சிட்டுக்குருவி!… கவிதை… கிறிஸ்டி நல்லரெத்தினம்
சிட்டுக்குருவியாய் சிறகடித்தேன் நான்
அந்த வானை தொட்டு கூடு வந்தேன்
எல்லைகள் இல்லா வாழ்வில்
தொல்லைகள் மறந்து வாழ்ந்தேனடா……..
உன்னை பார்க்கும் வரை….பார்க்கும் வரை.
உன்னுள் சிறையானேனடா !
காதல் சிலையானேனடா!
என் கைபற்றி, இதழ் வருடி
நீ சொன்ன கதை நூறு …..பின்
நான் கண்ட கதை வேறு!
பொய் எதுவோ மெய் எதுவோ
நானறியேனடா…..நானறியேனடா
அன்பே என்றாய்
என் உயிரே என்றாய்
பொய்தானா அது?
கானல் நீரில் தோணியாய்
தவிக்கிறேனடா
தனியாய் தவிக்கிறேனடா!
சீதை அவள் மான் தேடி பிரிந்தகதை மறந்தேனா?
இல்லை என் உறவுகள் மறந்தேனா?
புலராத பொழுதை பரிசளித்து
போனாயே என் அன்பே… நெடுந்தூரம்…..மிக நெடுந்தூரம்!
இந்த ஒற்றைக் குயிலோசை கேட்டாயோ?
மீண்டும் வசந்தத்தை வரவாக்கி தருவாயோ?
வாடுகிறேன்… வருந்துகிறேன்
அன்பே வா, சேர்ந்தே போவோம் புதுப்பயணம்
நித்தம் இணைந்தே இசைப்போம் புது கானம்
என்னை ஏந்திக்கொள்ளடா
அன்பே… என் அன்பே!
கிறிஸ்டி நல்லரெத்தினம்