“கனகர் கிராமம்”… தொடர் நாவல் அங்கம்- 49… செங்கதிரோன்
அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
எல்லோரும் உறக்கத்தில் ஆழ்ந்து அரைமணி நேரம் கூடச் சென்றிருக்காது. இலட்சுமணன் கோகுலனைத் தட்டியெழுப்பிச் “சேர்!” காத்து உரமா அடிக்கிது போல. தூறிக் கொண்டிருந்த மழயும் வரவர உரக்கிது. சூறாவளியோ தெரியல்ல” என்றான்.
கொஞ்ச நேரத்தில் காற்று வழமைக்கு மாறாக ஒரு இரைச்சலுடன் அடிக்க ஆரம்பித்தது. மழையும் ‘சோ’ என்ற சத்தத்துடன் பொழியத் தொடங்கிற்று. எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்குகள் யாவும் அணைந்து விட்டன. காற்றின் குளிர் தாங்க முடியாமல் இருட்டிலும் கூட எல்லோரும் எழுந்து பாயில் சம்மாணங்கட்டி அமர்ந்து படுக்கை விரிப்பினால் மேலுடம்பு முழுவதையும் கழுத்துவரை போர்த்திக் கொண்டு கலவரமடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.
கோகுலன் கீழேயிருந்த ஜீப்சாரதி இரட்ணத்தையும் வாடி முதியவரையும் வேலையாட்களையும் மேல் பரணுக்கு வந்திருக்கும்படி கூப்பிட்டான். அவர்களும் ஏணியில் ஏறி மேலுக்கு வந்துவிட்டனர்.
போர்விமானங்கள் இரைச்சலுடன் வானத்தை ஊடறுத்து வருவதைப்போல காற்று பேரிரைச்சல் காட்டிற்று. மழையும் பேய்மழை எனும் படியாயிற்று. வெளியில் மரங்கள் முறிந்துவிழும் சத்தமும் பொருட்கள் பறந்துவந்து தரையில் விழும் சத்தமும் எல்லோருடைய மனங்களையும் கலக்கிற்று.
சிறாம்பிக்குப்போன வேட்டைக்காரத் தம்பிராசா அண்ணன் என்ன ஆனோரோ? என்பதும் எல்லோருடைய கவலையாகவும் எழுந்தது.
சுமார் இரண்டு மூன்று மணித்தியாலங்கள் இதுதான் நிலை. அதிகாலையாகும் போது காற்றின் வேகமும் சீறி வந்தபாம்பு தன் தலையைத் தாழ்த்தியது போலச் சற்று தணிந்து மழையும் மீண்டும் சிறு தூற்றலாக மாறியிருந்தது.
அந்த அல்லோகல்லோலங்களுக்கிடையிலும் அந்த அதிகாலை வேளையிலும் வாடி முதியவர் கீழே இறங்கிச் சென்று அடுப்பை மூட்டித் தண்ணீர் கொதிக்க வைத்து தேநீர் தயாரித்துக் கொண்டு வந்து சூடாகப் பரிமாறினார். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த உடம்புக்குச் சூடான தேநீர் இதமாக இருந்தது.
விடிந்தும் விடியாததுமான இளம் இருட்டில் இலட்சுமணனையும் சாரதி இரட்ணத்தையும் யேசுரட்ணத்தையும் சிறாம்பியடிக்குப் போய் தம்பிராசா அண்ணனைச் சென்று பார்த்துக் கூட்டி வரும்படி அனுப்பி வைத்தான் கோகுலன். அவருக்கும் தேநீர் கொடுக்க வேண்டுமல்லவா?
சிறாம்பியடிக்குச் சென்ற இலட்சுமணன் போன வேகத்திலேயே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடி வந்தான்.
“என்ன இலட்சுமணன்! இப்படி ஓடிவாறா? என்ன நடந்தது”? என்று கலவரத்துடன் கேட்டான் கோகுலன்.
“ஜயோ! சேர்! ராவு அடிச்ச சூறாவளி சிறாம்பியப் பிச்செறிஞ்சி தம்பிராசா அண்ணன் கீழே குளக்கரையில விழுந்திரிக்கார் ……….”
“விழுந்து ………” இலட்சுமணன் முடிக்கு முன்னரே கோகுலன் இடைமறித்து அவதியுடன் கேட்டான்.
“குளத்துக் கரையில உழுந்து எழும்ப ஏலாமத் தண்ணிக்குள்ளேயே கிடந்து குளிரில உடம்பு விறச்சுச் செத்துப் போனார்” என்றுகூறிவிட்டுத் தலையிலே கைவைத்து அழத் தொடங்கினான் இலட்சுமணன்.
கோகுலன் அதிர்ச்சியிலிருந்து மீளச் சில நிமிடங்கள் எடுத்தன.
கோகுலன் கண்கலங்கியவாறு இலட்சுமணனின் தோளிலே கைபோட்டு அவனை ஆசுவாசப்படுத்திக் கூட்டிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய்க் குளக்கரைக்கு விரைந்தான்.
அங்கே அவன் கண்ட காட்சி.
தம்பிராசா அண்ணன் குளக்கரையோரம் பாதி உடம்பு வெளியிலும் மீதி உடம்பு குளத்துத் தண்ணீருக்குள்ளும் தாழ்ந்திருந்தது. பக்கத்தில் குடை விரிச்ச மாதிரியே நீரில் மிதந்து கொண்டிருந்தது. ‘டோர்ச் லைட்டும் துவக்கும் குளக்கரையில் இடைவெளிவிட்டுக் கிடந்தன. சாரதி இரட்ணமும் யேசுரட்ணமும் அருகிலே குந்தியிருந்து அழுது கொண்டிருந்தார்கள்.
கோகுலன் இலட்சுமணனிடம் திரும்பி வாடிக்குப் போய்ப் பாயையும் படுக்கை விரிப்பையும் எடுத்துவரச் சொன்னான். கோகுலனைப் பின் தொடர்ந்து வந்த அவனது மைத்துனன் ரவீந்திரன் குளக்கட்டின்மீது செய்வதறியாது திகைத்துப் போய் நின்றான்.
இலட்சுமணனும் வாடி முதியவரும் வேலையாட்களும் பாய் மற்றும் படுக்கை விரிப்புடன் குளக்கட்டிலேறி மேலே வந்ததும் எல்லோருமாகச் சேர்ந்து குப்புறக் கிடந்த தம்பிராசா அண்ணனின் சடலத்தை மல்லாக்காகத் திருப்பி தூக்கிக்கொணர்ந்து குளக்கட்டிலே விரித்த பாயிலே கிடத்தி பூதவுடல் முழுவதையும் படுக்கை விரிப்பினால் மூடிய பின் தம்பிராசா அண்ணரின் விறைத்துப் போயிருந்த கால்களைத் தொட்டு வணங்கினார்கள்.
சாரதி இரட்ணம் சொன்னான் “தம்பிராசா அண்ணன் கலியாணம் முடிக்காம தனிக் கட்டையாத்தான் வாழ்ந்தவர். அவரிர தங்கச்சியோடதான் தங்கியிருந்தவர். எனக்கு அவங்கள நல்லாத்தெரியும். அவங்களிட்டத்தான் பிரேதத்தப் பாரம் குடுக்க வேணும் சேர்” என்று.
அவசரம் அவசரமாகக் காரியங்கள் நடந்தன.
முன்னுக்குச் செல்லும் ‘ஜீப்’பிலே கோகுலனும் அவனின் மைத்துனன் ரவீந்திரனும் -இலட்சுமணனும் – யேசுரட்ணமும் – பிராங்ளினும் அமர்ந்திருக்க பின்னாலே தம்பிராசா அண்ணனின் பிரேதம் கிடத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப்பெட்டியில் வேலையாட்கள் அமர்ந்திருக்க திருக்கோவில் நோக்கிய பயணம் ஆரம்பமாகிற்று.
வீதி எங்கணும் ஆங்காங்கே மரக்கிளைகளும் அடிமரங்களும் முறிந்து வீழ்ந்து வீதி அடைபட்டுக் கிடந்தது. வேலையாட்கள் இறங்கிக் கோடரியாலும் கத்தியாலும் அவற்றைத் தறித்து அப்புறப்படுத்திக் கொண்டேவர வாகனங்கள் இரண்டும் ஆமை வேகத்தில் ஊர்ந்து காடுகளையும் வயல் வெளிகளையும் கடந்து ஒரு மாதிரி பொத்துவில் – அக்கரைப்பற்றுப் பிரதான வீதியைக் காஞ்சிரங்குடாவில் றூபஸ் குளத்துச் சந்தியில் எட்டின.
றூபஸ்குளம் சந்தியிலிருந்து திருக்கோவில்வரை பிரதான வீதி கொஞ்சம் கொஞ்சமாகக் ‘கிளியர்’ பண்ணப்பட்டுக் கொண்டிருந்தது.
இராணுவமும் பொலிஸும் பொதுமக்களும் இணைந்து வீதியின் குறுக்கே விழுந்திருந்த மரக்கிளைகளையும் அடிமரங்களையும் தெடர்ந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இலங்கையில் இனப்பிரச்சனை கூர்மையடைந்து அவ்வப்போது இனக்கலவரங்களுக்கு வித்திட்டதைத் தொடர்ந்து வடக்குக் கிழக்கு மாகாணத் தமிழ்ப் பொதுமக்களுக்கும் இராணுவம் மற்றும் பொலிசுக்குமிடையில் அவ்வப்போது உரசல்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். இப்போது இம் மூன்று தரப்பினருமே இணைந்து பணியாற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்த கோகுலன் இயற்கை அனர்த்தம்தான் இவர்களை இப்படி இணைத்து வைக்குமோ என்றுகூட இடக்கு முடக்காக எண்ணினான்.
இராணுவமும் பொலிஸும் பொதுமக்களும் பிரதான வீதியினைக் ‘கிளியர்’ பண்ணிக் கொண்டிருக்கையில் அதற்குள்ளாலே மரவட்டை போல் ஊர்ந்த ‘ஜீப்’ பும் உழவு இயந்திரமும் திருக்கோவிலை அடைந்தன.
சூறாவளி அடித்து ஊரெல்லாம் குண்டு வீச்சு நடந்தது போலச் சின்னா பின்னமாகிக் கிடந்தது. முறிந்த மரங்களும் பிய்த்தெறியப்பட்ட கூரைகளுமாய் எங்கும் இடிபாடுகள். இடையே உயிரைப் பறிகொடுத்த சில வீடுகளிலிருந்து அழுகுரல்களும் கேட்டன. இந்தச் சூழ்நிலையில் பிரேதத்தைக் கொண்டுபோய் உரியவர்களிடம் ஒப்படைப்பதும் – மரண விசாரணை நடைபெறுவதும் – அடக்கம் செய்வதும் எவ்வாறென்பதே கோகுலனுக்கும் மற்றவர்களுக்கும் யோசனையாயிருந்தது.
முதல் நாளிரவு எவ்வளவு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழித்தோம். காலையில் இவ்வாறு தங்களோடு வந்த ஒருவரின் மரணத்தை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டதை எண்ணி எல்லோரும் ஏக்கமும் கவலையும் அடைந்திருந்தார்கள்.
இரவு இலட்சுமணன் தம்பிராசா அண்ணனின் வேட்டைப் பகிடியைச் சொல்ல எல்லோரும் சேர்ந்து சிரித்ததை எண்ணிப் பார்த்தபோது கோகுலனுக்குக் குற்ற உணர்வாகவும் இருந்தது. இப்படி நடக்குமென்று யார்தான் எதிர்பார்த்தது. மனித வாழ்க்கையின் நிலையாமையைத் தம்பிராசா அண்ணனின் மரணம் உணர்த்திற்று.
திருக்கோவிலையடைந்து சூறாவளி அடித்த அமளிக்கிடையிலும் தம்பிராசா அண்ணனின் சடலத்தை அவரது தங்கையின் வீட்டில் ஒப்படைத்து-ஊரில் விதானைக்கும் அவர் மூலமாக அக்கரைப்பற்றுப் பொலிசாருக்கும் அறிவித்து – மரண விசாரணை நடைபெற்று முடிய அன்று மதியம் தாண்டி பின்னேரமாகிவிட்டது. சடலத்தைத் தொடர்ந்தும் வீட்டில் வைத்திருக்க முடியாத நிலை.
பிரேதத்தை அன்றே அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகளைப் பார்க்கும்படி இலட்சுமணன் -யேசுரட்ணம் – பிராங்ளின் மூவரிடமும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ‘ஜீப்’ பில் இரட்ணத்துடன் கோகுலனும் மைத்துனன் ரவீந்திரனும் கல்முனை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அட்டாளைச்சேனைக்கு இப்பால் அக்கரைப்பற்றுக்குத் தெற்கே பொத்துவில் வரை சூறாவளி அனர்த்தங்கள் பெரிதாக இல்லையென்றே ஊரவர்கள் பேசிக் கொண்டார்கள்.
திருக்கோவிலிருந்து நிந்தவூர்வரை சென்றனர். நிந்தவூருக்கு அப்பால் பிரதான வீதி மிக மோசமாகத் தடைபட்டிருந்தது. அங்கும் இராணுவமும் பொலிஸும் பொதுமக்களும் இணைந்து வீதியை ‘கிளியர்’ பண்ணிக் கொண்டிருந்தனர். வாகனங்கள் செல்ல பல மணிநேரம் எடுக்கும் போலிருந்தது.
கோகுலனுக்கு ஒரு யோசனை தட்டிற்று.
‘ஜீப்’ சாரதி இரட்ணத்திடம் “ ரட்ணம்! ‘ஜீப்’பக் கடக்கரைக்கு விட்டு அங்கிரிந்து நான்கு சக்கர ஓட்டத்தில கடக்கரயால காரைதீவு மட்டும் கடக்கர மணலால வண்டிய ஓட்டு” என்றான். இரட்ணமும் அவ்வாறு செய்யத் துணிந்தான்.
பூமியிலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் ‘அப்பலோ’ ஏவுகணை சந்திரனில் தரையிறங்கியதுபோல, நிந்தவூரில் வைத்துப் பிரதான வீதியிலிருந்து ஊருக்குள்ளே செல்லும் கிளை வீதியொன்றினுள் நுழைந்து வங்காள விரிகுடா கடற்கரையை அடைந்து கடற்கரை மணலில் புதைந்தபடி ஓடிக் காரைதீவை அடைந்தது ‘ஜீப்’.
கோகுலனின் தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் எல்லோருமே காரைதீவில்தான் இருந்தார்கள். அவர்களைச் சென்று பார்த்ததில் உடைமைகளுக்குச் சேதங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவை எல்லா ஊரிலும் எல்லோருக்கும் ஏற்பட்டிருந்தது – ஆனால் உயிர்ச் சேதங்கள் எதுவுமில்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்ட திருப்தியோடு கல்முனை விரைந்தான்.
கோகுலனின் தாய் – கோகுலனனின் மூன்று அக்காமார்களினதும் பிள்ளைகள் மூவர் – தம்பி யோகம் – தாயின் வளர்ப்பு மகள் சுட்டி ஆகியோர் அந்நேரத்தில் கல்முனையில் இருந்தனர். அங்கு சென்ற போது அவர்கள் கல்முனை உடையார் வீதியில் குடியிருந்த வாடகை வீட்டு வாசலில் நின்றிருந்த மாமரம் வேரோடு சாய்ந்திருந்தது. வீட்டில் விழுந்திருந்தாலும் ஒரு பக்கத்தில்தான் சேதம். சேதம் பெரிதாக இல்லை. எனினும் கூரை ஓடுகளும் தகடுகளும் வளவு முழுக்க வீசப்பட்டுக் கிடந்தன. உயிர்ச் சேதங்களோ – பலத்த காயங்களோ வீட்டிலே எவருக்குமே ஏற்பட்டிருக்காததால் தாயிடம் சொல்லிவிட்டு மட்டக்களப்புக்குப் புறப்பட்டான்.
நேரே கல்முனை நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் சென்று ‘ஜீப்’ வாகனத்தை ஒப்படைத்துவிட்டுக் கல்முனையியிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்ல வாகனப் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததால் கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கிக் கோகுலனும் மைத்துனன் ரவீந்திரனும் நடக்கத் தொடங்க ‘ஜீப்’ சாரதி இரட்ணம் திருக்கோவில் நோக்கித் திரும்பினான்.
கல்முனையிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் இறங்கி மட்டக்களப்பை நோக்கி நடக்கத் தொடங்கிய கோகுலனும் மைத்துனன் ரவீந்திரனும் சூறாவளி ஏற்படுத்தியிருந்த அழிவுகளை வழியெல்லாம் பார்த்தபடியே நடந்தனர். முறிந்தும் வேரோடு சாய்ந்ததுமான தென்னை – பனை – வேம்பு – ஆல் – அரசு – நாவல் – மா என பலவகைப்பட்ட மரங்களும், சாய்ந்து கிடந்த வாழைத்தோட்டங்களும் களுதாவளையிலே பிச்செறியப்பட்டிருந்த வெற்றிலைக் கொடிகளும் இயற்கை அழிவுகளை எடுத்துக் கூறின.
அழகிய பெரிய கல்வீடுகளின் ‘கொங்கிரீட்’ கூரைகள் உடைந்து நொறுங்கித் தூளிகள் போலவும் தொட்டில்கள் போலவும் எலும்புக் கூடுகள் போலவும் தொங்கிக் கொண்டிருந்தன.
சில இடங்களில் இறந்துகிடந்த ஆடு – மாடு – நாய் – பூனை – கோழிகள் வீட்டு வளர்ப்பு உயிரினங்களின் அழிவைக் காட்டின. ஆங்காங்கே முயல் – கீரிப்பிள்ளை – பாம்புகள் – உடும்பு மற்றும் காகம் – வாத்து – கொக்கு – நாரை போன்ற பறவை இனங்களும் செத்துக்கிடந்தன. தரையிலே வீசப்பட்டுக் கிடந்த கூரை ஓடுகளும் தகடுகளும் மரச்சட்டங்களும் தளபாடங்களும் சட்டி பானைகளும் வீட்டு உபகரணங்களும் வீட்டுச் சேதங்களை எடுத்தியம்பின. ஓரிடத்தில் சூறாவளி பாதையோரம் நின்றிருந்த கொங்கிரீட் மின்கம்பமொன்றைத் தரையிலிருந்து பிடுங்கிக் கம்பத்தின் அடியை வீட்டு மதில்மேல் நிலைக்குத்தாக நிறுத்தியிருந்தது. கம்பத்தின் நுனிக்கு வீட்டுக் கூரை முட்டுக் கொடுத்திருந்தது. சூறாவளி எப்படியான வேகத்தில் வீசியிருக்கிறது என்பதை இக்காட்சி காட்டியது. சூறாவளியின் பலத்தை இது பறைசாற்றிற்று.
தேங்காய்களும் மாங்காய்களும் எங்கும் சிதறிக் கிடந்தன. சில்லூறுகள் இரைந்து தள்ளிக் கொண்டிருந்தன.
உடைந்தும் நெளிந்தும் கண்ணாடிகள் நொருங்கியும் கிடக்கும் மோட்டார் வாகனங்கள் – சூறாவளியில் தூக்கி வீசப்பட்டுக் கிடக்கும் மோட்டார் சைக்கிள்கள், மிதிவண்டிகள் – தரையில் அடியோடு சரிந்து கிடக்கும் மதில்கள், சாய்ந்து கிடக்கும் முள்வேலிகள் எனப் பார்வை படுமிடமெல்லாம் அழிவின் அடையாளங்கள்.
வழியில் நடைப் பயணத்தில் பழுகாமம், போரதீவு, மண்டூர்ப் பகுதியில் இருந்து வந்தவர்கள் களுவாஞ்சிக்குடியில் வைத்து இணைந்தனர். அதுபோல் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலிருந்து வந்தவர்கள் தாழங்குடாவில் வைத்து இணைந்து கொண்டனர். மட்டக்களப்பு வாவியின் மேற்குக்கரைப் பிரதேசமான ‘படுவான்கரை’ யிலிருந்து வந்தவர்கள்தான் இவர்கள்.
கோகுலனுடனும் மைத்துனன் ரவீந்திரனுடனும் கூட வந்தவர்கள் பல சூறாவளிக்கதைகளைத் தமக்குள்ளே ஆள் மாறி ஆள் கூறிக்கொண்டே வந்தனர்.
அதிலொன்று,
சூறாவளியால் தாயின் மடியிலிருந்து தூக்கிவீசப்பட்ட கைக்குழந்தையொன்று. குழந்தை எங்கே எறியப்பட்டதோ என்று ஏங்கித்தவித்தபடி குழந்தைக்கு என்ன நடந்திருக்குமோ என்று கூடத்தெரியாமல் தாயும் தாயின் உறவினர்களும் அலறிப்புடைத்தபடி குழந்தையை அண்டை அயலிலே தேடியிருக்கிறார்கள். அடியோடு தரையிலே சாய்ந்து கிடந்த தென்னை மரமொன்றின் வட்டுக்குள்ளே குழந்தையைக் கண்டு பிடித்தார்கள். தென்னை ஓலையிலிருந்து வழிந்து கொண்டிருந்த மழை நீரை ஆவென்று வாயைத்திறந்து பருகியபடி அக்குழந்தை கை, கால்களை ஆட்டிக் கொண்டு கிடந்ததாம். குழந்தைக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை. இக் கதையைக் கேட்ட கோகுலனுக்கு ஆச்சரியமாகவும் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடாமல் தப்பிவிட்டது குறித்து ஆனந்தமாகவும் இப்படி இரண்டும் கலந்த உணர்விலே தோய்ந்தான். குழந்தையைப் பறிகொடுத்த தாயின் உணர்வும் பின் அக்குழந்தை எந்த ஆபத்துமில்லாமல் மீளக்கிடைத்தபோது அத்தாய் அடைந்திருக்கக்கூடிய உணர்வும் கோகுலனுக்குள்ளும் ஊடுபாய்ந்தன.
தாயின் கக்கத்தில் அணைத்து வைத்திருந்த குழந்தையைச் சூறாவளி இழுத்து வீசியகதை – மட்டக்களப்பு வாவியினுள் வீசப்பட்ட ஒருவர் உயிரிழந்து பிணமாக மிதந்த கதை-சேனைக்காவலுக்குச் சென்ற ஒருவரின் பாயும் தலையணையும் மரத்தில் தொங்கிக்கிடக்க ஆளைக் காணாத கதை-சுவர் விழுந்து மரணமான ஒருவரின் கதை-புற்றுமண் குவியலின் கீழ் தெரிந்த பிஞ்சுக் குழந்தையின் கால், அக்குழந்தை புதையுண்டு உயிரிழந்த கதை-பறந்து வந்த கூரைத் தகரமொன்று பெண்ணொருவரின் கழுத்தைச் சீவிய கதை-வெல்லாவெளி அம்மன் கோயிலுக்குள் அடைக்கலம் புகுந்த ஆறு ஜீவன்கள் சுவரிடிந்து வீழ்ந்து உயிர் நீத்த கதை-சேனைக்குள்ளேயிருந்த ‘புரை’யை அடியோடு பெயர்த்து வந்து ஆற்றுக்குள்ளே தள்ளிவிட புரையிலே வசித்த ஆட்களைக் காணவில்லை என்ற கதை-கொக்கட்டிச் சோலைத் தான்தோன்றீஸ்வரர் கோயிலில் தஞ்சம் புகுந்த பல நூறு பேர் தப்பிப் பிழைத்த கதை-சூறாவளியினால் அள்ளுண்டு வெள்ளத்தில் அகப்பட்ட ஒரு முதியவரும் சிறுவனும் சல்லடை போல் உருண்டு திரண்ட கிண்ணை மரவேரில் சிக்கிக் கரை சேர்ந்து உயிர் தப்பிய கதை-சூறாவளி அல்லோலகல்லோலங்களுக்கிடையில் மட்டுநகர் சிறையிலிருந்து வெளியேறித் தப்பிய சிறைக் கைதிகளின் கதை-ஓந்தாச்சிமடம் தாம்போதிக்கு அருகில் நீண்டு உயர்ந்து நின்ற இராட்சதப் பனை மரம் இருயார் தூரத்திற்கு அப்பால் பிடுங்கி வீசப்பட்ட கதை-மட்டக்களப்பு வாவியிலே தோணிகளை இறக்கி பிணங்களைத் தேடிப்பிடித்துக் கரையிறக்கிய கதை-முப்பத்தி நாலாம் கொலனியில் வீடொன்றின் மோட்டு வளையில் சிதறி அடித்த சிராய்க்கூர் குரல்வளையைப் பிய்த்துக்கொண்டு இரு புறங்களிலும் பாய்ந்து துடித்துக் கொண்டிருந்த இளைஞனைக் களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரிக்குக் கொணர்ந்து சேர்த்த கதை-சாப்பாட்டு மேசையின் கீழ் சரணடைந்து ஒரு குடும்பமே உயிர்பிழைத்த கதை-உடைந்து விழும் ஓடுகள் தலையைப் பதம்பார்க்காதிருக்கும் வகையில் தலையணையைத் தலை மீது வைத்துக் கொண்டும் உலோகப் பாத்திரங்களைத் தலைமீது கவிழ்த்தபடியும் விடியவிடியக் குந்திக்கொண்டிருந்தவர்களின் கதை- மட்டக்களப்புப் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘என்ஜினி’ல்லா ரயில் பெட்டிகள் காற்றின் வேகத்தினால் தாமாகவே வேகமாக உருண்டு சென்று தண்டவாளத்தில் தஞ்சம் புகுந்து குந்தியிருந்தவர்களைத் துவம்சம் செய்த கதை -சூறாவளி அனர்த்தங்களுக்கு மத்தியிலும் பிரசவங்கள் நடந்து பிள்ளைகளுக்குப் ‘புயலவன்’- ‘சூறாங்கனி’ எனப் பெயர் சூட்டிய கதை-களுவாஞ்சிக்குடியில் ஒரு வயது மகனை இருட்டில் நெஞ்சோடு அணைத்துத் தூக்கிக் கொண்டோடிய தகப்பனிடமிருந்து பிள்ளையைப் பிய்த்தெடுத்து வீசியதும் தமது மகனைப் பறிகொடுத்து அலறிய தந்தையினதும் தாயினதும் ஓலத்திற்கு மத்தியில் வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் குழந்தை பால் மணலில் உயிருடன் சுருண்டு படுப்பது தெரிந்து ஓடிச்சென்று அள்ளி உச்சி மோந்த கதை-1907 இலே அடித்த சூறாவளிக்குப் பின்னர் மண்டூரிலே வீதியோரங்களில் நடப்பெற்று வளர்ந்து பருத்துநின்ற பெருவிருட்சங்களெல்லாம் வேரோடு சாய்ந்து வீதிகளெல்லாம் வெறிச்சோடிப் போன கதை-மண்டூரில் தீவுக்காட்டில் சூறாவளி இரவில் அள்ளிப் போன அழகாக இளம் பெண்ணின் கூந்தல் முட்கம்பி வேலியில் சிக்கிக் கொண்டதால் உயிரிழந்து ஈற்றில் நிர்வாணமாகத் தொங்கிய துயரம் தோய்ந்த கதை-தும்பங்கேணிக் கிராமக் குடியேற்ற வீட்டிலிருந்து அருகிலிருந்த வாடிக்குத் தனது மூன்று பிள்ளைகளுடன் தந்தை ஒருவர் ஓடி வந்திருக்கிறார். சூறாவளி மூன்று பிள்ளைகளையுமே அள்ளிச் சென்று விட்டது. அடுத்த நாள் பகல் அவனது வீட்டு நாய் ஒரு கிழிந்த சட்டையுடன் வாடியை நோக்கி ஓடி வருகிறது. பின் வந்த வழியே மோப்பம் பிடித்து ஓடுகிறது. தந்தை நாயைப் பின்தொடர்கிறார். ஆழமான குட்டையொன்றைச் சுற்றி ஆளுயரத்திற்குப் புல்வளர்ந்திருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளும் பிணமாகக் குட்டையில் மிதக்கின்றன. உயிர் தப்பிய மூன்றாவது ஆண் குழந்தை நீண்டு வளர்ந்திருந்த புல்லினைக் கெட்டியாகப் பிடித்த வண்ணம் அனுங்கியபடி கிடக்கிறது. நாயின் நன்றி உணர்வை வெளிப்படுத்திய சோகக் கதை இப்படிப் பல கதைகள்.
வழியிலே ஓரிடத்தில் தன் ஆசை மகனைப் பறிகொடுத்த ஓர் அபலைத் தாயின் ஒப்பாரி-சவப்பெட்டிகள் கிடைக்காததால் அடக்கத்திற்காக தட்டியிலே வைத்து காவிச் செல்லப்படும் சடலங்கள் என நெஞ்சை நெருடும் காட்சிகள் வேறு.
காத்தான்குடி அரச மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பிலே கம்யூனிஸ்ட் கட்சியை வளர்க்கப் பாடுபட்ட தோழர் கிருஷ்ணக்குட்டி கட்டிலில் கூரை இடிந்து வீழ்ந்து மரணத்தைத் தழுவிய செய்தி கோகுலனின் நெஞ்சைக் கனக்க வைத்தது.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து வந்து இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து மட்டக்களப்பிலே உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக உண்மையாக உழைத்த மாமனிதன் தோழர் கிருஷ்ணக்குட்டிக்காய்க் கோகுலனின் மனம் ஊமையாய் அழுதது. அவரை உன்னதமான இடத்தில் வைத்துத் தொழுதது.
சூறாவளி அனர்த்தம் ஏற்படுத்திய அழிவுகளை வழியெங்கும் கண்ட படியும் நடைப்பயணத்தில் தங்களுடன் கூட வந்தவர்கள் கூறிய கதைகளைக் கேட்டபடியும் நடந்த அவர்கள் மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டுக்கு அருகிலுள்ள கோகுலனின் மனைவியின் வீட்டை வந்தடைய நடுநிசியாகிவிட்டிருந்தது. அங்கும் உடைமைச் சேதமேயொழிய உயிர்ச் தேசங்கள் எதுவுமிருக்கவில்லை. தாகத்துடனும் பசியுடனும் நீண்டதூர நடைப்பயணம் ஏற்படுத்திய உடற்களைப்புடனும் வந்து சேர்ந்த கோகுலனுக்கும் அவனது மைத்துனன் ரவீந்திரனுக்கும் நடுநிசியில் எழுந்த ரவீந்திரனின் தாயாரும் கோகுலனின் மனைவியான ரவீந்திரனின் தங்கையும் கோதுமைமாப் பிட்டும் அவித்து மோர்மிளகாயும் பொரித்துச் சாப்பிடக் கொடுத்தார்கள். சூறாவளி அடித்து உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடான அந்த நேரத்தில் அதுதான் சாப்பாடு. இருவரும் வயிறுமுட்டச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் சாய்ந்தார்கள்.
(தொடரும் …… அங்கம் – 49)