அல் ஜசீராவை முடக்க அராஜகம்….இஸ்ரேலின் ஊடக சுதந்திர மீறல் !… ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில் உள்ள அல் ஜசீராவின் அலுவலகத்தை இஸ்ரேலிய இராணுவம் வலுக்கட்டாயமாக மூடியதை பத்திரிகை சுதந்திரக் குழுக்களும் உரிமை ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர். இது பத்திரிகை மீதான கொடுந் தாக்குதல் என்றும் கூறியுள்ளது.
காசாவில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறையினை பற்றி நீண்டகாலமாக அல் ஜசீரா விரிவான செய்திகளை வழங்கி வருகிறது.
இதுவரை காசாவில் போர் தொடங்கியதில் இருந்து நான்கு அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்தில் உள்ள அல்ஜசிரா அலுவலகம் பலமுறை குண்டுவீசி தாக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் யுத்தம் தீவிரமாக தொடங்கியதில் இருந்து காஸாவில் மொத்தம் 173 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயினும் செய்தியாளர்களை குறிவைக்கவில்லை என்று இஸ்ரேல் அப்பட்டமாக பொய் கூறி வருகிறது.
பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது :
ரமல்லாவில் உள்ள அல் ஜசீரா அலுவலகத்தை இஸ்ரேல் மூடியதை சர்வதேச பத்திரிகை அமைப்புகள் கண்டித்து உள்ளன. பத்திரிக்கையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, ஆழ்ந்த அச்சம் இருப்பதாகவும், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க அழைப்பு விடுப்பதாகவும் கூறி உள்ளது.
22/9/24 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, இஸ்ரேலிய வீரர்கள் கத்தாரை தளமாகக் கொண்ட அல்ஜசீரா பணியகத்தை சோதனையிட்டு அதை 45 நாட்களுக்கு மூட உத்தரவிட்டனர்.
ரமல்லா அலுவலகத்தில் இஸ்ரேலிய நடத்தயை ‘கிரிமினல் விடயம்’ என அல் ஜசீரா கண்டிக்கிறது. இது ஆக்கிரமிப்பு பற்றிய அல் ஜசீராவின் பார்வையை இஸ்ரேல் மௌனமாக்கும் முயற்சியாகும். தற்போது ரமல்லாவில் உள்ள அல் ஜசீரா அலுவலகத்தை இஸ்ரேலியப் படைகள் காலவரையற்று மூடியுள்ளது.
இந்த நிகழ்வு நேரடி தொலைக் காட்சியில் படம் பிடிக்கப்பட்டது.
இஸ்ரேலிய இராணுவ நீதிமன்ற உத்தரவு அல் ஜசீராவின் பணியகத் தலைவர் வாலிட் அல்-ஒமாரிக்கு மூடப்படுவதாக இராணுவம் தெரிவித்தது.
இஸ்ரேலிய நீதிமன்ற உத்தரவு அல் ஜசீராவை “பயங்கரவாதத்தை தூண்டுவதாகவும் ஆதரிப்பதாகவும்” குற்றம் சாட்டியுள்ளது. இஸ்ரேலிய வீரர்கள் வெளியேறும் முன் அல்ஜசீரா பீரோவின் கேமராக்களை பறிமுதல் செய்ததாகவும் கூறினார்.
பத்திரிகையாளர்களை குறிவைக்கும் இஸ்ரேல்:
பத்திரிகையாளர்களை இவ்வாறு குறிவைப்பது உண்மையை அழிக்கவும், மக்கள் உண்மையைக் கேட்பதைத் தடுக்கவும் நோக்கமாக உள்ளது என்று அல் ஜசீராவின் பணியகத் தலைவர் வாலிட் அல்-ஒமாரிக் கூறியுள்ளார்.
அத்துடன் இஸ்ரேல் தாக்குதலின் போது, கொல்லப்பட்ட பாலஸ்தீன அமெரிக்க பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லேயின் சுவரொட்டிகளையும் இஸ்ரேலிய வீரர்கள் கிழித்து எறிந்தனர். அவரின் படங்கள் பணியகத்தின் சுவர்களில் கட்டப்பட்டிருந்தன என்று அல்-ஒமாரி கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் பல செய்தி நிறுவனங்களின் செயல்பாடுகளை இஸ்ரேல் மூடிவிட்டு, கேபிள் வழங்குநர்களையும் அகற்றிய ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த ரமல்லா அலுவலக சீல்வைப்பு நடந்துள்ளது.
சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு, இஸ்ரேலிய தாக்குதலாலை கடுமையாக கண்டித்து கூறியுள்ளது.
அல் ஜசீராவை தணிக்கை செய்வதற்கான இஸ்ரேலின் முயற்சிகள், பிராந்தியத்தில் பல உயிர்களை பறித்த கொடும் போர் பற்றிய தகவலுக்கான பொதுமக்களின் உரிமையை கடுமையாக பாதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அல் ஜசீராவின் பத்திரிக்கையாளர்கள் இந்த நெருக்கடியான நேரத்திலும் திறமையாக பணியாற்றி உள்ளனர். எப்பொழுதும் அவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.
எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) கண்டனம்:
எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) அல் ஜசீரா மீதான இஸ்ரேலின் இடைவிடாத தொடர் அழுத்தங்களை கண்டிக்கிறது என்றும் கூறியுள்ளது. அல் ஜசீரா சேனலை குறிவைத்து வெளிநாட்டு ஊடகங்களை மூடுவதற்கு இஸ்ரேல் அரசாங்கத்தை அனுமதிக்கும் இஸ்ரேலிய சட்டத்தை ரத்து செய்ய RSF முன்பு அழைப்பு விடுத்திருந்தது.
அத்துடன் பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் சங்கம், இஸ்ரேலின் தன்னிச்சையான இராணுவ முடிவை கண்டனம் செய்ததுள்ளது. இது பத்திரிகை பணி மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிரான ஒரு புதிய ஆக்கிரமிப்பு என்றும் கூறியுள்ளது.
இந்த முடிவைக் கண்டித்து,
இஸ்ரேலிய அழுத்தங்களை நிறுத்துமாறு பத்திரிகையாளர்களின் உரிமைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களை நாங்கள் அழைக்கிறோம் என்று பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
ரமல்லாவில் அல் ஜசீராவிற்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கையானது பத்திரிகை சுதந்திரத்தின் அப்பட்டமான மீறல்்என்று பாலஸ்தீனிய அதிகாரசபை கூறியுள்ளது.
பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது:
இதேவேளை கத்தார் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் அல் ஜசீரா வலையமைப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. இது ஆபத்தான மற்றும் அபத்தமான பொய் என்றும், இது அதன் பத்திரிகையாளர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது எனவும் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேலின் ஓராண்டு இராணுவத் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வன்முறை பற்றி தெளிவாக அல் ஜசீரா விரிவான செய்திகளை வழங்கி வருகிறது.
காசாவில் போர் தொடங்கியதில் இருந்து நான்கு அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் உள்ள அவர்களின் அலுவலகம் குண்டுவீசி தாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் யுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் மொத்தம் 173 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயினும் செய்தியாளர்களை குறிவைக்கவில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் ஊதுகுழல் என இஸ்ரேல் காட்டம்:
ஆயினும் இஸ்ரேலிய தகவல் தொடர்பு மந்திரி ஷ்லோமோ கர்ஹி, அல் ஜசீராவின் பணியகம் மூடப்பட்டதை நியாயப்படுத்தினார். காசாவின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லாவின் ஏடகங்களை “ஊதுகுழல்” என்று அழைத்தார்.
எதிரி ஊடகங்களுடன் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எங்கள் வீரமிக்க இராணுவத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று அவர் இறுமாப்புடன் கூறியுள்ளார்.