வஞ்சகம்!… கனடா சிறு கதை-03… எஸ்.ஜெகதீசன்
அல்பேட்டா மாகாணத்தின் தலைநகரமான கல்கரியில் வருடந்தோறும் ஜூலை மாதத்தில் 10 நாட்களுக்கு நடைபெறும் ஸ்டாம்பிட் கொண்டாட்டத்தில்தான் முதன் முதல் அவளை கண்டேன்.
வயது நாற்பது இருக்கலாம். ஆனால் ஒப்பனை இருபதாகவே ஒப்புவித்தது.
உலகிலே மிகப் பெரிய திறந்த வெளியரங்கில் தெருவோர பந்தல்களில் கண்களுக்கு எட்டிய தூரமெங்கும் அடுப்புகள் வரிசையாக நெருப்பெடுக்கும் உணவு விழா இதுவாகும்.
நிறைந்து வழியும் உள்ளுர் வெளியூர் வெளி நாட்டுப் பயணிகளிடையே அவள் மட்டும் பிரத்திட்சமாக கண்களுக்கு எப்படி தென்பட்டாள் என்பது தெரியவில்லை.
இலவசமாக காலை வேளைகளில் சுடச்சுட வழங்கப்படும் பான் கேக்குகளை ஹொட் டோக்களை சான்விச்சுகளை ஹாம்பேர்கர்களை அவள் திண்டுதீர்ப்பதில் தோன்றிய கவர்ச்சி கண்களுக்கு விருந்தாகியது காரணமாகவும் இருக்கலாம்.
முதல் எட்டு நாட்களும் வெவ்வேறு ஆண்களுடன் அவள் சகஜமாகப் பழகியதை சந்தேகம் வராத வகையில் கண்களால் உண்டுள்ளேன்.
எப்படியும் அவளுடன் கதைத்துவிடுவது என்ற தைரியம் ஒன்பதாம் நாள் வந்தாலும் மனது உதறல் எடுத்தது.
“ஹலோ”என்றாள்.
பழம் நழுவி பாலில் விழுந்தது.
எனது “ஹலோ” அவளது காதில் விழுந்ததோ இல்லையோ.
“எனது பெயர் லோறா. முதல் நாள் பார்த்த மாத்திரத்திலேயே என் இதயத்தில் வீழ்ந்துவிட்டாய். கண்களால் படம் பிடித்துக் கொண்டேன். நீ புதிசுதானே?’ என்றாள்.
“எனது பெயர் மைசண்” என்றது மட்டும் தெரியும். நீ புதிசுதானே என்று உவள் என்னத்தைக் கேட்கின்றாள்? கனடாவிற்கா? அல்லது ஸ்டாம்பிட் கொண்டாட்டத்திற்கா அல்லது வேறு வேறு வேறு எதற்கா? சுழண்டது மனது.
“உலகில் 195 நாடுகள் உள்ளன.அவற்றுள் கனடாவில் ‘சாப்பாட்டுக்கடை’ வைத்திருக்கும் அனைத்து நாடுகளும் தமக்கான உணவு விழாவை வருடத்தில் ஒரு நாளாவது பரிமாறுகின்றன. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அவரவர் உணவு வகைகள் பிடிக்கும். அடுத்தவர்களுக்கு அந்த உணவில் சில சுவைக்கும். சில மிரட்டும். சில விரட்டும்.” என்றாள் அவள்.
“பசியோடும் ருசியோடும் உலக உணவை சுவைக்க விரும்புபவர்களுக்கு உகந்த நாடு கனடா.இங்கு இல்லாத உணவு வேறு எங்கும் இருக்காது என்பவர்களுக்கு விருந்தாவதும் கனடா. பலவிதமான வாசனைகள் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்து மூக்கைத் தாக்கும் வகையில் விருந்து வைப்பதும் கனடா.”என்றேன் நான்.
“கனடா பூராவும் மாதம் தோறும் உணவு விழா என்ற பெயரில் வெவ்வேறு நகரங்களில் வெவ்வேறு நாட்டவர்கள் தத்தமது நாடுகளின் அடுப்படிப்புகையை நகர வீதிகளில் புகைய விடுகின்றார்கள்.” என்றவள் வேறு யாரையோ கண்டதும் “ஸீ யு டுமாரோ.” என்றவாறே நகர்ந்தாள்.
ஏனோ எனது மனம் முதற் தடவையாக புகைய ஆரம்பித்தது.
மறு நாள் இறுதி நாள்.
“அவள் வருவாளா? என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா?” பாடல் வரிகள் என்னுள் ஒலித்து அவள் வரும் திசையை பலமுறை நோக்க வைத்தன.
“தமிழரின் பாரம்பரிய உணவுகளை வெள்ளையர் கறுப்பர் சீனர் விரும்பி உண்டு கண்ணீர் வடிப்பது கனடாவில் சர்வசாதாரணம் என்கிறார்களே? உண்மையா?” என்றவாறே வந்தமர்ந்தாள் லோறா.
“பாரம்பரிய உணவாக இல்லாவிடினும் மிதிவெடி சாப்பிட்டவர்களின் அனுபவமாக அது இருக்கலாம். மிதிவெடியை வாயில் வைத்தவர் பலர். வாயால் வைதவர் சிலர். அதன் காரமான தாக்கத்தில் மோட்சமடைபவர் களும் இருக்கின்றார்கள். மிதிவெடி தரும் ஏப்பம் கூட அயலில் உள்ளவர்களை சிதறடிக்கும் சக்தியுள்ளது.ஒருமுறை சாப்பிட்டுப்பார். அப்ப தெரியும்” என்றேன்.
எமக்கு முன்னால் வியட்நாம் உணவகம் இருந்தது. திடீரென அதற்குள் நுழைந்தவள் “நத்தை ஓனான் உடும்பு ராட்சத பல்லி அட்டை இவற்றுள் எதையாவது நீ உண்பாயா?” என்றாள்.
நான் இல்லை என்றது அவளுக்கு கேட்கவில்லை. அவள் எதனையோ இரண்டு தட்டு ஓடர் செய்தது எனக்கு கேட்டது.
உணவு தயார் என்றதும் காசாளர் அருகே நின்றவாறு என்னை அழைத்தாள்.
எதிர்ப்புறம் இருந்த விலைப்பட்டியலில் தனது பார்வையை செலுத்தி அதில் உள்ள ஆகக் கூடுதலான விலையுள்ள உணவையே தான் ஓடர் செய்ததாகவும் இரண்டு தட்டுகளும் தனக்காகவே என்றும் கூறினாள்.
மறுபுறம் காசாளர் உணவுக்கான கட்டணத்தை நீட்டியதையோ அதனை நான் செலுத்தியதையோ அவள் கவனிக்கவில்லை.
அதைப்பற்றிய கரிசனமும் அவளிடமிருக்கவில்லை!
வாழ்ந்து கெட்டவளா அல்லது கெட்டு வாழ்ந்தவளா?
“ஊர்வன நடப்பன நீந்துவன பறப்பன என ஒன்றையும் விட்டு வைப்பதில்லை” என்றவாறே ஒரு வெட்டு வெட்டினாள்.
மலைப்பாம்பு உள்ளே சுருண்டு படுத்திருப்பது போல வயிறு புடைத்த ஒருவர் எம்மைக் கடப்பதற்கும் அவள் சாப்பிட்டு முடிவதற்கும் சரியாகவிருந்தது.
“உவர் எனக்குத் தெரிந்தவர். நான் போகின்றேன். நாளை என்ன செய்யப் போகின்றாய்? காலை பத்து மணிக்கு அடுத்த வீதியில் உள்ள சுப்பர் மார்க்கெட்டுக்கு வா. அங்கு உனக்காகக் காத்திருப்பேன்” என்றாள். மறைந்தாள்!
அடுத்த நாள் அவள் தெரிவித்த அதே சுப்பர் மார்க்கெட்டின் வாசலில் இருந்த ஒரு சிறு கூடையை எடுத்தவாறே உள்ளே நுழைந்தேன்.
எனக்கு முன்பாகவே அங்கு வந்துவிட்ட லோறா தனது தள்ளு வண்டிலில் தனக்குத் தேவையான பொருட்களை நிரப்பிக் கொண்டிருந்தாள்.
என்னைக் கண்டதும் “ஹாய்” என்றாள் முகம் மலர!
கடைக்கண்ணால் வண்டிலை நோட்டமிட்டேன். அனைத்துமே விலை கூடிய பொருட்கள்.
“ஹாய் உனது பெயர் என்ன சொன்னாய்? ஓ! சண். மைசண். அந்த மேல் தட்டிலிலுள்ள 24 போத்தல்களை எடுத்துத் தருவாயா? எனக்கு எட்டாது” என்றாள்.
தேவைக்கு அதிகமானவை என்றும் சொல்லலாம். நான் சொல்லவில்லை
ஒரு மாதிரி ஷெப்பிங் முடிந்தது.
அவளது வண்டிலை நான் தள்ள எனது கூடையுடன் எனக்கு முன்னாக அவள்.
காசாளரின் மேசை மீது தனது பொருட்களை அடுக்கும் பொழுது பின்னால் நின்ற என்னைத் திரும்பிப் பார்த்து “மை சண். மை சண்” என்று ஏதேதோ கரிசனையுடன் கூறினாள்.
“அடடா! பாண் எடுக்க மறந்துவிட்டேனே. உனது கூடைக்குள் பார்ததும் தான் ஞாபகம் வந்தது. அதனை எனக்கு தந்துவிட்டு நீ போய் வேறு எடுத்துக்கொள். இந்தா மூன்று டொலர்.”என்றாள்.
“பிரச்சனை இல்லை.இதனை எடுத்துக்கொள்”என்றவாறே நான் திரும்பி நடந்தேன்.
“ஆறுதலாக வா மைசண். காரின் அருகே காத்திருப்பேன் மைசண்” என்றாள்.
இடையில் அவளுக்கு உதவியதால் எனது முறைக்காக வரிசையில் காத்திருக்க நேர்ந்தது.
நான் வாங்கியவை 40 டொலருள்தான் வரும்.
“உங்கள் அம்மாவிற்குரிய காசையும் நீங்கள் தருவீர்கள் என்று சொன்னார்” என்ற காசாளர் 480 டொலர் என்றார்.
மைசண் என எனது பெயரை நானே உச்சரித்தேன்.
“என்னது உங்கள் மகன் தருவானா?” என்றார் காசாளர்.