இனவாதத்தை மூலதனமாக வைக்காத அனுராவின் வெற்றி… சிவா சின்னப்பொடி பிரான்ஸ்
அனுராவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் தமிழ் அதிகார வர்க்கத்தினர் பலர் சமூக வலைத்தளங்களின் பிதற்றுகின்றனர்.உங்களுக்கு ரணில் நல்லவர் சஜித் நல்லவர்,சரத் பொன்சேகா நல்லவர் ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு நல்லவர். ஆனால் அனுரா இனவாதி.வடக்கு கிழக்கை பிரித்த கட்சியைச் சேர்த்தவர்.என்னங்கடா உங்கட நியாயம் . ரணில் சஜித்,சரத் பொன்சேகா ,சஜித்தோடு இருந்த G.L பீரிசு எல்லோரும் வடக்கு கிழக்கிலே தேனும் பாலும் ஓடவிட்டவங்களா ? விடுதலை புலிகள் இஸ்லாமியர்களை வடக்கிலிருந்து வெளியேற்றியதை வைத்துக்கொண்டு ,அது தவறு என்பதை புலிகள் ஏற்றுக்கொண்ட பின்பும் இன்றளவும் புலிகள் எங்களை இன சுத்திகரிப்பு செய்தவர்கள் பயங்கர வாதிகள் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது .உங்களுக்குள் யாரும் பிரதேச வாதிகள் இல்லையா ?சாதி வெறியர்கள் இல்லையா?
ஸ்ரீலங்காவிலே முதல் தடவையாக இனவாதத்தை மூலதனமாக வைக்காமல் ஒருவர் தேர்தலிலே வென்றிருக்கிறார்.சிங்கள இளைய தலை முறை மாற்றத்தை விரும்புகிறது . ஆனால் நீங்கள் ? மாறமாட்டோம் என்று அ டம் பிடிக்கிறீர்கள்
1970 ல் நடத்திய ஆயுத போராடத்திலே அவர்கள் 13000 பேரை இழந்தார்கள். அதன் பின் மீண்டெழுந்து 1987-89 ல் நடத்திய ஆயுத போராட்ட த்திலே 60000 பேரை இழந்தார்கள் .அவர்களது தலைவர்கள் உயிருடன் எரிக்கப்படடார்கள்.அதன் பின்பும் அவர்கள் மீண்டுவந்தார்கள்.ஆயினும் எங்களுக்குள் இருந்ததை போலச் சில புல்லுருவிகள் அவர்களுக்குள்ளும் ஆதிக்கம் பெற்றதால் தடம்புரண்டு விழுந்து எழும்பினார்கள் , பின்னர் தங்களது தவறுகளிலிருந்து படிப்பினைகளை பெற்று தங்களை மறுசீரமைத்துக்கொண்டு இன்று வெற்றியடைந்திருக்கிறார்கள்.
ஆனால் நீங்கள் ……. நான் அவற்றை எழுத விரும்பவில்லை
தற்போது அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ள கலாநிதி லயனல் போபகே தெரிவித்துள்ள கருத்துக்களை படித்துப் பாருங்கள்.
கலாநிதி லயனல் போபகே, ரோஹன விஜேவீர தலைமையிலான ஜேவிபி இன் முதலாவது பொதுச் செயலாளரக இருந்தவர் . இருவரும் சம காலத்தவர்கள் மற்றும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள்.
இவர்கள் இருவரும் 1947 பாராளுமன்றத் தேர்தலின்போது மாத்தறை மாவட்டத்தில் யுஎன்பி ஆதரவாளர்களால் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிப்புகளை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் குடும்பங்களின் வாரிசுகள்.
1960 களில் பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் மாணவராக இருந்த போபகே ஜேவிபி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 1971 கிளர்ச்சியின்போது கைது செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார் .
பல்கலைக்கழக இறுதிப் பரீட்சையில் தோற்றுவதற்கென 1972 இல் கண்டி போகம்பரை சிறைச்சாலையிலிருந்து அவர் பேராதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மீண்டும் 1983 இல் ‘தமிழர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டினார்கள்’ என்ற பொய் குற்றச்சாட்டின் பேரில் ஜே ஆர் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட 21 இடது சாரி செயற்பாட்டாளர்களில் அவரும் ஒருவர்.
“கறுப்பு ஜூலை அட்டூழியங்கள் தொடர்பாகச் சிரில் மத்தியூ மற்றும் காமினி திஸாநாயக்க போன்றவர்களைக் கைது செய்து, சிறையில் அடைக்காமல் எங்களைக் கைது செய்தது ஏன்? யுஎன்பி யைத்தடை செய்வதற்குப் பதிலாக, ஜேவிபியை தடை செய்தது ஏன்” எனக் கேட்டு, அச்சந்தர்ப்பத்தில் போலிஸாருடன் வாதிட்டதை நினைவு கூருகிறார் போபகே.
ஆனால், இரண்டு முதன்மையான விடயங்களின் அடிப்படையில் ரோஹன விஜேவீரவுடன் முரண்பட்டுக் கொண்ட அவர் 1983 இல் தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து, ஜேவிபி இலிருந்து வெளியேறினார்.
சிறுபான்மை இனங்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்தமை மற்றும் ஜேவிபி மீண்டும் வன்முறையை ஓர் அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்திருந்தமை ஆகிய இரண்டு நிலைப்பாடுகள் தொடர்பாக விஜேவீரவுக்கும், அவருக்குமிடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் தோன்றின. அந்த நிலையில், கட்சியிலிருந்து வெளியேறுவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை . அதன் பின்னர் தொடர்ந்து ஜேவிபி இன் மீது அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறார்.
தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் கலாநிதி லயனல் போபகே ‘இலங்கையில் ஜனநாயகத்துக்கான குரல்’ என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். இந்நாட்டில் வாழ்ந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலைச் சமூகங்கள் ஆகியோரின் அரசியல், கலாசார உரிமைகளுக்காக அந்த அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
தற்போது நாடு திரும்பியிருக்கும் அவர் ஒரு யூடியூப் தளத்தில் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிரியுடன் நடத்திய விரிவான உரையாடலொன்றில் இலங்கையின் இன்றைய அரசியல் நிலவரங்கள்குறித்து தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்.
” தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஜேவிபி நிலைப்பாடு மற்றும் அதன் வன்முறைச் சாய்வு ஆகிய இரண்டு முக்கியமான விடயங்களின் அடிப்படையில் நீங்கள் 1983 ன் பின்னர் அக்கட்சியிலிருந்து வெளியேறி, அதன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், இன்று ஜேவிபி யின் புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியை (NPP) ஆதரிக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறீர்கள். இது ஏன் என விளக்க முடியுமா”? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர் – ”தேசிய இனப் பிரச்சினை மற்றும் வன்முறை ஆகிய விடயங்கள் தொடர்பான என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கையில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பெற்று, சமத்துவமான பிரஜைகளாகக் கண்ணியத்துடன் வாழக்கூடிய ஒரு சூழல் நாட்டில் உருவாக வேண்டும் என்பதே எனது அவா.”
“2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபி யின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதை அவதானித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி ‘சுய நிர்ணய உரிமை’ என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும் கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மை சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
“அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்”.
“மேலும் இன்று தேசிய மக்கள் சக்தி பல முற்போக்கு அமைப்புகளையும், குழுக்களையும், பன்முகப்பட்ட தொழில்வாண்மையாளர் கழகங்களையும் உள்வாங்கிய ஒரு பரந்த முன்னணியாக எழுச்சியடைந்திருக்கின்றது.”
“மாகாண சபைகள் தொடர்பாக NPP இன்னமும் ஒரு சில மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும், 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட வேண்டும் என்ற விடயத்தை அது ஏற்றுக் கொள்கின்றது. குறிப்பாக, தமிழ் தரப்புடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, அவர்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அது கருதுகிறது.” என்று கூறினார்.
” ‘பழைய ஜேவிபி இப்பொழுது என்பிபி என்ற முகமூடியுடன் களமிறங்கியிருக்கிறது. அது எந்த ஒரு நேரத்திலும் மீண்டும் வன்முறையைக் கையில் எடுக்க முடியும்’ என ஒரு சில விமர்சகர்கள் கூறி வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,
“இலங்கை சமூகத்தின் அனைத்துத் தரப்புக்களையும் உள்வாங்கி ஒரு பாரிய மக்கள் இயக்கமாக எழுச்சியடைந்திருக்கும் தேசிய மக்கள் சக்தி இனிமேல் எந்தவொரு காரணத்திற்காகவும் வன்முறையை நாட வேண்டிய தேவை அறவே இருந்து வரவில்லை” என ஆணித்தரமாகக் கூறினார்.
“1987 – 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன.
“ஆனால், இன்றைய என்பிபி யில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை. என்கிறார் கலாநிதி போபகே.
கடந்த 75 வருட நாடாளு மன்ற அரசியல் வரலாற்றில் தமிழினம் சந்தித்த இன்னல்களுக்குச் சிங்கள பெளத்தஇனவாத தலைவர்கள் மட்டுமல்ல அவர்களோடு திரை மறைவில் இரகசிய கூட்டு வைத்திருந்த தமிழ் தலைவர்களும் காரணமாகும்.