போர்னியோவில் நடந்த கொலைகள்…
அவுஸ்திரேலிய , நியூசிலாந்து மற்றும் நேசநாடுகளின் 2428 இளைஞர்கள் ஜப்பானிய போர் வீரர்களால் பட்டினிபோட்டு, சித்திரவதை செய்து படுகொலை கொலை செய்யப்பட்ட இடத்தில் நான் நிற்கிறேன் என்றபோது இதயம் கனத்தது.
எண்பது வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவங்களை இரை மீட்டாது கடந்துபோக முடியாது. இப்படியான சம்பவங்களை மறந்து விடுதல் மீண்டும் அவைகள் நடப்பதற்கு வழிவகுக்கும். முக்கியமாக ஜனநாயக காலத்தில் ஒவ்வொருவரும் அறிவதன் மூலம் தவறானவர்கள் அரசியல் செய்வதைத் தடுக்க முடியும். ஹிட்லர் போன்றவர்கள் தேர்தல் முறையிலேயே ஆட்சிக்கு வந்தார்கள்.
யுத்தங்கள், அதனால் ஏற்படும் மரணங்களை பத்திரிகைளில் செய்தியாகவோ, தொலைக்காட்சியில் காட்சியாகவோ பார்க்கும்போது, அவை நமக்குத் தூரத்துப் பச்சையாகி விடுகிறது. மனத்தில் நிற்பதில்லை தற்போது காசாவில் நடந்த விடயங்கள் பக்கத்து நாடுகளுக்கே உறைக்கவில்லை. அதேபோல் இலங்கையில் நடந்த மரணங்கள் பல இலங்கைத் தமிழர்களுக்கே புரியவில்லை. மரணங்கள் தங்கள் பரப்புரைகளுக்கு வலியூட்டும் என அதிக மரணங்களுக்காகக் காத்திருந்தனர்.
எல்லா நாட்டிலும் சமூகங்கள், காலம் காலமாக துன்பியல் சம்பவங்களாக நடந்தவற்றை இலகுவாக மறந்து விடுகிறது. ஆனால் அந்த இடங்களிலிருந்தவர்களுக்கு மன ரீதியில் அல்லது உடல் ஏற்படும் பாதிப்பு நிரந்தரமானது. சமீபத்தில் போர்னியோவிலுள்ள சாபா மாநிலத்திற்குப் போனபோது எனக்கு அப்படியான அனுபவம் ஏற்பட்டது. அதுவும் உடனடியாக அல்ல, படிப்படியாகவே.யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரியில 1971ம் வருடம் பல்கலைக்கழக புகுமுக வகுப்பான 11-12வருடங்களில் ஒன்றாகப் படித்த ஐந்து பேர் மற்றொரு நண்பருடன் ஆறு பேராக மலேசியாவின் சாபா மாகாணத்திற்குப் போய்ச் சேர்ந்தது ஏப்ரல் 24 மாலையில் ஆனால் ஏப்ரல் 25 அன்சாக்(Anzac) நாள் எனப்படும். அது அவுஸ்ரேலியர்களுக்கு முக்கியமான நாள்.
சன்டங்கன்(Sandakan) நகரில் சங்கரி -லா ஹோட்டேலுக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தவுடன் எங்களுடன் வந்தவர்கள் எல்லோரும் அவுஸ்திரேலியர்கள் என்பதால் ‘நாளை அதிகாலை நான்கு மணியளவில் இங்குள்ள மயானத்தில் பிரார்த்தனை நிகழ்வு நடக்க உள்ளது. இதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து உதவி பாதுகாப்பு அமைச்சர் வந்துள்ளார் ‘ என வழிகாட்டி அழைப்பு விடுத்தார்.
சிட்னி, கான்பெரா, மெல்பேன் நகரங்களிலிருந்து, இரவு-பகல் எனப் பயணம் செய்து கோலாலம்பூர் சென்று, அங்கிருந்து பின்பு சபாவிலுள்ள சன்டங்கன் நகருக்கு அடுத்தநாள் மாலையில் போய்ச் சேர்ந்தோம். மீண்டும் படுத்து எப்படி அதிகாலை எழுந்து போவது ?
அதுவும் விடுமுறை எனச் சென்றபின் காலையில் எழுவது சாத்தியமா?
உடல் அலுப்பும் நித்திரையும் இறுக்கமாக எங்களைப் பிடித்திருந்தது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லுரி விடுதியிலிருந்த காலத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து நல்லூருக்குப் பிரார்த்தனைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு கட்டாயம் இருந்தது.
வழிகாட்டி எங்கள் நீண்ட முகங்களைப் பார்த்தபின் , ‘ விரும்பினவர்கள் மட்டும் வாருங்கள் ‘ எனக் குரலைத் தளர்த்திக்கொண்டார். எங்களுக்கு உள்ளுர மகிழ்ச்சி, ஆனால் மறைத்துக்கொண்டோம்.
அன்று இரவு அந்த ஹோட்டேலில் நடந்த உணவு விருந்துக்கு, அவுஸ்திரேலிய உதவி பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மலேசியாவிலுள்ள அவுஸ்திரேலிய அரச தூதர் மற்றும் சன்டங்கன் மாநகரத் தந்தை எனப் பலர் வந்தார்கள்.
முன்னூறுக்கு மேற்பட்டவர்களும் முக்கியஸ்தவர்களும் கலந்து கொண்ட அந்த இரவு விருந்தில் மது பரிமாறப்படவில்லை என்தை அறிந்தேன். அத்துடன் சபா பிரதேசத்துக்குரிய கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நடனங்கள் என நடந்தது. சபா பிரதேசம் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் இடம் என்பதால் அவர்களது நடனங்கள் பிரத்தியேகமாக இருந்தது.
அந்த விருந்தில் நாங்கள் கலந்துகொண்ட போதும் உண்மையில் நாங்கள் அந்த நிகழ்வின் தாற்பரியத்தைப் பரிந்து கொள்ளவில்லை என்ற உண்மையை ஒத்துக்கொள்ளவேண்டும். காரணம் எங்களுக்கு அக்காலத்தில் அங்கு நடந்த விடயங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
காலையில் எழுந்து, காலை உணவை முடித்தபின் 9 மணியளவில் நாங்கள் ஹோட்டேலின் வரவேற்று மண்டபத்திற்கு வந்தபோது எங்கள் குழுவில் பலர் காலை பிரார்த்தனைக்குச் சென்று, மீண்டும் திரும்பி வந்திருந்ததைக் கண்டோம் .
நாங்கள் அங்குள்ள நினைவிடத்திற்கு பின்பாக சென்றோம். அத்துடன் அங்கிருந்த அருங்காட்சியகத்தையும் மற்றைய பழைய செய்திகளையும் பார்த்தபோது ஏன் காலை அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்ற விடயம், குற்றமாக என் நெஞ்சை அழுத்தியது
பிரித்தானியர்களிடமிருந்து ,மலேசியா, சிங்கப்பூர், போர்னியோ என்ற பகுதிகளை யப்பானியர்கள் கைப்பற்றியபோது, அவுஸ்திரேலியா நியூசிலாந்து போர்வீரர்கள் ஏராளமானவர்கள் யுத்த கைதிகளாகப் பிடிக்கப்பட்டார்கள் .
மலேசிய , சிங்கப்பூரில் பிடிபட்டவர்களைப் பர்மா ரெயில் பாதை போட அழைத்துச் சென்று ஏராளமானவர்கள் மரணமடைந்தார்கள். அதில் ஏராளம் இந்தியர்கள், முக்கியமாகத் தமிழர்கள் இருந்தார்கள்.
அதேபோல் போர்னியோவில் கைது செய்யப்பட்ட நேச நாடுகளின் போர் வீரர்களை வைத்து சன்டங்கன் பகுதியில் விமான இறங்கு தரை உருவாக்கினார்கள். ஆனால் அதைப் பிரித்தானியா, அமரிக்கா விமானங்கள் அதைக் குண்டு போட்டுத் தகர்த்தன. இக்காலத்தில் சபா மகாணத்தின் உள்ளூர் மக்களும், பிடிபட்ட போர் வீரர்களும் சேர்ந்து எதிர்ப்பை காட்டியதும் யப்பானியர்களுக்கு கோபத்தை வரவழைத்தது.
வானொலி சமிக்கை மூலம் அந்த விமானத் தளத்தை அடையாளம் காட்டிக் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதுவரையும் ஓரளவு நிதானமாக நடந்த ஜப்பானியர், பின்பு தங்களது வெறுப்பையும் அதிருப்தியையும் பிடிபட்டிருந்த கைதிகளிடம் காட்டினார்கள். கைதிகளைத் தண்டித்தும், சித்திரவதை செய்தும் , பட்டினி போட்டனர். சிறிய காரணங்களுக்காகக் கொலைகளைச் செய்தனர்.
அமரிக்கா, எந்த விதமான எரிபொருளும் இல்லாத ஜப்பான் மீது கொண்டுவந்த எரிபொருள் தடை ஜப்பான் போரில் ஈடுபட்டதற்கு முக்கியக் காரணம். மேலும் ஜப்பானியர்கள், போர்னியோவில் எண்ணை கிடைக்கும் என்ற எண்ணம் வலுப்பெற்றதால், ஆரம்பத்தில் விமானத்தளம் கட்டினார்கள். போர் வலுப்பெறக் கிழக்குப் பகுதியிலிருந்து 192 மைல்கள் தூரமான மேற்கு பகுதிக்குக் கைப்பற்றிய போர்வீரர்களை வேலையாட்களாக நடத்திக் கொண்டு சென்றனர். அதற்கு மலை, சதுப்புநிலம், காடு அத்துடன் நுளம்பு , பாம்பென அபாயங்கள் நிறைந்த கடினமான பகுதியூடாக சாபா மக்களது உதவியோடு நடந்த இந்த பயணம் மிகவும் கடுமையானது . சாபா உள்ளுர்வாசிகள் வழிகாட்டிகள். அவர்கள் ஜப்பானியர் மேலுள்ள வெறுப்பில் மேலும் கடினமான பாதையூடாக அழைத்துச் சென்றதும் பலரது இறப்புக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
455 பேரில் 190 பேர்களே வழியில் உள்ள ரானே (Ranau) அடைய முடிந்தது. மீண்டும் இரண்டாவது தரம் 530 பேரில் 183 பேர் மட்டும் ரானேயை அடைந்தனர். அப்பொழுது ஆரம்பத்திலிருந்த 190 பேரில் 6 பேர் மட்டும் உயிரோடு இருந்தனர். பலர் உணவற்றும் நோயினாலும் இறந்தனர். மேலும் காடுகள் ஊடாக நடந்தபோது போர் வீரர்களின் சிறிய எதிர்ப்புகள் அல்லது நடக்க பலமற்று இருக்கும்போது அவர்கள் தண்டனையாக்க கொல்லப்பட்டனர் . இறுதியாக அங்கு தமக்கு நடந்த அநியாயத்தைச் சொல்வதற்கு மிகச் சிலர் மட்டுமே மிஞ்சினார்கள். அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்த சபா நிகழ்வு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஜப்பானியார்களது செய்கைகள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து படைவீரர்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. உள்ளூர் மக்களில் 16 வீதமானவர்கள் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புக் காலத்தில் கொல்லப்பட்டார்கள்.
ஐரோப்பாவில் நாஜி ஜேர்மனிய படைகளது அட்டூழியங்கள், நாவல்கள் திரைப்படங்கள் எனப் பேசப்பட்ட அளவு ஜப்பானியர்கள் செய்தவை பேசப்படவில்லை . முக்கியமாகச் சீனாவில் 1937லிருந்து 1945 வரை கிட்டத்தட்ட 10 மில்லியன் சீனர்கள் மற்றும் 5 மில்லியன் கொரியன், பிலிப்பைன் மற்றும் இந்தோனிசியரகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இப்பொழுது பல ஜப்பானியர்கள் தங்களது மரணமடைந்த மூதாதையர்கள் கல்லறை இடங்களைப் பார்க்க வருவார்கள். அத்தோடு சில யப்பானியர்கள் பாவ மன்னிப்பு கேட்பதற்கு வருவதாக ஒரு பத்திரிகை செய்தியும் படிக்க முடிந்தது .
நான் படித்த புத்தகமொன்றின் ஜப்பானிய போர்வீரனது குறிப்பில் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் ராணுவ வீரர்களுக்குத் தலைமையிலிருந்து எந்த கட்டளையோ மற்றும் தொடர்புகள் இல்லாது அவர்கள் முயற்சியால் உயிர் வாழும் தன்மைக்குத் தள்ளப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
இப்படியான போர்கள் மனிதர்களுக்குப் படிப்பினையாக அமைந்தனவா என்ற பதில் என்னை நான் பல முறை கேட்டுக் கொண்டபோது இல்லை என்றே நினைக்க முடிந்தது.