இலக்கியச்சோலை
மாத்தளை சோமுவின் ‘ஒற்றைத்தோடு’ சிறுகதை நூல் சிட்னியில் வெளியானது! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
தமிழ் மக்கள் யுத்தத்தில் அடைந்த துன்பங்களையும்,
யுத்தத்திற்குப் பின்னர் வாழ்வியலுக்காக படும் துன்பக்காட்சிகளையும்,
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் மனப்போராட்டங்களையும் சித்தரிக்கும் மாத்தளை சோமுவின் சிறுகதை தொகுதியான ‘ஒற்றைத்தோடு’ கடந்த வாரம் சிட்னியில் வெளியானது.
புலம்பெயர் மண்ணில் முன்னணி ஈழத்து எழுத்தாளரான மாத்தளை சோமுவின் 30 வது நூலான “ஒற்றைத்தோடு” சிறுகதைத் தொகுதி வெளியீடும் அறிமுகமும் சிட்னியில் 29/9/24 அன்று சிறப்புற நிகழ்ந்தது.
சிறுகதைகள் அனைத்தும், இலங்கையில் நடைபெற்ற இறுதியான யுத்தக் களத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா
உள்ளிட்ட நாடுகளில் குடியேறியவர்கள் தொடர்பானவற்றை கருப்பொருளாகக் கொண்டுள்ளதால் படிக்கும் போதே கண்களை கசிய வைக்கின்றன. பல்வேறு இதழ்களில் வெளியாகிய பாராட்டுப் பெற்ற 23 சிறுகதைகள் இந்த தொகுப்பில் வெளியாகியுள்ளன.
போருக்குப் பிந்தைய ஈழத் தமிழர்களின் வாழ்க்கை, அவர்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, தமிழ்ப் பெண்கள் மீதான இலங்கை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் போன்றவற்றை இந்தக் கதைகள் அப்பட்டமாகக் காட்டுகின்றன.
எழுத்தாளர் மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். அத்துடன் மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றிய மாத்தளை சோமுவின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமானது. இலக்கியத் துறையில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர்.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாக தனது எழுத்துப்பணியை சமூக நோக்கோடு செய்துவருபவர். அவரது இலக்கிய முயற்சிகளின் தொடராக முப்பதாவது நூல் வெளியாகி உள்ளது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வு
சிட்னியில் உள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்தில் பெருந்திரளான இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
மாத்தளை சோமுவிற்கு எழுத்தே அவரின் மூச்சாக இருக்கிறது. இந்நிகழ்வின் தொடக்க இணைப்புரையை திரு. குலசேகரம் சஞ்சயன் அவர்களும் , வரவேற்புரையை சமூக ஆர்வலர் திரு. வசந்தராஜா அவர்களும் உரை ஆற்றினர்.
இந்நிகழ்வின் தலைமை உரையை கலாநிதி குலம் சண்முகம் அவர்களும்,
வாழ்த்துரைகளை பத்திரிகையாளர் திரு. எஸ்.சுந்தரதாஸ் மற்றும் கலாநிதி மாலினி ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் ஆற்றினர்.
இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள மாத்தளை சோமு பற்றிய படைப்பாளி குறித்தப் பகிர்வை ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் உரையாற்றினார்.
ஒற்றைத்தோடு சிறுகதைத் தொகுதி நூல் அறிமுக உரையினை செல்வி வி.விஜயாழ், திருமதி. இந்துமதி சிறினிவாசன், திரு. மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்களும் உரையாற்றினர். அத்துடன் முனைவர் இலக்குவன் சொக்கலிங்கம்
அவர்களும் உரையாற்றினார்.
நூலாசிரியர் மாத்தளை சோமுவின் பதிலுரையை தொடர்ந்து, நிகழ்வின் நன்றியுரையை திரு. பூபாலசிங்கம் சின்னய்யா அவர்கள் நூல் வெளியீட்டு நிகழ்வை இனிதே நிறைவு செய்தார்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா