கதைகள்

அமைதி, விசாரணை நடந்துகொண்டிருக்கிறது… சிறுகதை – 85… அண்டனூர் சுரா

“அப்படியென்றால் உமக்குத் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது, அப்படித்தானே?” கண்களை அகல விரித்து , நெற்றியைச் சுழித்து முகத்தில் கோபம் கொப்பளிக்கக் கேட்டார் நீதியரசர். அவரது கேள்வியிலிருந்த தடிப்பும், உரத்த கரகரப்பும் கலெக்டரின் முதுகெலும்பைக் குறுகுறுக்க வைத்தது. கலெக்டர் தலையை மெல்ல நிமிர்த்தினார். கைகளைப் பிசைந்துகொண்டு நீதிபதியின் முகத்தைப் பார்த்தார். கண்களைப் பார்க்கவேண்டிய அவரின் கண்கள் முகத்தைப் பார்த்திருந்தன.

“கனம் நீதியரசர் அவர்களே, துப்பாக்கிச்சூடு நடந்தேறியதற்கு பிறகே தகவல் எனக்குத் தெரியவந்தது எனச் சொல்ல வருகிறேன்.”

நீதியரசர் குனிந்து கலெக்டரின் பதிலைக் குறிப்பெடுத்துக்கொண்டு நிமிர்கையில் ஆறாம் விரலாக இருந்த பேனா மேசையில் தாளமிட்டது. அவரது இமைகள் ஏறி இறங்கின. “தகவல் தெரிவித்தவர் யார்?” .

கலெக்டர் விரல்களால் மீசையை நீவி, கைக்குட்டையால் முன் நெற்றியுடன் சேர்த்து நாசியைத் துடைத்துக்கொண்டார். இத்தனை நேரம் நீதிபதி கேட்டிருந்தக் கேள்விகளில் இக்கேள்வி சற்றே கனமானதாக இருந்தது. கலெக்டரின் கண்கள் உருண்டு, வெண்விழிகள் துடித்தன. யாரைச் சொல்லலாம், மண்டைக்குள் தேடினார்.

“கலெக்டர், உங்களைத்தான் கேட்கிறேன், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது குறித்து உங்களுக்குத் தகவல் தெரிவித்தது யார்?”
“தாசில்தார் தெரிவித்தார்”

நீதியரசரின் முகம் இருண்டு கண்கள் சிவந்தன. “துப்பாக்கிச்சூடு நடத்தியவரே தகவல் தெரிவிக்கவும் செய்தார். அப்படித்தானே?”

“அப்படியன்று. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தாசில்தார் அல்ல.”
“பிறகு?”
“காவல் துறையினர்”

நீதியரசர் பேதையெனச் சிரித்தார். சிரித்து ஆற்றிக்கொள்ளும் பதிலாகவே கலெக்டரின் பதிலிருந்தது. அவர் சிரித்ததும் அவருடன் சேர்ந்து மாமன்றம் சிரித்தது. அவர்கள் சிரித்த சிரிப்பில் அவரவர் உட்கார்ந்திருந்த நாற்காலிகள் குலுங்கிச் சிரித்தன.

“அமைதி, அமைதி. விசாரணை நடந்துகொண்டிருக்கிறது” நீதியரசர் மேசையைத் தட்டி நீதிமன்றத்தை அமைதிப்படுத்தினார். அதையும் மீறி சிரிப்பின் மிடறல் நாலாப்புறமும் தெறித்தன. நீதியரசர் கோபத்துடன் கேட்டார். “அப்படியென்றால் துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் அல்லவா தகவல் தெரிவித்திருக்க வேண்டும். தாசில்தார் தெரிவிக்கக் காரணம்?”
“துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தவர் அவர்தான்…”

“எவர்தான்…?”
“தாசில்தார்..”

நீதியரசர் தலையை ஆட்டிக்கொண்டார். கண்களை மெல்ல மூடி பதிலை உள்வாங்கினார். பிறகு குனிந்து குறிப்பெடுத்தார். “தகவலை அவர் எப்படி தெரிவித்தார்…?”

“உண்ணா போராட்டம் கலவரமாக உருவெடுத்ததால் கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட வேண்டியதாகிவிட்டது என்றார்.”
“தகவல் மட்டும் தெரிவித்தாரா, இல்லை அதற்காக வருத்தமும் தெரிவித்தாரா?”

“வருத்தமும் தெரிவித்தார்.”
“வருத்தமென்றால் எப்படி?”

கலெக்டருக்குக் கேள்வி புரிந்தது. ஆனால் புரியாததைப் போல பற்களால் உதடுகளை வருடினார். அப்படியாகச் செய்வதும், நேரம் கடத்துவதும் அவர் மேல் விழுந்திருக்கும் கறையைப் போக்கிக்கொள்ள உதவுமென நினைத்தார். “கனம் நீதியரசர் அவர்களே, உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை.”

கலெக்டரின் எதிர்வினை இரு தரப்பிலும் நின்றுகொண்டிருந்த வழக்கறிஞர்களின் நெற்றியைச் சுழிக்க வைத்தது. இரு தரப்பு வழக்கறிஞர்களும் சொல்லி வைத்தார் போல இருக்கையிலிருந்து எழுந்தார்கள். கறுப்பு அங்கியை ஒரு கையால் எடுத்துவிட்டுக்கொண்டு முன் வந்தார்கள். நீதியரசர் அவர்களின் உள்நுழைவைத் தடுத்தார். உங்களின் வாதம், பிரதிவாதங்கள் முடிந்துவிட்டது. நீங்கள் கேட்காமல் விட்டக் கேள்விகளைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்றவாறு வழக்கறிஞர்களைப் பார்த்தார். நீதியரசருக்கு மதிப்பளிக்கும் பொருட்டு இருவரும் அவரவர் இருக்கையில் அமர்ந்தார்கள்.

“பொதுமக்களின்மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குமளவிற்கு தாசில்தாருக்கு அதிகாரமிருக்கிறதா?” வார்த்தைகளில் பிசிறில்லாமல், தடித்தக் குரலில் விரலை நீட்டிக் கேட்டது நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்த பலரையும் எச்சரிக்கை செய்வதைப் போலிருந்தது. இப்படியொரு கேள்வியைக் கலெக்டர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவரையும் அறியாமல்

தலை சுருண்டது. “இ..ல்..லை…”
“என்ன இல்லை?”
“துப்பாக்கிச்சூடு பிறப்பிக்கும் அதிகாரம் தாசில்தாருக்கு இல்லை”
“பிறகு எப்படி உத்தரவு பிறப்பித்தார்..? “

கலெக்டர், தலைக்குள் பொங்கினார். அதேநேரம் நீதியரசர் முன் பணிந்தும் படிந்தும் நின்றார். இக்கேள்விக்கானப் பதிலைத் தேடுவதற்குக் காலஅவகாசம் கேட்கலாமா, என நினைத்தார். வாதம், பிரதி வாதங்களுக்குக் காலஅவகாசம் வழக்கறிஞர் கேட்கலாம், சாட்சியம் கேட்கலாம், குற்றம் சுமத்தப்பட்டவர், கூண்டில் நிற்பவர் கேட்பது, குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதானக் குற்றத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். விரல்களைப் பிசைந்தபடி நின்றார்.

“கேள்வியை நான் திரும்பவும் கேட்கத்தான் வேண்டுமா?” நீதியரசர் ஆடாமல், அசையாமல் அதேநேரம் கலெக்டரின் கண்களைப் பார்த்தப்படி கேட்டார். “கனம் நீதியரசர் அவர்களே, உங்கள் கேள்வியை நான் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள இன்னொரு முறை கேட்கிறேன்.”
“அந்த அதிகாரத்தைத் தாசில்தாருக்குக் கொடுத்தவர் யார்?”

இக்கேள்விக்கானப் பதில் இதயத்திலிருந்து வந்திருந்தது. அப்பதிலை முறித்து, மனதிற்குள் எரித்து, மூளையிலிருந்து ஒரு பதிலை உருவி நீதியரசரின் முன் வைத்தார்.

போராட்டக்காரர்களின் நடவடிக்கையைக் கண்காணித்து வந்தவர் அவர்தான். அதுமட்டுமன்று, அறவழிப்போராட்டம் கலவரமாக மாறுகையில் அவ்விடத்தில் நின்ற ஒரே உயர் அதிகாரி

அவர்தான்…”
“அவர்தான் என்றால் தாசில்தாரரைச் சொல்கிறீர்கள்.”
“ஆமாம், தாசில்தாரரைச் சொல்கிறேன்…”

நீதியரசருக்கு குறிப்பு தேவைப்பட்டது. ஒரு பக்கம் முழுவதும் எழுதி மறுபக்கமும் எழுதினார். அவரது எழுதுகோல் குறிப்பேட்டில் ஊர்ந்துகொண்டிருக்க, ஒரு கணத்தில் எழுதியதை நிறுத்திக் கேட்டார் “டெபுடி கலெக்டர் அவ்விடத்தில் நின்றிருக்க வேண்டுமே?”
“அவர் வேறொரு அலுவலில் இருந்தார்…”

அவர் எழுதுகோல் குறிப்பேட்டிற்குள் வைத்து மூடிவிட்டு விரல்களை விரல்களுக்குள் கோர்த்து நெட்டி பறித்தவாறு கேட்டார். “அவரது அலுவலை இந்த நீதிமன்றம் தெரிந்துகொள்ள விரும்புகிறது.”

கலெக்டருக்கு இக்கேள்வி பிடித்திருந்தது. மெல்லப் பதுங்கி அதேநேரம் நீதியரசரின் முன் முகத்தை நீட்டி சொன்னார் “ நீதியரசரே, அவரது அலுவல் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்..”

நீதிபதியின் முதுகு குன்றியது. குன்றிய வேகத்தில் நிமிரவும் செய்தது. அவரது கேள்விகள் சக்கரம் போலச் சுழன்று அவர் எதிர்பார்த்த விடை கிடைக்காத, அதேநேரம் மிக முக்கிய கேள்வியாகத் தெரிந்த; கேட்டக் கேள்வியையே திரும்பவும் கேட்டார். “மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்குளவிற்கு தாசில்தாருக்கு அதிகாரம் இருக்கிறதா?”
“அதிகாரம் இல்லை”

“பிறகு எப்படி உத்தரவுப் பிறப்பித்தார்?”

“அறவழியில் போராடிக் கொண்டிருந்த மக்கள், காவல் துறையினர்மீதும், அதிகாரிகள்மீதும் தாக்குதல் நடத்த துவங்கினார்கள். காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கவும், தீ வைக்கவும் செய்தார்கள்.”
“ஆகையினால்?”

“ஆமாம் நீதியரசர் அவர்களே, அரசு கோப்புகளைக் காக்கவும் போராட்டக்காரர்களின் தாக்குதலிலிருந்து மக்களை மீட்கவும் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாகிவிட்டது.”
நீதியரசரின் ஒரு விரல் குறிப்பேட்டைத் திறக்க, அவரது எழுதுகோல் குறிப்பேட்டில் கோலமிட்டது. அவருக்குப் புரியும் படியாக இரண்டு மனித உருவங்களை வரைந்து அதில் ஒன்றை அடித்து விட்டு ஒரு உருவத்தை வட்டம் கட்டியது. இக்குறிப்பு விசாரணையின் மையநரம்பைப் பிடித்துவிட்ட களிப்பைக் கொடுத்தது.

“ஒரு சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் இறந்திருக்கிறான். ஒரு சிறுவனால் கூட காவல் துறையினர்மீதும், அலுவலகத்தின்மீதும் தாக்குதல் நடத்த முடியுமா?”

கலெக்டர் சற்றும் யோசிக்கவில்லை. அவர் எதிர்பார்த்திருந்த கேள்வியைக் கேட்டுவிட்டதைப் போல பதிலளித்தார். “அவன் கீழே குனிந்து காவல் துறையினரைத் தாக்க கற்களை எடுத்திருக்கிறான்.”

இக்கணம் நீதியரசர் எழுந்திருக்க வேண்டியிருந்தது. அவர் எழுந்ததும் வழக்கறிஞர்கள் எழுந்தார்கள். உதவியாளர் ஓடி வந்தார். அவரை நோக்கி நீதியரசர் விரலைக் காட்டி அவருக்குத் தேவையான கோப்பு ஒன்றை எடுக்கப் பணித்தார். உதவியாளர் அவர் கேட்டக் கோப்புகளை எடுத்து பணிந்து குனிந்து நீதியரசரிடம் நீட்டினார். நீதியரசர் கோப்பின் நாடாவை அவிழ்த்தார். அதிலிருந்த ஒரு புகார் மனுவை எடுத்து மனதிற்குள் வாசித்தார். பிறகு அதிலிருந்து ஒரு சாராம்சத்தைத் தன் குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டு கலெக்டரைப் பார்த்துக் கேட்டார். “துப்பாக்கிச் சூட்டிற்குப் பழியான என் மகன் என்னுடன் கடைத்தெருவிற்கு வந்தவன். காய்கறி வாங்கித் திரும்பி வருகையில் கூடையின் மேலிருந்த ஒரு தேங்காய்த் தவறி கீழே விழுந்துவிட்டது. அதை அவன் குனிந்து எடுக்கையில் என் கண் முன்னே காவல்துறையினர் என் மகனைச் சுட்டு படுகொலை செய்துவிட்டார்கள்” என்பதாக அல்லவா அத்தாய் புகார் கொடுத்திருக்கிறார்?”

கலெக்டருக்குப் படபடப்பு வந்தது. “கனம் நீதியரசர் அவர்களே, இது ஆதாரமற்றது.”
“அவனது தாயார் கொடுத்த புகார் மீதான முதல் தகவல் அறிக்கை அப்படியாகத்தான் சொல்கிறது.”

கலெக்டர் அந்த ஒரு நிமிடம் உறைந்துபோய் நின்றார். பிறகு மெல்லத் தன்னை சுதாகரித்துக்கொண்டு சொன்னார். “ அவன் கடையிலிருந்து தேங்காய் வாங்கிவந்தது காவல் துறையினர்மீது தாக்குதல் நடத்தவே..”

நீதியரசரின் உடம்பு குலுங்கியது. மெல்லத் தலையை ஆட்டிக்கொண்டார். “144 தடை உத்தரவு அமுலில் இருந்ததா, இல்லையா?”

“ஆம், இருந்தது.”

“பிறகு எப்படி அச்சிறுவனால் உள்ளே நுழைய முடிந்தது?”

“கலவரம் வெடித்ததும் மக்கள் நாலாபுறமும் சிதறினார்கள். அச்சிதறலுக்குள் அவன் ஊடுறுவச் செய்தான்.”

நீதியரசரின் ஆறாம் விரல் குறிப்பேட்டில் ஊர்ந்தது. “முதல் துப்பாக்கிச்சூடு அச்சிறுவன் மீதே நடத்தப்பட்டிருக்கிறது.”

“ஆமாம், அவன்தான் கலவரத்தைத் தூண்டியவன்..”

“யார், அச்சிறுவனா?”
“ஆமாம் , அவனேதான்.”

நீதியரசரால் அதற்கு மேல் கேள்விக்கேட்க முடியவில்லை. கலெக்டரை சில நிமிடங்கள் பார்க்க மட்டும் செய்தார். குறிப்பேட்டின் ஒரு பக்கத்தைக் கிழித்து பந்து போலச் சுருட்டிக்கொண்டு கேட்டார். “அறவழியில் போராடத் தெரிந்த மக்களுக்கு கலவரம் செய்யவும் தெரியுமா?”
“இயல்பாகவே அவர்கள் கலவரக்குணம் மிக்கவர்கள்…”

கலெக்டர் உச்சரித்த அதே சொற்களை நீதியரசரின் நாவும் உச்சரித்தது. “கலவரக்குணம் மிக்கவர்கள்” என்கிற வாக்கியத்தை அவர் இரண்டொரு முறை தொண்டைக்குள் உருட்டினார். ஒரு தனி பக்கத்தில் அதை மட்டும் தனியே எழுதினார்.

“துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவு பிறப்பிக்கத் தாசில்தாருக்கு அதிகாரமில்லை. ஆனால் அவரது உத்தரவின் பேரில்தான் துப்பாக்கிச்சூடு நடந்தேறியிருக்கிறது. உத்தரவு பிறப்பித்தவரே தகவல் தெரிவிக்கவும் செய்திருக்கிறார். அதற்காக வருத்தமும் தெரிவித்திருக்கிறார், அப்படித்தானே?”
“ஆமாம் நீதியரசரே”

“வருத்தம் என்பது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகவா, இல்லை மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்காகவா?”

“அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக.”

“அப்படியென்றால் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கான வருத்தம்?”
“வேண்டியதில்லை நீதியரசரே..”

நீதியரசர் நிமிர்ந்து உட்கார்ந்தார். அவரது இமைகள் நெற்றிக்குள் ஏறி நின்றன. “ஏன்?”
“இப்படியான துப்பாக்கிச்சூட்டின் மூலம்தான் அவர்களுக்கு சரியான பாடத்தைக் கற்பிக்க முடியும்.”

நீதிபதியின் மேசையில் தண்ணீர்க்குவளை இருந்தது. அதை எடுத்து தொண்டையை நனைத்துக்கொண்டு கேட்டார். “அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியதாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்களின் கோரிக்கைக் குறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?”

“இல்லை.”
“காரணம்?”

“அவர்கள் போராட்டத்தைப் போராட்டம் போல் நடத்தவில்லை. திருவிழாப் போல் கொண்டாடினார்கள்.”
“திருவிழா போல் என்றால்?”

“கூட்டம் கூட்டமாகக் களத்திற்கு வருவதும், போராடுவதும், செல்வதும், திரும்பவும் கூடுவதுமாக இருந்தார்கள்.”

“இதற்கும் பேச்சுவார்த்தை நடத்த முடியாமைக்கும் என்ன காரணம் இருக்க முடியும்..?”
“யாரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமென அரசுக்குத் தெரிந்திருக்கவில்லை..”
“ தெரிந்திருக்கவில்லையா, தெரிந்துகொள்ளவில்லையா…?”

கலெக்டருக்கு இக்கேள்வி குழப்பமாக இருந்தது. இரண்டும் ஒன்றுபோலவே இருந்தாலும் இரண்டில் எதைத் தேர்வு செய்வதெனத் தடுமாற செய்தார். அவரது கை, பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைந்து, கைக்குட்டையைத் தேடி உதடுகளைத் துடைப்பதாக இருந்தது.
“தெரிந்துகொள்ளவில்லை.”
“அதான் ஏனென்று கேட்கிறேன்?”

“போராட்டக் களத்தில் கூடியவர்கள் உண்ணாவிரதமிருப்பார்கள். பசியெடுத்ததும் கலைந்துவிடுவார்கள் என்று நினைத்து அத்தகைய முயற்சியில் அரசு இறங்கவில்லை.”
நீதியரசர் இப்படியொரு பதிலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் மெல்ல எழுந்து இருக்கையில் நன்றாக உட்கார்ந்துகொண்டார். “துப்பாக்கிச்சூடு பெண்களின்மீதும் நடத்தப்பட்டிருக்கிறதே”

“அவர்கள்தான் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள்.”
“முன்னின்று என்றால் தலைமையேற்று என்கிறீர்களா?”
“இல்லை, முன் வரிசையில் நின்று எனச் சொல்ல வருகிறேன்.”

நீதியரசர் குறிப்பேட்டில் குறுக்காக ஒரு கோடு வரைந்தார். அக்கோட்டின்மீது நான்கைந்து வட்டம் வரைந்து, பெண்ணைக் குறிக்கும்படியாக அந்த வட்டத்தின் மேல் சிலுவைக் குறியிட்டார்.

“சிறுவர், சிறுமியர்மீதும் குறி வைக்கக் காரணம்?”

“பெரியவர்கள் மீதே லத்தி சார்ஸ் செய்யப்பட்டது. ஆனால் சிறுவர், சிறுமியர்மீது அடி விழுந்தது எதிர்பாராதது.”

“துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக முன்னறிவிப்பு செய்யப்பட்டதா?”
“அதற்கான கால அவகாசம் இருந்திருக்கவில்லை…”
“தண்ணீர் வீச்சு, புகைக்குண்டு?”
“அக்கட்டத்தைக் கலவரம் தாண்டிவிட்டது”.

“துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன் மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா…?”
“தெரிவிக்கப்பட்டது…”

“பின் ஏன் காயமுற்றவர்கள் மரணமுற்றார்கள்…?”
“மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை…”

இக்கேள்வியைத் தொடர்ந்து அடுத்தக் கேள்விகளைக் கேட்க நீதியரசருக்கு நேர அவகாசம் தேவைப்பட்டது. ஒரு நிமிடம் எழுந்து நின்று பார்வையை நாலாபுறமும் சுழற்றினார். போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனையை நினைக்கையில் அவரது நாசிகள் விடைத்தன. நாசியுடன் சேர்த்து உதடுகளைச் சுழித்தார்.

“துப்பாக்கிச்சூடு குறிபார்த்துச் சுடப்பட்டதா, இல்லை உத்தேசமாக நிகழ்த்தப்பட்டதா…?”
“குறி பார்த்தே சுடப்பட்டது”
“குறி என்னவாக இருந்தது….?”

“பெண்கள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகள் இல்லாமலிருக்க பார்த்துக்கொள்ளப்பட்டது”
“போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்கள்மீது முதல் குறி வைக்கப்பட்டது. அப்படிதானே…?”

“அப்படியன்று. ஆனால், குறியில் ஒன்றிரண்டு பேர் தலைமையேற்றவர்கள் இருக்கவே செய்தார்கள்…”

நீதியரசர் ஆசனத்தின் முன் அமர்விற்கு வந்தார். அடுத்து மிக முக்கியமான கேள்வியொன்றை கேட்கப்போகிற தாகத்தில் நிமிர்ந்தார். “ முழங்கால்களுக்குக் கீழ்தானே துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும். மார்பில் , தலையில், குறி வைக்கப்பட காரணம்…”

“அவர்கள் சர்க்கார் வாகனத்தின்மீதும், அலுவலகத்தின்மீதும் தீ வைத்ததால் புகை மூட்டம் எழுந்தது. ஆகவே குறி தவறிவிட்டது”

“துப்பாக்கிச்சூடு நடத்தப்பட உடனடிக் காரணம், அம்மக்கள் மீதிருந்த முன் விரோதம் என இந்நீதிமன்றம் சந்தேகப்படுகிறது. இதற்கு கலெக்டர் என்கிறவர் வகையில் சொல்லும் பதில் என்ன?”

“அம்மக்கள்மீது அரசுக்கு ஒரு போதும் முன்விரோதம் இருந்ததில்லை..”
நீதியரசர் அவருடைய கோப்பிலிருந்து சில ஆதாரங்களை எடுத்தார். தூசிகளைத் தட்டினார். “அம்மக்கள் இதற்குமுன் பல கட்டப் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதில் முக்கியமானப் போராட்டமாகக் கூலி உயர்வுப் போராட்டம், வார விடுமுறைக்கானப் போராட்டம், எட்டு மணி நேரப் போராட்டம்,..” என பல போராட்டங்கள் இருந்திருக்கிறதே”
“கனம் நீதியரசர் அவர்களே, இப்போராட்டங்களைத் துப்பாக்கிச்சூட்டுடன் முடிச்சுப்போட வேண்டியதில்லை”

“உங்கள் பதில் திருப்தியளிக்கும்படியாக இல்லை. வ.உ.சிதம்பரனார் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவர். அவர் தலைமையிலான கோரல் பஞ்சாலை தொழிலாளர் போராட்டம் மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. அப்போராட்டத்தை வழிநடத்தியவர் சுப்பிரமணிய சிவா. இவரும் மக்களின் தலைவர்தான். அவர் பேச்சு அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் சிம்மச்சொப்பனமாக இருந்திருக்கிறது. அப்போராட்டத்தை ஒடுக்குவதிலும், ஒரு கட்டுக்குள் கொண்டுவருவதிலும் ஆளும் பிரிட்டிஷ் அரசு தோல்வியைத் தழுவியிருக்கிறது.”

கலெக்டரால் ஒன்றும் பேச முடியவில்லை. குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தார். மேலும் நீதியரசர் தொடர்ந்தார். “ஆமாம், அப்போராட்டத்தில் ஏற்பட்ட தலைக்குனிவு ஆட்சியாளர்களிடம் புகையும் நெருப்புமாக இருந்திருக்கிறது. இதற்கிடையில் வங்கத் தலைவர் பிவின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலையாகியிருக்கிறார். அவரது விடுதலையைத் தூத்துக்குடி மக்கள் கொண்டாடியிருக்கிறார்கள். அப்படியான கொண்டாட்டத்தில்தான் அவர்களின்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறீர்கள். வ.உ.சிதம்பரம், சுப்பிரமணிய சிவா, போன்றவர்களைக் கைது செய்திருக்கிறீர்கள். சுப்பிரமணியப் பாரதி என்கிற கவிஞர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தப்பித்து பாண்டிச்சேரியில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். பாண்டிசேரி பிரெஞ்ச் ஆட்சிக்குக் கட்டுப்பட்டப் பகுதி என்பதால் அவரை உங்களால் கைது செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் கலெக்டர் என்கிற முறையில் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

கலெக்டர் விஞ்ச் தலையைச் சற்றே நிமிர்த்தினார். நீள் சம்பவத்துடன் கூடியக் கேள்விக்கு ஓரளவேனும் நேர்த்தியாகப் பதில் சொல்லிவிட வேண்டுமென முயற்சித்தார். “கனம் நீதியரசர் அவர்களே, மக்களின் கொண்டாட்டம் என்பது பிவின் சந்திரபாலின் விடுதலை போராட்டமாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. அது ஹிந்துஸ்தான் மக்களின் விடுதலைக்கானப் போராட்டம். அப்போராட்டத்தைத் துப்பாக்கிச்சூடு வழியே கட்டுப்படுத்தாவிட்டால் அப்போராட்டம் மதராஸ் மாகாணம் முழுமைக்கும் பரவியிருக்கும். இதனால் ஆளும் நம் பிரிட்டிஷார் ஆட்சிக்குப் பெரிய தலைவலியாக அமைந்திருக்கும்.”

நீதியரசரின் கண்கள் சிவந்தன. வார்த்தைகள் அமிலத்துளி போலத் தெரித்தன. “இத்துப்பாக்கிச்சூடு பிரிட்டிஷ் மகாராணி குடும்பத்தைக் கலங்கப்படுத்தியிருக்கிறது. மேலும் நம் பிரிட்டிஷார் நிர்வாகம் பிரெஞ்சு, டச்சுக்காரர்களின் கேலிக்கு உள்ளாகியிருக்கிறது…”
கலெக்டரின் உதடுகள் துடித்தன. அவர் கைகளைக் கட்டிக்கொண்டு சரணாகதியாக நீதியரசர் முன் நின்றார். அவரது தலை மன்னிப்புக் கோரி நின்றது. “கனம் நீதியரசரே, இலண்டன் மாநகர் அனுமதியில்லாமல் இத்துப்பாக்கிச்சூடு நடத்தியமைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். அதற்காகக் கிழக்கிந்திய மகாராணியிடம் மன்னிப்புக் கோருகிறேன்…”

நீதியரசர் ஆசனத்தில் குலுங்கி உட்கார்ந்தார். அவர் மேல் போர்த்தியிருந்த கருப்பு ஆடையை நன்றாக நீவி எடுத்துவிட்டுக்கொண்டார். அக்கனமே துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கானத் தீர்ப்பை எழுதினார்.

“ஹிந்துஸ்தான் காலனி, மதராஸ் மாகாணம், திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி சரகத்தில் நடந்தேறிய எதிர்பாரா துப்பாக்கிச்சூடு, அச்சூட்டில் இறந்து போனவர்கள், காயமுற்றவர்கள்,.. என இச்சம்பவத்திற்காகத் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரை தெரிவித்த ஆழ்ந்த வருத்தத்தையும், நமது பிரிட்டிஷ் மகாராணியிடம் அவர் கேட்டிருந்த மன்னிப்பையும் இந்த நீதிமாமன்றம் பெரிதென ஏற்கிறது.

மேலும் விஞ்ச் துரையின் நிர்வாகத் திறமை, சாதூரியமான பேச்சு இரண்டையும் பெரிதும் மதிக்கிறது. அவரது ஆட்சித்திறமைக்கு மதிப்பளிக்கும் வகையில் மேலும் இரண்டு ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக பணியாற்ற மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் அதிகாரத்திற்குட்பட்ட இந்த நீதிமாமன்றம் ஆணை பிறப்பிக்கிறது….” என்று தன் தீர்ப்பை வாசித்து எழுந்தார் நீதிபதி ஏ.எஃப். பின்ஹே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.