நீதி மறுக்கப்பட்ட லசந்த– நிமலராஜன் கொலைகள்: ஊடக அடக்குமுறைக்கு அநுரவின் அரசு நீதி வழங்குமா ?…. ஐங்கரன் விக்கினேஸ்வரா
இலங்கை தீவில் சுயாதீனமாக கருத்துக்களை வெளிக் கொண்டுவந்த சிங்கள, ஆங்கில , தமிழ் ஊடகவியலாளர் பலர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள இடதுசாரி முலாம் பூசப்பட்ட அநுரவின் புதிய அரசு ஊடகர்கள் படுகொலைகளுக்கு நீதியை வழங்க வேண்டும் என பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.
ஆயினும் தற்போது அநுரவின் புதிய அரசு நீதி வழங்குமா என்பது கேள்விக்குறியே?
ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை:
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்து இலங்கையின் ஊடகத்துறை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியது. ஈழப்போர் உச்சமடைந்திருந்த 2009இல் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையை அடுத்து இலங்கையின் ஊடகத்துறை சில மாதங்களாக மௌனமாகியது.
சிங்கள ஊடகவியலாளர்கள் அடக்கப்படுவதிலும் மேலாக, ஈழத்தில் தமிழ் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகப் பணியாற்ற முடியாத ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டிருந்தார்கள்.
ஈழநாடு 1981இல் எரிப்புமுதல், பின்னர் இந்திய இராணுவத்தால் முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம் தகர்க்கப்பட்டதில் இருந்து தமிழ் ஊடகங்களின் மீதான அடக்குமுறை பல்வேறு காலங்களில் ஆதிக்க சக்திகளினால் பிரயோகிக்கப்பட்டது.
குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்னம் சிவராம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், லசந்த விக்கிரமதுங்க, பரணிரூபசிங்கம் தேவகுமார், என சுதந்திர ஊடகத்துறையை காக்கவென அயராது உழைத்த எத்தனையோ தமிழ் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
சிங்கள ஊடகவியலாளர் கொலை:
சிறிலங்காவில் 1990ம் ஆண்டு இன்ரர் பிறஸ் சேர்வீஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளன் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதோடு இந்த நீண்ட கறைபடைந்த வரலாறு தொடர்ந்தது எனலாம். 28 ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு நிச்சட் டி சொய்சாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது உடலை அடையாளங்கண்டு கொண்டவர் தராகி என்ற தர்மரட்ணம் சிவராம் தமிழ் நெற் இணையத்தினுடய ஆசிரியரான இருந்தவர். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைப்பட்டியல் பின்னர் நீண்டு அதிகரித்து வந்துள்ளது. இதன்பின் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மைத்தகவல்களை வெளிக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
லசந்த விக்ரமதுங்க படுகொலை :
2015 தேர்தலுக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பத்தாருக்கு கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
லசந்த விக்கிரமதுங்க இலங்கை அரசுக்கெதிராகவும் பல அரசியல்வாதிகள் தொடர்பாகவும் ஆயுதக் குழுக்கள் தொடர்பாகவும் மிக நீண்டகாலமாக மிகக் கடுமையான கட்டுரைகளை “சண்டே லீடர்’, மோர்னிங் லீடர் மற்றும் ஞாயிறு சிங்களப் பத்திரிகையான “இருதின’ என்பன வெளியிட்டு வந்ததால் இவர் பல ஆண்டுகளாக்க தொடர்ந்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வந்திருந்தார்.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. 2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.
ஆயினும் இதுவரை முழுமையான தீர்ப்பு வரவில்லை.
லசந்த மீதான கொலை முயற்சிகள் :
லசந்தவைக் கொலை செய்வதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. 1995 பெப்ரவரியில் லசந்த அவரது வாகனத்திற்குள் வைத்துத் தாக்கப்பட்டார். 1998 ஜூனில் அவரது வீட்டின் மீது கிரனேட் வீசப்பட்டது. 2005 அக்டோபரிலும் 2007 நவம்பரிலும் சண்டே லீடர் அச்சகத்திற்கு தீவைத்து நிர்மூலஞ் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
2009, ஜனவரி 8 வியாழக்கிழமை காலை 09:30 மணியளவில் கொழும்பு கல்கிசையில் உள்ள ‘லீடர் பப்ளிகேஷன்’ அலுவலகத்திற்கு
சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். தலையிலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் இவர் உடனடியாக களுபோவில மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்பட்டாலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நிமலராஜன் படுகொலை:
கொடூரமான போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளையில் பலத்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன் கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்லப்பட்டார்.
ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி கொண்டிருந்தவர் நிமலராஜன்.
நிமலராஜனின் ஊடகப்பணி என்பது கடுமையான பணியாகதான் இருந்தது.
ஈழப் போரின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவருக்கு ஆபத்துகளும் அதிகம் இருந்தன. பலதரப்பட்ட அரசியல் அச்சுறுத்தல்களும் இருந்தன.
போர்க்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற பொதுதேர்தலில் ஏற்பட்ட வன்முறைகள் குறித்து அவர் செய்தி வழங்கினார். இலங்கையில் அரசியல் கட்சியாக இருக்கும் ஓர் கட்சி மோசடி செய்ததாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நிமலராஜன் கொல்லப்பட்ட அன்றும் பத்திரிகை செய்தி ஒன்றை எழுதி கொண்டிருந்தார். அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நிமலராஜனை துப்பாக்கியால் சுட்டனர். நிமலராஜன் கொலை தொடர்பாக சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்று வரை இந்த கொலை குற்றம் யார் மீதும் நிரூபிக்கப்படவில்லை.
நீதி மறுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்:
அமெரிக்காவிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக செயல்படும் ‘கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு 45 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.
ஆனால் இந்த எண்ணிக்கை 100க்கும் அதிகம் என்பதே உண்மையாகும்.
வட கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மட்டும் 59க்கும் மேற்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சொல்லிக் கொள்ளத் தக்க வகையில் இலங்கை சார்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.
ஆயினும் தற்போது ஆட்சி பீடம் ஏறியுள்ள மார்க்சிச முலாம் பூசப்பட்ட அநுரவின் புதிய அரசு ஊடகர்கள் படுகொலைகளுக்கு நீதியை வழங்க வேண்டும் என பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.