சொல்லித்தான் ஆகவேண்டும்!… சொல்-21 … அரசியல் பத்தித்தொடர்…. தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
மஞ்சள் நீரில் குளிப்பாட்டி குங்குமப்பொட்டு வைத்து
மலர் மாலையோடு வலம் வரும் பலி ஆடு
இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ எனும் அமைப்பினால் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா. அரியநேத்திரன், ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பின்பு தான் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியிலேயே பயணிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
இவரது அரசியல் கோமாளித்தனங்களில் இதுவும் ஒன்று. தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான-அக்கட்சியின் முன்னாள் (மட்டக்களப்பு மாவட்ட) பாராளுமன்ற உறுப்பினரான அவர், தனது பொறுப்புணர்ந்தவராக இருந்திருந்தால் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் தனது அரசியல் விருப்பத்தை-நிலைப்பாட்டை முன் வைத்துக் கலந்துரையாடிய பின்னர்தான் அதாவது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதியுடன்தான் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கியிருக்க வேண்டும்.
அல்லது தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிய பின்புதான் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு அவர் சம்மதித்திருக்க வேண்டும்.
இவற்றைச் செய்யாமல் அவர் இவ்வாறு தன்னிச்சையாகத் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தலைப்பாகை கட்டிக் கொண்டிருப்பது அவரது பொறுப்பற்ற தன்மையையும் தராதரத்தையும் (Quality) காட்டுகிறது. தன்னை மலினமாக விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளராக நிற்கிறாரே தவிர இதிலே தமிழ் மக்கள் நலன் சார்ந்த எந்தச் சிந்தனையும் கிடையாது.
தமிழ்த் தேசியத்தின் குறியீடாக-அடையாளமாகத் தான் நிற்கிறேன் என்று எந்தவித ஆளுமையுமற்ற அரியநேத்திரன் கூறியிருப்பது தமிழ் மக்களை அவமானப்படுத்துவதற்கு ஒப்பாகும்.
தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இப்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்துத் தீர்மானம் எடுத்துவிட்டு அரியநேத்திரனைத் தேர்தல் போட்டியிலிருந்து விலகுமாறு கேட்டுள்ளது. அவர் இதனைச் செய்யாவிட்டால் (செய்யப்போவதில்லை) தமிழரசுக் கட்சி எதிர்காலத்தில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். தமிழ்ப் பொது வேட்பாளராக நின்றமைக்கு ஏற்கெனவே அவரிடம் விளக்கம் கோரப்பட்டும் உள்ளது.
நிலைமை இப்படியிருக்கும்போது ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்பும் தான் தமிழரசுக் கட்சியிலேயே தொடர்ந்தும் பயணிப்பேன் எனக் கூறியிருப்பது அரசியல் கோமாளித்தனம் இல்லாமல் வேறென்ன? வீரப்பேச்சுக்கும் வெட்டிப்பேச்சுக்கும் தமிழரசுக்கட்சியை விட்டால் இவர்களுக்கு வேறுகதியில்லையென்பது உண்மையே.
மேலும், அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் இன்னொன்றையும் அவதானிக்க முடிகிறது.
படித்தவர்கள்-அரசியலை உணர்ந்தவர்கள்-அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்கள் மத்தியில் தனது தமிழ்ப் பொது வேட்பாளர் பருப்பு அவியாது என்பதைத் தெரிந்துகொண்டு அதனால் நகர்ப் புறங்களைத் தவிர்த்துக் கொண்டு கிராமப்புறங்களில் வதியும் பாமர மக்களிடம் சென்று தமிழ்த் தேசியம்-தமிழினம் என்ற வார்த்தைஜாலங்களை உச்சரித்தும் நமக்காக நாம் என்று கோஷமிட்டும் அவர்களை உணர்ச்சியூட்டியும் உசுப்பேற்றியும் வாக்குக் கேட்டு அந்த அப்பாவி மக்களை வஞ்சனையில் வீழ்த்திவிடச் செய்கிறார்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதால் கடுகளவு நன்மைகூட தமிழ் மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் போல ‘சுடுகிறது மடியைப்பிடி’ எனும் அவசரத்தில் எழுந்த தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு அரியநேத்திரனைத் தமிழ்ப் பொது வேட்பாளராகத் தெரிவு செய்ய, இரவல் புடவையில் இது நல்ல கொய்தகம் என்பது போல அவரும் தமிழ்ப் பொது வேட்பாளர் தலைப்பாகையை வாங்கித் தலையில் சிக்காறாகக் கட்டிக்கொண்டு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போல உலா வருகிறார்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் தமிழ்ப் பொது பொறுப்பாளர் ஒருவர் போட்டியிட்டு வென்று இந்நாட்டின் ஜனாதிபதியாகும் சாத்தியம் அல்லது சூழல் இருக்குமானால், ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ யாழ்குடா நாட்டுக்கு வெளியே அதிலும் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வேட்பாளர் நியமனத்தை வழங்க முன் வந்திருக்குமா? இல்லவேயில்லை. பலிக்கடா என்று நன்கு தெரிந்துள்ளதால் இதை அரியநேத்திரனுக்கு வழங்கியுள்ளார்கள். இது தெரியாத அரியநேத்திரனும் மஞ்சள் நீரில் குளித்து குங்குமப்பொட்டு வைத்து மலர் மாலையுடன் வலம்வந்துகொண்டிருக்கிறார்.
அரியநேத்திரன் ‘தமிழ்த் தேசியப் பொது கட்டமைப்பிடம்’ ஆப்பிளுத்த குரங்குபோல் வசமாக மாட்டிக் கொண்டுள்ளாரென்றேபடுகிறது.
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் உண்மையில் யாரோ மறைக்கரங்களால் கொடுத்த கூலிக்கு மாரடிக்கும் கோமாளித்தனமே தவிர இதனால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் விளையப் போவதில்லை. மாறாக எதிர்மறையான – துன்பியல் விளைவுகளையே ஏற்படுத்தும்.
இன்னொரு கோமாளித்தனமும் தேர்தல் பிரச்சார அரங்கில் நிகழ்ந்துள்ளது.
அது என்னவெனில், தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான ஞா. சிறிநேசன் தன்னை ஓர் அரசியல் விஞ்ஞானியாகக் கற்பிதம் பண்ணிக்கொண்டு, மானமுள்ள தமிழர்கள்-சூடு சொரணையுள்ள தமிழர்கள்-கௌரவமான தமிழர்கள் தமிழ்ப் பொது வேட்பாளரின் ‘சங்கு’ச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமாம்.
அப்படியானால் சிறிநேசனிடம் சில கேள்விகள்.
அவர் பெருந்தலைவராகத் தமிழரசுக் கட்சியில் ஏற்றிருந்த அமரர் இரா. சம்பந்தன் அவர்கள் அவர் இறப்பதற்கு முன்னர் தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து விட்டுத்தானே கண்ணை மூடினார்.
சிறிநேசனின் அறிவிப்பின்படி பார்த்தால் அமரர் இரா. சம்பந்தன் மானமற்ற-சூடு சொரணையற்ற-கௌரவமற்ற தமிழராகிறார். அதுபோல் அவரைப் பெருந்தலைவராக ஏற்று அரசியல் செய்த சிறிநேசனும்கூட மானமற்ற-சூடு சொரணையற்ற-கௌரவமற்றவராகவல்லவா ஆகிறார்.
சொல்லப்போனால் சிறிநேசன் அண்ணாந்து கொண்டு துப்பியிருக்கிறார்.
எனவே, தமிழ் மக்கள் தமிழ்த் தேசியம்-தாயகம்-சுய நிர்ணய உரிமை-இன உணர்வு-எழுக தமிழ்-வெல்க தமிழ்-சங்கே முழங்கு-நமக்காக நாம் போன்ற வார்த்தைஜாலங்களில் மயங்கி விடாது, தமிழ் மக்கள் ஓர் அறிவார்ந்த சமூகம் என்பதை எண்பிப்பதற்காகவேனும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும்.