கதைகள்

நடுகைக்காரி 75…  ஏலையா க.முருகதாசன்

நீலா தமக்கையுடன் புடவைக் கடைக்குள் நுழைவதைப் பார்த்துவிட்ட மங்களேஸ்வரி புஸ்பாவுக்குச் சொல்ல,புஸ்பாவும் நீலாபை; பார்த்து விடுகிறாள்.

புஸ்பாவின் தாயார் அவருக்கு வலது பக்கத்தில் புஸ்பா அதற்கடுத்து மங்களேஸ்வரி அதற்கடுத்து மங்களேஸ்வரியின் தாயார் என வடக்குப் பக்கத்து துணிப்பட்டடைக்கு முன்பாக துணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தெற்குப் பக்கத்தில் இருந்த துணிப்பட்டடைக்கு முன்னால் ஞானமும் அவனுடைய தாயாரும் நின்று துணிகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கடைக்குள் காலடி எடுத்து வைத்த நீலா ஒரே பார்வையிலேயே தனக்குத் தெரிந்த எல்லாரும் நிற்பதைப் பார்த்துவிடுகிறாள்.

ஓ எல்லாரும் இஞ்சைதான் நிற்கினம் என்று தன்னையுமறியாமல் நீலாவின் வாய் முணுமுணுக்க யாரெல்லாரும் இஞ்சை நிற்கினம் என்று நீலாவின் தமக்கை கேட்க சமாளித்த நீலா நிக்கிற சனங்களைச் சொன்னான் என்கிறாள்.

தமக்கையுடன் வந்த நீலா வடக்குப் பக்கத்து துணிப் பட்டடைக்குப் போனவள் புஸ்பாவின் தாய்க்குப் பக்கத்தில் போய் நின்று துணிகளைப் பார்த்த நீலா,தமக்கையிடம் நீ இங்கை நின்று துணிகளைப் பார் நான் அங்கை போறன் என்று சொல்லிக் கொண்டே ஞானத்திற்குப் பக்கத்தில் போய் நின்று சீத்தை; துணிகளை அவை சுற்றி வைச்ச மட்டைகளிலிருந்து கொஞ்சம் விரிச்சுப் பார்த்தவள் அடிக்கடி கடைக் கண்ணால் அவனையும் அவனுக்குப் பக்கத்திலிருந்த தாயையும் பார்த்தபடி இருந்தாள்.

மங்களேஸ்வரி நீலா என்ன செய்கிறாள் யாருக்குப் பக்கத்தில்: நிற்கிறாள் எனப் பார்த்தவள் திடுக்கிட்டு விடுகிறாள். ஞானத்தின் தாய்க்குப் பக்கத்தில் நின்ற நீலா அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறாள் .பதிலுக்கு ஞானத்தின் தாயும் புன்னகைத்து இப்பத்தான் வாறியளோ என்று கேட்க ஓம் என்பது போல தலையாட்டுகிறாள் நீலா.

துணிகளைப் பார்த்தபடியே எங்கை இருக்கிறனீங்கள் என்று கேட்க கொல்லங்கலட்டியில் என்று பதில் சொல்கிறாள் நீலா.

இதையெல்லாம் கவனிச்சுக் கொண்டிருந்த மங்களேஸ்வரி என்ன நினைச்சாளோ தெரியாது வடக்குத் துணிப் பட்டடையைவிட்டு வேகமாக தெற்குத் துணிப்பட்டடையில் நின்ற ஞானத்தின் தாய்கருகில் வந்தவள் தான் வாயால் வரச் சொல்லி அழைப்பதை நீலா கண்டுவிடக்கூடாது என்பதற்காக கண்களாலும் தலையை மேலும் கீழுமாக ஆட்டியும் வாங்கோ எனச் சொல்ல,ஞானத்தின் தாய் ஏன் எதுக்கு என்பது போல இமையைச் சுருக்கியும் நாடியை மேலே கொண்டு வந்தும் சைகையால் கேட்க,வாங்கோ என்பதை வாய்க்குள் பல்லை நெருமிக் கட்டாயப்படுத்துகிறாள்.

ஏன் இவள் இப்படி அவசரப்படுத்துகிறாள் எனப் புரியாத ஞானத்தின் தாய் சண்முகவல்லி மங்களேஸ்வரிக்குப் பின்னால் போகிறாள்.கடையின் வாசலைத் தாண்டியதும்,ஞானத்தின் தாயின் கையை இழுக்காத குறையாக இழுத்துக் கொண்டு போனவள் சங்கக் கன்ரீனடியில் நின்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள.; புடவைக் கடைக்குள் போவோர் வருவோரால் அந்த இடம் ஒரே சனமாக இருக்கவே மாமி வாருங்கள் உள்ளை போய் ஒரு வடையும் தேத்தண்ணியும் குடிப்பம் என்றவள் சண்முகவல்லிக்கு வாய் திறந்து கதைக்க நேரம் கொடுக்காமல் அவளின் கையைப் பிடித்து இஞ்சை இருப்பம் என்று ஒதுக்;குப்பறமாக இருந்த வாங்கில் இருந்தனர்.

அவர்களிருவரும் இருந்ததைக் கண்ட அங்கை வேலை செய்கிற ஆள் அவர்களிருவரின் அருகில் வர அவன் கேட்காமலே எங்களிரண்டு பேருக்கும்; தேத்தண்ணியும் ஆளுக்கொரு கடலை வடையும் கொண்டு வாருங்கள் என மங்களேஸ்வரி சொல்ல தம்பி ஒரு வடையல்ல ஆளுக்கு இரண்டு வடை கொண்டு வாருங்கள் என்று சொன்னவள் ஞானம் என்னை எங்கையென்று தேடப் போறான் அவனை விட்டிட்டுச் சாப்பிடுறது மனசுக்கு ஒரு மாதிரியிருக்கு என்று சண்முகவல்லி சொல்ல,மாமி இது ஒரு பெரிய விசயமே நான் பிறகு அவரை இஞ்சை கூட்டிக் கொண்டு வந்து இன்னுமொருக்கா வடையும் சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிக்கிறன்,மாமி அதைவிட ஒரு பெரிய பிரச்சினை இருக்கு என்று மங்களேஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கன்ரீனில் வேளை செய்யிற ஆள் ஆங்காங்கே நெளிஞ்ச அலுமினியத் தட்டில் நான்கு கடலை வடையையும் இரண்டு கிளாசில் தேத்தண்ணியையும் கொண்டு வந்து வைக்கிறான்.

மங்களேஸ்வரி வடையைக் கடித்து சாப்பிட்டு தேத்தண்ணியை வாயில் வைக்க ஐயோ சரியான சூடு என்று சொல்லி நாக்கை நீட்டியவள்,மாமி உங்களுக்குப் பக்கத்திலை ஒருத்தி வந்து நின்றாளே அவளுக்குப் பெயர் நீலா.அவளுக்கும் உங்கடை மோனுக்கும் அவ்வளவு நல்லாயில்லை,இப்ப நான் சொல்லப் போறதைக் கவனமாகக் கேட்டு,அவள் உங்கடை வீட்டைதானே புஸ்பா வந்தவள் என்று கேட்டாள் எங்கடை வீட்டையா என்று ஒன்றுமே நடக்காத மாதிரி ஆச்சரியமாகக் கேட்டு பொய் சொல்ல வேண்டும் என்று மங்களேஸ்வரி சொல்ல பொறு பொறு ஞானத்திற்கும் அந்தப்: பொடிச்சிற்கும் என்னதான் பிரச்சினை என்று சண்முகவல்லி குறக்கிட்டுக் கேட்க அது ஒருரு பெரிய கதை எட்டாம் வகுப்பிலை நடந்த ரோசாப்பூக் கதை என்ற மங்களேஸ்வரி அதைப் பிறகு விலாவாரியாகச் சொல்றன் என்றவள் திரும்பவும் சொல்றன் மாமி புஸ்பா உங்கடை வீட்டை வந்தவளா என்று கேட்டாள் ஒரேயடியாக அடிச்சுச் சொல்லுங்கள் வரேலையென்று என்று அவள் சொல்ல,என்ன பிள்ளை நீ இந்த வயசிலை போய் பொய் சொல்லச் சொல்றியா என்று சண்முகவல்லி கேட்க எங்கடை திருவள்ளுவர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால் பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்று சொல்லியிருக்கிறார்.

ஏதாவது நன்மைக்கென்றால் பொய் சொல்லலாம் என்பதே அதன் கருத்து.ஆனால் அவர் எந்த வயதுக்காரர் பொய் சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை, எல்லாரும் பொய் சொல்லலாம் என்றுதான் சொல்லியிருக்கிறார் என்றவள் மாமி இன்னொரு விசயம் அம்மாட்டை புஸ்பா எங்கடை வீட்டைதான் வந்தவா என்று திருவள்ளுவரைச் சாட்சிக்கழைத்து பொய் சொல்லச் சொல்லியிருக்கிறன்,அம்மாவும் நீங்களும் வாய்கூசாமல் பொய் சொல்லுங்கள் என்றவளைப் பார்த்து சண்முகவல்லி சிரிக்க,மாமி இப்ப ஏன் என்னைப் பார்த்து சிரிக்கிறியள் என்று மங்களேஸ்வரி கேட்க,இல்லை பிள்ளை நீ கதைக்கிற விதம் பகிடியாயும் இருக்குதுசீரியசாயும்; இருக்குது, நீ கதைக்கிற விதத்தைப் பார்க்கப் பார்க்க உன்னோடை கதைச்சுக் கொண்டிருக்கலாம் போலையிருக்கு என்ற சண்முகவல்லி,பிள்ளை வடைகளுக்கும் தேத்தண்ணிக்கும் எவ்வளவு காசு என்று கேள் நான் குடுக்கிறன் என்றவளிடம் மாமி அதொண்டும் வேண்டாம் அண்ணையின்ரை எக்கவுண்டிலை எழுதச் சொல்கிறன் என்று மங்களேஸ்வரி சொல்ல யார் உன்ரை அண்ணை அவருக்குப் பெயர் என்ன இஞ்சை எக்கவுண்ட் இருக்கா சங்ககக் கன்ரீனிலை கடன் கொடுக்க மாட்டினமே என்று விடுத்து விடுத்து ஞானத்தின்ரை தாய் கேட்க,அண்ணையின்ரை பெயர் முருகதாசன் அவர் இஞ்சதான் ஒபீசிலை வேலை செய்கிறார்,புடவைக் கடையின்ரை வரவு செலவு கொள்முதல்,இந்தக் கன்ரீனின் வரவு செலவு கொள்முதல் போன்றவற்றைச் சரி பார்ப்பது ஏதாவது பிழை நடந்தால் சங்கத் தலைவருக்கும் முகாமையாளருக்கும் அறிவிப்பது அவர்தான், இஞ்சை வேலை செய்யிறவை இஞ்சை பலகாரங்கள் சாப்பிட்டாலோ மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டாலோ மாத முடிவில் கணக்குப் பார்த்து அவையின்ரை சம்பளத்திலையிருந்து கழிச்சுப் போட்டுத்தான் சம்பளத்தையே குடுப்பினம் என்று விபரிக்க, தனக்குத் தெரியாமல் கன்ரீனிலை தேத்தண்ணி வடை சாப்பிட்டதை கொண்ணை அறிஞ்சால்; கோபிக்கு மாட்டாரோ என்று கேட்க கோபிச்சால் கோபிக்கட்டும் என்றவள் எழுந்து காசுப் பட்டடைக்குப் போய் காசாளரிடம் நான் முருகதாசன்ரை தங்கச்சி நாங்கள் இப்ப சாப்பிட்ட எல்லாக் கணக்கையும் அவற்றை கணக்கிலை எழுதுங்கோ என்றவள் எவ்வளவு காசு என்று கேட்க காசாளர் நாலு வடைக்கும் இரண்டு வடைக்கும் கணக்குப்: பார்த்து ஆறு ரூபாய் என்றவர் அடுக்கி வைக்கப்பட்ட கொப்பிகளிலிருந்து மட்டையில் முருகதாசன் சிலம்பரசி என்றெழுதிய கொப்பியை எடுத்தவர் உங்கடை பெயரென்ன என்று மங்களேஸ்வரியைக் கேட்க,மங்களேஸ்வரி என்று அவள் சொல்ல கொப்பியை விரித்து மங்களேஸ்வரி என்று எழுதி பிறாக்கட்டுக்குள் ஆங்கிலத்தில் முருகதாசனின் சிஸ்டர் என எழுதி திகதியம் போட:டு ஆறு ரூபாய் என எழுதியவர் மங்களேஸ்வரியிடம் கையொப்பமும் வாங்கினார்.

இண்டைக்குச் சனிக்கிழமை பெரும்பாலும் அண்ணையும் அண்ணியும் ஓபீசிலை ஓவர்ரைம் வேலை செய்வினம் என்று நினைக்கிறன் என்றவளிடம், கொண்ணை கல்யாணம் செய்திட்டாரோ என்று கேட்க ,அவர் செய்திட்டார் இஞ்சை ஒபீசிலை வேலை செய்யிற சிலம்பரசியைச் சைட்டடிச்சு லவ்பண்ணி கல்யாணம் செய்தவர்.

என்னைக் கரை சேர்க்காமல் அண்ணை அதுவும் லவ்பண்ணிக் கல்யாணம் செய்திட்டார் என்று அம்மாவுக்குக் கோபம்,அண்ணை கல்யாணம் செய்து ஒரு வருசமாச்சு அம்மா இன்னும் கதைக்கிறதேயில்லை அப்பா கதைக்கிறவர்,அண்ணையும் அண்ணியும் வாடகைக்கு வீடு எடுத்து இருக்கினம் அதை விடுங்கோ மாமி அது பெரிய கதை ஒரு நாளைக்கு உங்கடை வீட்டை வந்து ஆரச்சோர கதை சொல்றன் என்றவள் சொல்லிக் கொண்டே கன்ரீனைவிட்டு வெளியே வந்த மங்களேஸ்வரி,ஞானத்தின் தாயிடம் சரி மாமி நீங்கள் முன்னுக்குப் போங்கள் நான் பிறகு வாறன் என்று சண்முவல்லியை அனுப்பி வைக்கிறாள.; தனக்கருகில் நின்ற பெண்ணை காணவில்லையே என்று நினைத்தவாறு தற்செயலாக புடவைக்கடை வாசலடியைத் திரும்பிப் பார்க்க,தனக்கருனகில் நின்ற பெண்ணும்,கொஞ்சம் தள்ளி மங்களேஸ்வரியும் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள் நீலா.

இவ்வளவு நேரமும் தாய் தனக்கருகில் இல்லாமல் போனதால் ஞானம் நீலா நின்ற இடத்திலிருந்து கொஞ்சும் தள்ளி இரண்டு மூன்று பேருக்கு அப்பால் நின்றவன,; தாயைக் கண்டதும் அம்மா இவ்வளவு நேரமும் எங்கையம்மா போயிட்டு வாறியள்; நல்ல துணிகளெல்லாம் விற்று முடியப் போகுது கெதியிலை வந்து பார்த்து எடுங்கோம்மா கடைக்குள்ளை நிக்கவே ஏலாமலிருக்குது ஒரே வெக்கையும் வியர்வையுமாயிருக்குது என்று ஞானம் தாயிடம் சொல்ல ஓகோ இவாதான் ஞானத்தின்ரை அம்மா போல என்று நினைத்தவள் அதைக் கேட்டுவிட வேண்டியதுதான் எனத் தீரமானிக்கிறாள்.

மங்களேஸ்வரி தன்னை வலுக்கட்டாயமாக கன்ரீனுக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கை வைச்சு பொய் சொல்லச் சொன்னதை மூடிமறைச்சு உள்ளுக்குள்ளை கனநேரம் நிண்டதாலை ஒரு தேத்தண்ணி குடிக்க வேணும் போல அதுதான் உன்னோட படிக்கிற இந்தப் பிள்ளையும் கூப்பிட போய்க் குடிச்சிட்டு வாறன் என்று சொல்லிக் கொண்டே நீலாவுக்குப் பக்கத்தில் போய் நிற்கிறாள் ஞானத்தின் தாய்.

தனக்கருகில் நின்ற ஞானத்தின் தாயை புன்முறுவலுடன் பார்த்த நீலா நீங்கள் ஞானத்தின் அம்மாவா அவரோடைதான் நானும் மங்களமும் அந்தப் பக்கம் நிக்கிற புஸ்பாவும் படிக்கிறம் என தான் கேட்க வேண்டியதற்கு அடிகோலினாள் நீலா.

மங்களேஸ்வரி சொன்ன மாதிரி புஸ்ப ஞானத்தை வருத்தம் பார்க்க வந்ததை கேட்டுவிடுவாள் போலிருக்குது என்று நினைக்கும் போதே அன்ரி உங்கடை வீட்டை அந்தப் பக்கம் நிக்கிற அந்தப் பிள்ளை இவரை வருத்தம் பார்க்க வந்தவாவா எனக் கேட்க, என்ன பிள்ளை கேட்கிறாய் எனக்கொண்டும் விளங்கேலை எந்தப் பிள்ளையைச் சொல்கிறாய் என்று நெற்றியைச் சுருக்கி அந்தச் சுருக்கத்துக்குள் உண்மையை மறைச்சு எதுவுமே விளங்காதது போல நடிச்சாள் ஞானத்தின் தாய்.

ஞானத்தின் தாயிடம் நீலா கேட்டது மங்களேஸ்வரிக்கும் கேட்டது.ஆனால் எதுவுமே கேளாதது போல துணிகளை எடுத்து பட்டடையில் வைத்துக் கொண்டிருந்த சிவரஞ்சனியிடம் அக்கா அதை எடுங்கோ என ஒரு சீத்தைத் துணியைக் காட்டியபடி ஞானத்தின் தாயைக் கடைக்கண்ணால் பார்த்தவள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அக்கறையாய் ஆசையாய் துணியைப் பார்ப்பது போல அவளும் நடிச்சுக் கொண்டிருந்தாள்.

அன்ரி அங்கை திரும்பிப் பாருங்கள் நீளமான தலைமயிருடன் அதை போனிற்ரைலாகக் கட்டி உயரமாய் ஒருத்தி நிற்கிறாளே அவளைத்தான் சொல்றன் அவள்தான் உங்கடை வீட்டுக்க வந்தவளா எனக் கேட்க,நீலா கடைக்குள் வருவதற்கு முன்பாகவே புஸ்பாவும் தாயும் வந்துவிட்டதைக் கண்ட ஞானத்தின் தாய் அப்பதான் முதன்முதலாக பார்ப்பது போல திரும்பிப் பார்த்தவள்,அந்தப் பிள்ளையா அந்தப் பிள்ளையை இப்பத்தான் பார்க்கிறன் அவாவும் உங்களோடையா படிக்கிறவா,அவா ஏன் எங்கடை வீட்டுக்கு வரவேணும் அவா வரேலையே,ஞானத்துக்கும் வருத்தம் ஒண்டும் வரேலையே என பொய் சொல்கிறாள் ஞானத்தின் தாய்.

நீலா தாயிடம் கேள்வி மேல் கேள்வி கேட்பதையும்,தாய் அழகாக பொய் சொல்லி நடிப்பதையம் அவதானித்த ஞானம் அம்மா பொய் சொல்ல மாட்டாவே இது மங்களேஸ்வரியின் வேலையாகத்தானிருக்கும் என்று நினைச்சவன் எதையும் அவதானிக்காதது போல துணிகள் உடுப்புகளிருக்கும் அலுமாரியைப் பார்ப்பதும் சீத்தைத் துணிகளை விரிச்சுப் பார்ப்பதுமாக இருக்கிறான்.
தனக்கு வலது பக்கத்திலிருந்த மங்களேஸ்வரிக்கு மட்டுமே கேட்கத் தக்கதாக எப்ப தொடங்கி நீங்கள் தரகர் வேலை செய்கிறியள்,நீங்கள் சொல்லிக் குடுத்ததை கிளிப்பிள்ளைமாதிரி ஞானத்தின்ரை தாய் நல்லாய் ஒப்புவிக்கிறா என்ற நீலா சோற்றுக்குள் பூசனிக்காயை மறைப்பது போல புஸ்பா தங்கடை வீட்டுக்கு வந்ததை மூடி மறைக்கிறா என்றவள் சிவரஞ்சனியிடம் பெரிய பூசனிக்காய்ப் படம் போட்ட சீத்தைத் துணி ஏதாவது இருக்கிறதா எனக் குத்தலாகக் கேட்க,பதிலுக்கு தலையிலை செருகிற மாதிரி பெரிய ரோசாப்பூ படம் போட்ட சீத்தைத் துணியிருந்தா காட்டுங்கோ என்கிறாள் மங்களேஸ்வரி குத்தலாக.

நீலாவும் மங்களேஸ்வரியும் கேட்ட படங்கள் போட்ட சீத்தைத் துணிகள் எதுவுமே இல்லை என்பது தெரிந்த கடைப் பணியாளர் சிவரஞ்சனி இவை இரண்டு பேருக்குள்ளும் ஏதோ இருக்குது என நினைக்கிறாள்.

ரோசாப்பூ படம் போட்டது என்று கேட்காமல் தலையிலை செருகிறமாதிரி ரோசாப்பூ என்று மங்களேஸ்வரி சொன்னதையும் அது ரோசாப்பூ சம்பந்தப்பட்ட கதை என்று கன்ரீனில் வைச்சு மங்களேஸ்வரி சொன்னதையும் இணைச்சுப் பார்த்த ஞானத்தின் தாய்,ஞானத்துக்கும் நீலாவுக்மிடையில் கொலிஜ்ஜிலை எதோ நடந்திருக்குது என ஊகிக்கிறாள்.

(தொடரும்..)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.