சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை மீட்பர் என்று சொல்லலாமா?… நியூசிலாந்து சிற்சபேசன்
இலங்கை சனாதிபதித் தேர்தல் முடிவு மாற்றத்தையே கோரியிருக்கின்றது. பெரும்பான்மை மக்களின் ஆதரவு எந்த வேட்பாளருக்குமே கிடைக்கவில்லை. அதனால், வெற்றியாளரை அறுதியாகத் தீர்மானிக்க விருப்புவாக்குகளே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையிலேயே, தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசாநாயக்க பெற்ற வெற்றியைக் கவனிக்கவேண்டும்.
இடதுசாரி அரசியல் கூட்டணியாக 2019ம் ஆண்டில் உருவாகியதே தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) ஆகும். அஃது, இருபதுக்கு மேற்பட்ட அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களைக் கொண்ட கூட்டணியாகச் சொல்லப்படுகின்றது. அதிலே ஜேவிபி முதன்மையானதாகும். ஒருவகையில், கடந்தகாலங்களை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு அரசியல் முயற்சியின் வெளிப்பாடே தேசிய மக்கள் சக்தி என்றும் சொல்லலாம்.
1960களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூடிக்குலாவ இடதுசாரிகள் ஆரம்பித்தனர். அஃது, சோசலிச சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்களைச் சினப்படுத்தியது. அவ்வாறானதொரு சூழலில், ரோகண விஜயவீர தலைமையில், 1965 மே மாதத்தில், நிறுவப்பட்டதே ஜேவிபி அமைப்பாகும். அஃது, சனநாயக வழிமுறைகளில் வேகமாகவே நம்பிக்கையை இழந்தது. ஆயுதப்புரட்சி மூலமாக ஆட்சியைக் கைப்பற்றத் துணிந்தது.
1970களில், ஆயுதக்கிளர்ச்சியொன்றின் சமிக்ஞைகள் துல்லியமாக வெளிப்பட்டன. அன்றைய சிறிமாவோ பண்டாரநாயக்கா அரசு துரிதமாகச் செயற்பட்டது. ரோகண விஜயவீரவைக் கைதுசெய்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைத்தது. ஆனாலும்கூட, ஜேவிபியின் ஆயுதக்கிளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை.
1971 ஏப்ரல் 5ல் ஆயுதக்கிளர்ச்சி வெடித்தது. எழுபதுக்கு மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் உள்ளடங்கலாக, தெற்கில் பலபகுதிகள் கைப்பற்றப்பட்டன. ஆயுதக்கிளர்ச்சியை முறியடிக்க சர்வதேச உதவி தேவைப்பட்டது. இந்தியா மற்றும் சீனா உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. அதன்போது பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஜேவிபி தடைசெய்யப்பட்டது.
1977ல் ஜே.ஆர் ஜெயவர்த்தன அரசு தடையை நீக்கியது. ரோகண விஜயவீரவை விடுதலை செய்தது.
1982 சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோகண விஜயவீரவினால் நான்கு விழுக்காடு வாக்குகளைத் திரட்ட முடிந்தது.
இந்திய எதிர்ப்பு என்பது ஜேவிபி ஆன்மாவிலே ஆழமாக வேரூன்றியதாகும். அதனுடன் தொடர்புபடுத்தியே, இனப்பிரச்சினையையும் ஜேவிபி கையாண்டிருக்கின்றது.
1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையை ஜேவிபி எதிர்த்தது.
அதனுடைய தொடர்ச்சியாகவே ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி ஆரம்பமாகியது எனலாம்.
1987 – 1989 காலப்பகுதி பல்வேறு சவால்களின் சாட்சியாகியது. வடக்கு – கிழக்கில் இந்திய அமைதிப்படை, தெற்கில் ஜேவிபி கிளர்ச்சி என நெருக்கடிகள் விரிந்தன.
1990ம் ஆண்டுக்குப் பின்னர், சனநாயகப் பரப்பிலே வெளிப்படுவதற்கான பிராயத்தனங்களை ஜேவிபி வெளிப்படையாக ஆரம்பித்தது.
1994ம் ஆண்டிலிருந்து தேர்தல் அரசியலில் முனைப்புடன் பங்குகொண்டது.
பத்து ஆண்டுகள் கழித்து, 2004ல் 39 பாராளுமன்ற ஆசனங்களை வென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசில் பங்காளியாகியது. அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றது. விடுதலைப்புலிகளின் இருப்பு, நோர்வேயின் சமாதான முன்னெடுப்பு என பல்வேறுமுனைகளிலும் இனப்பிரச்சனை தொடர்பில் ஜேவிபி சினந்துகொண்டிருந்தது. சுனாமி பொதுக்கட்டமைப்பு விவகாரத்தில் சுயரூபம் வெளிப்பட்டது.
இந்திய-இலங்கை உடன்படிக்கை மூலமாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு-கிழக்கு இணைப்பை ஜேவிபி எதிர்த்தது. 2006 ஜூலையில் நீதிமன்றத்தை நாடியது. மூன்றே மாதத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்பிரகாரம், 2007 சனவரி 1ல் வடக்கு – கிழக்கு இணைப்பு சட்டபூர்வமாகத் துண்டிக்கப்பட்டது.
அந்தவகையிலே பார்க்கும்போது, 13வது திருத்தம் வழியாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமை ஜேவிபிக்கு பாகற்காய் என்பது இரகசியமல்ல. அதுவிடயத்தில், ஓடுமீன்ஓட உறுமீன் வரும்வரையில் ஜேவிபி காத்திருக்க ஆரம்பித்தது எனலாம்.
2004ற்குப் பிந்தைய பத்து ஆண்டுகளில் ஜேவிபியின் உட்கட்சிப் பிளவுகள் சந்திக்கு வந்தன.
2015 பாராளுமன்றத் தேர்தலிலே ஐந்து விழுக்காடுக்குச் சற்று குறைவான வாக்குகளைப் பெற்றது.
ஜேவிபி என்னும் அடையாளத்தைப் பரணில் போடுவதன் மூலமாகவே, அரசியல் மீள் எழுச்சியைச் சாத்தியமாக்கலாம் என்பது உணரப்பட்டது. அதனுடைய விளைவே தேசிய மக்கள் சக்தி எனலாம்.
2019ல் சனாதிபதித் தேர்தலிலே, மூன்று விழுக்காடு வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.
2020 பாராளுமன்றத் தேர்தலிலே, நான்கு விழுக்காடுக்குச் சற்று குறைவான வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. அதன்மூலமாக, இரண்டு பாராளுமன்ற ஆசனமும், ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்தன.
2024 சனாதிபதித் தேர்தலிலே, 43 விழுக்காடுக்குச் சற்றுக் குறைவான வாக்குகள் கிடைத்திருக்கின்றது.
பாராளுமன்றம் மற்றும் சனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஒப்பீட்டுக்கு உரியவையல்ல. ஆனாலும்கூட, மக்கள் மனநிலையின் பெருவெட்டான வெளிப்பாடாகக் கொள்ளலாம்.
ஆனால், 2024 சனாதிபதித் தேர்தலிலே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாய்ப்பை, ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை போன்றது என்றும் சொல்லலாம்.
ஒருபேச்சுக்குச் சொல்வதெனில், இரண்டாகப் பிளவடைந்த ஐக்கிய தேசியக் கட்சி வழியானவர்களுடைய வாக்குவிகிதத்தைச் சேர்த்துப் பார்க்கும்போது, யார் வெற்றிபெற்றிருக்கலாம் என்பது வெள்ளிடைமலையாகும்.
எதுஎப்படியாகிலும், சனாதிபதி தேர்தல் முடிவு சர்வரோக நிவாரணி அல்ல. “வானத்தை வில்லாக வளைப்பதற்கு” நிகரான சவால்கள் வரிசைகட்டிக் காத்திருக்கின்றன.
நிறைவேற்று அதிகார சனாதிபதி, வலிமையாகச் செயற்படுவதற்குப் பாராளுமன்றப் பெரும்பான்மை அவசியமாகும். சாதாரண பெரும்பான்மையைப் பெறுவதற்கே 113 ஆசனங்கள் தேவையாகும்.
பாராளுமன்றத் தேர்தலிலே வெற்றி பெறுவதற்கு தேசம் தழுவிய கட்சிக் கட்டமைப்பு தேவை. மக்களுக்குப் பரிச்சயமான வேட்பாளர்கள் தேவை. அஃது, தேசிய மக்கள் சக்திக்கு வசப்படுமா என்பது கேள்வியாகும்.
சிலவேளைகளில், தற்போதைய சனாதிபதித் தேர்தல் வெற்றிக்களிப்புடன், பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் பெருவாரியான வெற்றியைக் கொடுக்கலாம். தேசிய மக்கள் சக்தி “ஒப்பாரும் மிக்காருமற்ற” பலம் கொண்ட ஆட்சியாகலாம். அஃது, “ஒளிமயமான எதிர்காலத்தின் ஆரம்பம்” என சிலாகிக்கப்படலாம்.
ஆனால், அசுரபலத்தோடு ஆட்சிப்பீடமேறிய ஜெயவர்த்தன அரசு முன்னெடுத்த அரசியல்யாப்பு மாற்றம் உள்ளிட்ட “கைங்கரியங்களின்” எதிர்மறையான தாக்கம் “தலைமுறைகளைத்” தாண்டுகின்றமை மறப்பதற்கில்லை.
மறுவளத்தில், பாராளுமன்றத் தேர்தலிலே போதிய வெற்றி கிடைக்காவிடில் ஏற்படக்கூடிய சூழலை, தேசிய மக்கள் சக்தி எவ்வாறு கையாளும் என்பது புதிராகும்.
கொள்கையற்ற கட்சிகள் அல்லது நபர்களுடன் இணைந்து, பாராளுமன்றப் பெரும்பான்மையைக் கட்டியெழுப்ப வேண்டியநிலை ஏற்படலாம். அஃது, பொதுமக்கள் எதிர்பார்க்கும் அல்லது தேசத்துக்கு அவசியமான “மாற்றத்தை” சாத்தியப்படுத்துமா என்பது சந்தேகமாகும்.
ஆக, சனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை மீட்பர் என்று சொல்லலாமா என்பது விடை தெரியாத கேள்வியாகும்.
Thanks Sabes
Congratulation HE President to remove island wide caste racism to unite nation for development with God Blessings 🙏