சொல்லித்தான் ஆகவேண்டும்!… சொல்-19… அரசியல் பத்தித்தொடர்… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
உருப்படியான இலக்கு அற்ற ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’
‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ எனும் அமைப்பு பா. அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக நியமித்தபோது தான் தமிழ்த் தேசியத்தின் குறியீடாகவே போட்டியிடுகிறேன்; தேர்தல் முடிவுகளின் விளைவுகளுக்கு தன்னைப் பொது வேட்பாளராக நிறுத்திய தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புதான் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.
அதென்ன குறியீடு. குறியீடாக நின்று எதனைச் சாதிக்கப் போகிறார். தன்னை மலினமாக விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர அவரால் எதனையும் தமிழ் மக்களின் நலன் சார்ந்து சாதிக்கவே முடியாது.
பா. அரியநேத்திரன் இப்போது (04.09.2024 அன்று மன்னாரில் வைத்து) நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக வருகிறவருக்குப் பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே தமிழ்ப் பொது வேட்பாளராக இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவதாகப் பல்லவியை மாற்றிப் பாடுகிறார்.
தென்னிலங்கையிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவோ- சஜித்பிரேமதாசாவோ – அனுரகுமார திசாநாயக்கவோ – நாமல் ராஜபக்சவோ யாரோ ஒருவர் ஜனாதிபதியாக வரப்போகிறார். இவர்களில் யாருக்கு என்ன பாடத்தை அரியநேத்திரன் படிப்பிக்கப் போகிறார்.
தென்னிலங்கையிலிருந்து தெரிவாகப் போகிற இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி வழமை போல் அதாவது கடந்த காலங்களைப் போலவே பௌத்த சிங்களப் பேரினவாத அரசியல் நிகழ்ச்சி நிரலையே கொண்டு செல்வாராயின் இதில் அரியநேத்திரன் என்ன தாக்கத்தைச் செலுத்த போகிறார்.
அவற்றின் சரி பிழைகளுக்குமப்பால் அவை தோல்வியில் முடிந்த கதைகள் என்பது ஒருபுறமிருக்க கால் நூற்றாண்டு கால அஹிம்சைப் போராட்டமும் 30 வருடத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டமும் தென்னிலங்கைச் சிங்களத் தலைவர்களுக்குக் கற்றுக் கொடுக்காத அல்லது அவர்கள் கற்றுக் கொள்ளாத எந்தப் பாடத்தை அரியநேத்திரன் கற்றுக் கொடுக்கப் போகிறார் அல்லது அவர்களாகவே கற்றுக் கொள்ளப் போகிறார்கள்?
அரியநேத்திரனின் இந்த அறிவிப்புத் தமிழர்களை ஏமாற்றுகிற சிறுபிள்ளைத்தனமான அரசியல்.
அறப்போராட்ட காலத்திலும் சரி-பின்னர் வந்த ஆயுதப் போராட்ட காலத்திலும் சரி மக்கள் நலன் சார்ந்த எந்தவிதமான மூலோபாயமுமின்றி-தந்திரோபாயங்களுமின்றி வெறுமனே மேடைப்பேச்சுச் சாகசங்களால் மக்களை உணர்ச்சியூட்டித் தேர்தலில் வாக்குகளைச் சேகரித்ததைத் தவிர தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் இதுவரை (1987 இல் இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தையும் அதன் விளைவான 13 ஆவது திருத்தத்தையும் அதன் கீழ் அமைந்த மாகாண சபை முறைமையையும் தவிர) தம்மை நம்பிய தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த சமூக-பொருளாதார-அரசியல் அனுகூலங்கள் என்ன என்பதை அரியநேத்திரன் பட்டியலிடுவாரா? அவரால் முடியவே முடியாது.
நிலைமை இப்படியிருக்கத் தமிழ்ப் பொதுவேட்பாளராகத் ‘தலைப்பாகை’ கட்டிக்கொண்டு தன்னை ஒரு பெரும் அரசியல் தலைவராகக் கற்பிதம் பண்ணிக்கொண்டு 13 ஆவது திருத்தத்தைத் திரும்பியும் பார்க்கமாட்டோம் என்கிறார்.
தற்போதுள்ள 13 ஆவது திருத்தத்தை உதறியெறிந்து விட்டு அதனிலும் அதிகாரம் கூடிய அல்லது குறைந்தபட்சம் அதற்குச் சமனான வேறொன்றை அரியநேத்திரனால் கொண்டுவர முடியுமா? அல்லது அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்தியுள்ள தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினால் அல்லது அவ்வாறான தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் அங்கமாகவுள்ள ஏழு தமிழ் அரசியல் கட்சிகளால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ள ஏழு தனி நபர்களால் தனியாகவோ அல்லது கூட்டாகவோ கொண்டு வரமுடியுமா?
ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் இப்போது தமிழ்ப் பொதுவேட்பாளருக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தையும் (அறிக்கையையும்) வெளியிட்டுள்ளார்கள். ஏட்டிலேயே சுரைக்காய் வரைந்திருக்கிறார்கள். அதனை தூக்கிக் காட்டி நல்லதொரு சமையல் செய்து காட்டுகிறோம் பாருங்கள் என்று தமிழ்ச் சமூகத்தை வஞ்சிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்யும் இவ் ‘வாய் சொல்’ வீரர் கூட்டத்தைத் தமிழ் மக்கள் தயவு தாட்சண்யமின்றி நிராகரிக்க வேண்டும்.
அவ்வாறு நிராகரிக்கப்படுவதினூடாகவே தமிழ் மக்களுக்கு அறிவார்ந்ததோர் அரசியற் பாதைக்கான ஆரம்பப் புள்ளியாவது இடப்பெறும். இல்லையேல் தமிழ் மக்களை மேலும் அதலபாதாளத்தில் தள்ளவே இந்தத் ‘தமிழ்ப் பொது வேட்பாளர்’ விடயம் எதிரிகளுக்குத் துணைபோகும்.
‘தமிழ்ப் பொதுவேட்பாளர்’ விடயம் ஓர் இலக்கற்றதாகும். கண்பார்வையிழந்த குருடன் எய்த இலக்கற்ற அம்பாகும்.