேட்டின் தொடர் ஒலி எமது காரை நிறுத்த – கல்லெறி தூரலிருந்த துப்பாக்கிதாரரின் கவனம் எம் மீது திரும்பியது.
ஓ! உயிரோடிருக்கும் எம்மைப் பற்றி எவ்வித அக்கறையும் உங்களுக்கில்லை. ஆனால் 15ம் நூற்றாண்டில் மதம் பிடித்தவர்கள் நாடு பிடித்ததால் மேற்கொண்ட படுபாதக கொலைகளின் நிராகரிக்க முடியாத அடையாளமாகிவிட்ட வதிவிட பாடசாலை வளவில் கண்டெடுக்கப்பட்ட 751 முதற்குடி மாணவர்களது எலும்பின் எச்சங்களை ‘விடுப்பு’ பார்க்க வந்தீர்களாக்கும் என்றவாறே எமக்கருகில் வந்தார்.
கண்கள் சிவந்திருந்தன.
புதிதாக யாரைக் கண்டாலும் இதைத்தான் சொல்லுவார் போலும்!
மாட்டை பாதுகாக்கத் தெரிந்த உங்களுக்கு நாட்டை பாதுகாக்கத் தெரியாமல் போனதேன்?” என்றது எங்களில் ஓர் அவசரக்குடுக்கை.
அவன் ஏலவே கொதியில் உள்ளான். ஆபத்தே அருகில் வா என ஏனடா கை தட்டிக் கூப்பிடுகின்றாய் என அவசரகாலப் பிரகடனம் செய்தது இன்னொன்று!
என்னது எனது வீட்டில் எனது கைப்பக்குவத்தில் தயாரித்த பியர் வேண்டுமா? அல்லது சிகரட் வேண்டுமா?
சிகரட்டை வாயில் வைத்துக் கொண்டு இஞ்சாலை எட்டிப்பார்த்தால் சொர்க்க லோகம் தெரியும். பியரை வாயில் வைத்துக் கொண்டு அங்காலை எட்டிப்பார்த்தால் எம லோகம் தெரியும் என்றான் போதை தலைக்கேறிய அந்தக் குடிமகன்.
சரக்கு கொடுத்தால் சமாதானம் என்பது உவர்களின் சமூகவியல். ரொரன்ரோவிற்கு அருகே உள்ள உவர்களது மாதிரி குடியிருப்புக் கிராமங்களில் இதனை அவதானித்துள்ளேன் என காரோட்டியவரின் அனுபவம் பேசியது.
பொலிசு வருமாமோ? டேய் நீங்கள் எல்லாம் வந்தேறு குடிகளடா. எங்களிடம் அநாதியிலை இயற்கை வளம் மிகுந்திருந்தது. நில வளம் இருந்தது .நீர் வளம் இருந்தது. நோ பஞ்சம். நோ திருட்டு. நோ பொலிஸ். நோ அப்புக்காத்து. நோ நீதவான். அமெரிக்கா வந்த உவன் கொலம்பஸை கேட்டுப்பார் அல்லது கனடா வந்த உவன் ஜாக் காடியரை கேட்டுப்பார். எங்கட நீதி எங்கட நேர்மை பற்றி கட்டுக்கட்டாய் சொல்லுவான்.
தன் பாட்டுகே பிதற்றினார் வந்தவர்.
கனடாவில் தற்பொழுது ஒரு கோடி முதற்குடி மக்கள் வாழ்கின்றனர். ஆதியில் 150 மொழிவழக்கும் வழிபடும் வழிகளும் இருந்தன!
வட்டார வழக்கில் கணக்கிலெடுத்தால் சுமார் 750 முதல் 850 வரை தேறும்.
அத்துடன் செவ்விந்தியர் அல்லது இண்டியன்ஸ் அல்லது எஸ்கிமோ என்ற பிரயோகங்களை இழிவாக கருதியதால்தானே மதிப்புடன் முதற் குடிகள் என்று அழைக்கின்றோம். அப்படித்தானே? என்றோம்.
எம்மிடமிருந்த தங்கம் வெள்ளி கனிமங்களை அபகரித்தான். அவனுக்கு உருளை கிழங்கை சோளத்தை கடலையை மிளகை புகையிலையை ரப்பரை அன்னாசியை அளித்தமைக்காக எம்மை அழித்தான். நாம் உணவளித்த எமக்கு உணவான காட்டெருமை இனத்தை நிர்முலமாக்கினான். உவன் வெள்ளைக்காரன் இல்லை. கொள்ளைக்காரன்.
நாம் ஒன்றை பேசுவதும் சம்பந்தமில்லாமல் அவர் பிறிதொன்றை தொடுவதும் ஏன் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்ததால் வேடிக்கையாகவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது.
கொடூரங்களை அறிந்தவர்கள் அதனை மறந்து வாழ முடியாது என்பதால் நீங்கள் வந்துள்ளீர்கள் என்பது தெரிகின்றது என்றவாறே வந்த ஓரிளைஞர் தன்னை அருகில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் தொல்லியல் பேராசிரியர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
உலகின் முதலாவது இனப் படுகொலை உலகின் முதலாவது பண்பாட்டுக் கொலை என துயரங்களை நினைவு கூர்வதுடன் மட்டும் அல்ல இந்த இடம் உலதுக்கே ஒரு பாடம். ஒருவேளை உங்களின் ஆக்ரோஷம் புதிதாய் ஆரம்பிக்கப் போகும் அடிவாரமும் இதுவாயிருக்லாம் என்றோம்.
மெத்தச்சரி!
உலகம் இப்பொழுது கிண்டிக்கிளறுவது இந்த ஆதாரங்களைத்தான்.
அண்ணளவாக இரண்டு லட்சம் பிள்ளைகளை கதறக்கதற பெற்றோரிடமிருந்து பலவந்தமாகப் பிரித்து மூன்று நான்கு வருடங்கள் தொலை தூரத்தில் வதிவிட பாடசாலை விடுதிகளில் அடைத்து மதம் மாற்றிய ரோமன் கத்தோலிக்கம் மீறியோரை வதைத்து படுகொலை செய்ததற்தான ஆதாரங்கள இவை.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள காம் லூப்ஸில் 215 புனித யூஜின்ஸில் 182 மானிடோபாவில் உள்ள பிரான்டனில் 78 இப்பொழுது நீங்கள் நிற்கும் இந்த மேரிவெல்லில் 751 என முதற்குடி மாணவர்களது எலும்பின் எச்சங்களை நில ஊடுருவி கதிரலை மூலம் 2021 ஆண்டின் நடுப்பகுதியில் கண்டு பிடித்தார்கள். இருபது வருட திட்டத்தில் வெளிவராதவையும் வெளி வந்துவிடும். என முடித்தார்.
சூரியனை வழிபட்ட தமது மூதாதைக்கு பின்னர் சூரியன் தெரியாமல் போன நாட்களே நீண்டதாக ரொரன்ரோவில் முதற்குடிகள் வாழும் பகுதியொன்றுக்கு அண்மையில் சென்றபோது ஒரு முதற்குடிமகன் சுட்டெரித்தது நினைவில் வந்தது.
நீங்கள் வந்த இச்சமயத்தில் – உங்கள் மூதாதை வழிபட்ட அச் சமயம் பற்றி சொல்லுங்கள் என்றோம்.
இறைவனை அவர்கள் நேசித்தார்களா என்பதை விட இறைவன் அவர்களை நேசித்தார் என்பதே பொருத்தமானது. எதன் மூலம் வாழ்ந்தனரோ அதனை வணங்குவதை வழக்கமாக்குவது அவர்களிடம் கைவிடப்படாத அறமாயிருந்தது. நிலமோடிகளான அவர்கள் ‘குறுக்கு வழியில் செல்வதே தூரம்’ என்பதனை தெய்வ வாக்காக கருதினர்.
அந்த ஊரோடிகள் கண்டதையும் வழிபட்டனர். கண்ட கண்ட இடமெல்லாம் சேவித்தனர்.
அவர்களிடமிருந்த சுமார் 800 இனக்குழுக்களும் விதம் விதமாகவே கும்பிட்டனர்.
சூழலுக்கு ஏற்பவே பிரார்த்தித்தனர்.
அவர்கள் நெருப்பையும் நீரையும் மண்ணையும் வணங்கினர். மரம் செடி கொடிகளை துதித்தனர்.
அவர்களிடம் இயற்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் சக்தியை கண்ட மென்மை வழிபாடுமிருந்தது.
எருமை மாடுகளை கொண்று அதன் எந்தவொரு பாகத்தையும் வீசிவிடாமல் துடிக்கத்துடிக்க உண்டால் எவ்வித சங்கடங்களும் வராது என நம்பிய உக்கிர வழிபாடுமிருந்தது.
34 தொன்மவியல்கள் அல்லது புராணங்கள் அவர்கள் வழிபாட்டு முறைக்கு சான்று பகர்கின்றன.
“உங்களின் தொன்மத்தில் வன்மம் புகுந்தது எப்படி?” என்றோம்.
ஐரோப்பியர்கள் எமது மண்ணை அபகரித்தபோது – ஆக்கிரமித்தபோது எமது மதமும் சிதைந்தது.
அதுவரை நின்றும் இருந்தும் கிடந்தும் இஷ்டம் போல் வணங்கியவர்கள் – முழங்காலிட வற்புறுத்தப்பட்டனர்.
அதற்காக அத்தனை சிலுவைப்பாடு களையும் சுமக்க வலியுறுத்தப்பட்டனர்.
நாடு விட்டு நாடு வந்தவர்களால் நாட்டிலிருந்த தெய்வங்கள் விரட்டப்பட்டன!
சொந்த மண்ணில் வாழ வழியற்றுப் போனவர்கள் மதம் மாற்றுவதற்காக கனடாவின் முதற்குடி மக்களான எமது மூதாதையரை கோரமாக வெட்டி குரூரமான கொலைகளை பெருமளவில் செய்தனர்.
மலை போல் குவிந்த பிணங்கள் மீது கொலையாளிகள் கும்பல் அன்றாடம் ஆக்ரோஷமாக ஆடி ஆரவாரித்தது கொடுங்காலமாக நெடுங்காலம் நீடித்தது.
15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரோமன் கத்தோலிக்கம் முதன்முறையாக கனடாவில் மண்டியிட்டது.
இங்கிருந்த அப்பாவிகளின் தொன்மம் அங்கிருந்து வந்த அப் பாவிகளின் வன்மத்தில் சிதிலமுற்றது. என்றார் அதில் வார்த்தைகளுள் அடங்காத வலி வெளியே தெரிந்தது!
மனிதகுல மீட்புக்காக இரத்தம் சிந்திய தேவகுமாரன் ஜேசுபிரானின் நாமத்தின்மீது கூறு கூறாக அறுக்கப்பட்ட அந்த அப்பாவி முதற்குடி மக்களின் இரத்தம் சிதறுவதை எந்த மருந்து மாற்றும்!