கட்டுரைகள்

இலங்கை சனாதிபதி தேர்தல் நியாயமாக நடைபெறுமா?… நியூசிலாந்து சிற்சபேசன் 

இலங்கையிலே சனாதிபதி தேர்தல்களம் விறுவிறுப்படைந்து காணப்படுகின்றது. சனங்களினாலே, சனங்களுக்காகத் தெரிவுசெய்யப்படுவதே சனநாய ஆட்சி எனப்படுகின்றது. அதன்பொருட்டே தேர்தல் முறைமை கட்டமைக்கப்படுகின்றது.

சனங்களின் பூரணமான பங்குபற்றுதல் ஏற்படுகின்றபோதே சனநாயகம் உன்னதமடைகின்றது. சனநாயத்தின் கூறுகளை அதிகமாக வரித்துக்கொண்ட தேசங்கள், நிலைபேறான, வளர்ச்சிப்பாதையிலே பயணிக்கின்றன. அதற்கு மேற்கத்தைய தேசங்களைப் பெருவெட்டில் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவ்வாறு சொல்வதனால், அவையெல்லாம் ஒப்பில்லா சனநாயகத்தைக் கொண்டிருக்கின்றன என்பது பொருளல்ல. அங்கும் குறைகள் உண்டு. ஆனால், அவற்றை சீர்செய்வதில் ஆத்மார்த்தமான முனைப்பு அங்கே உண்டு. அதனை நிறைவேற்றக்கூடிய கட்டமைப்புக்களும் உண்டு.

உதாரணத்திற்கு அவுஸ்திரேலியாவைச் சொல்லலாம்.

சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் மெச்சத்தக்க தலைமை அமைச்சராக (பிரீமியராக) இருந்தவரே கிளாடிஸ் அம்மையாராகும். கொரோனாப் பேரிடரை லாவகமாகக் கையாண்டவர். மாநிலத்திற்குச் சிறந்த தலைமையை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர். பரந்துபட்ட மக்கள் ஆதரவைக் கொண்டிருந்தவர். அதனையே கருத்துக்கணிப்புக்கள் தொடர்ச்சியாக வெளிப்படுத்தின.

இருந்தபோதிலும், ஊழலின் இருட்டில் கிளாடிஸ் அம்மையாரின் சாயல் தென்பட்டபோது நிலைமை தலைகீழாகியது. தலைமை அமைச்சர் என்பதற்காகவோ, அன்றி மக்கள் ஆதரவைப்பெற்றவர் என்பதற்காகவோ, விஷயம் கண்டும்காணாமல் விடப்படவில்லை.

ஊழலுக்கு எதிரான சுயாதீன ஆணைக்குழு அவரை விசாரிக்கப் போவதான தகவல் வெளியாகிய ஒரு சில மணித்தியாலங்களில், கிளாடிஸ் அம்மையார் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

ஊழல் விசாரணை முடிவு எப்படியானது, எத்தகைய ஊழல் நடைபெற்றது போன்ற விடயங்களுக்கு அப்பால், தேசபரிபாலனத்தின் மேன்மையைக் கணப்பொழுதேனும் களங்கப்படுத்த அனுமதிக்கமுடியாது என்னும் அசையாத பற்றுதலே இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகும்.

தேசத்தைக் சீராகக் கட்டியெழுப்பும் முயற்சியிலே சனநாயகத்தின் தூண்களாக வருணிக்கப்படுகின்ற சட்டவாக்கல்சபை, நீதித்துறை, நிர்வாகத்துறை, ஊடகம் ஆகிய நான்குமே சாமாந்திரமாகச் செயற்படுகின்றன. ஒன்றையொன்று கண்காணிக்கின்றன. நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் என்று சொல்லக்கூடிய களம் அங்கு காணப்படுகின்றது. அதனாலேயே அவுஸ்திரேலியா போன்ற தேசங்களிலே சனநாயகம் தளைத்தோங்குகின்றது.

மறுவளத்தில், சனநாயகக் கூறுகளை உதாசீனம் செய்கின்ற தேசங்கள் பின்னோக்கிப் பயணிக்கின்றன.

அதனுடைய ஆரம்பப்புள்ளியே சனங்களின் அக்கறையின்மையாகும். அத்தகைய சூழலிலே சனநாயகம் கேலிக்கூத்தாகின்றது.

ஆங்கில சொற்களிலே எலெக்க்ஷன் (தேர்தல்) – ஆக்க்ஷன் (ஏலம்) என்பதை சனநாயகம் தொடர்பான உரையாடல்களிலே ஒன்றுடன் ஒன்றைத் தொடர்புபடுத்துவார்கள். காரணம்: எங்கெல்லாம் தேர்தல் என்பது ஏலம் கூவுகின்ற முறையாகின்றதோ, அதுவே துஷ்பிரயோகத்தின் ஆரம்பமாகிவிடுகின்றது.

அதனை, இலங்கை போன்ற தேசங்களிலே, தெளிவாகக் காணமுடிகின்றது. தேர்தல் முறைகேடுகள் காலாதிகாலமாக நடைபெறுகின்றன. ஆனால் தற்போதைய சனாதிபதித் தேர்தலிலே உச்சம் தொடுகின்றது.

வானத்தை வில்லாக வளைத்து தருவதுபோன்ற நடைமுறைச் சாத்தியமில்லாத உறுதிமொழிகளை அரசியல்வாதிகள் வாரிவழங்குகின்றனர். வறிய குடும்பங்களுக்கு மானியம் தருவதாக வாக்குறுதி தருகின்றனர்.

அரச ஊழியர்களுக்குச் சம்பளஉயர்வு தருவதாக அறிவிக்கின்றனர். இவற்றுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கான, வருமான மூலோபாயங்களைக் கூறுமாறு, யாருமே அரசியல்வாதிகளிடம் கேட்பதில்லை.

அதனால் வாக்குறுதிகளும், அறிவிப்புக்களும் சரமாரியாக வாரியிறைக்கப்படுகின்றன.

இவ்வாறாக, அம்புலிக்கதைகளைச் சொல்லி சனங்களின் கவனத்தை ஈர்ப்போருக்கே அதிகாரம் வசப்படுகின்றது. அவ்வாறாக ஏமாற்றிப்பெற்றுக்கொண்ட அதிகாரம், மென்மேலும் ஏமாற்றுவதை ஊக்குவிக்கின்றது. அத்தகைய சுழலிலே அதிகாரத் துஷ்பிரயோகம் இயல்பாகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கொள்வனவு செய்யப்படுகின்றனர். மதுபான விற்பனை உரிமம், அபிவிருத்தி நிதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் விசிறப்படுகின்றன.

தனக்கு ஆதரவு தெரிவிக்காத இராஜாங்க அமைச்சர்களை சனாதிபதி தடாலடியாகப் பதவி நீக்கம் செய்கின்றார். கட்சித்தாவலினால் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த அமைச்சர்களுக்கு அரச பதவிகள் வழங்கப்படுகின்றன.

சனாதிபதி விக்ரமசிங்கவின் ஆட்டதுக்கு ஈடுகொடுத்து அரசியல்வாதிகளும் கண்ணாமூச்சி விளையாடுகின்றனர்.

பேரம்பேசுவதற்கான யுக்தியாகக் கட்சித்தாவலைப் பயன்படுத்துகின்றனர்.

குரங்குகள் மரக்கிளைகளிலே தாவுவது போன்ற லாவகத்துடன் கட்சி தாவுகின்றனர்.

“டீல்” படியாதபோது கட்சியிலிருந்து விலகப்போவதாக வதந்திகளை பரவவிடுகின்றனர். இப்படியான வதந்திகள் சில வாரங்கள் அல்லது பல மாதங்கள் வரை உலாவக் கூடியவை. தற்போது தேர்தல் நெருங்குவதால் காத்திருப்புக்கு நேரமில்லை.

அதனால் நேற்று ஒரு கட்சிக்கு பிரச்சாரம் செய்தவர், இன்று வேறொரு கட்சிக்கும், நாளை பிறிதொரு கட்சிக்கும் பிரச்சாரம் செய்கின்ற சூழல் உருவாகிவிடுகின்றது.

சிலர் அத்தோடு நின்றுவிடுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுடன் “டீல்” பேசுகின்றனர். அதிலே வெற்றியும் பெற்றுவிடுகின்றனர். அதனால் பாம்புக்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டுவதுபோன்ற வகையிலே செயற்படுகின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்கின்றனர். கேட்டால், விருப்பு வாக்குப்பிரச்சாரம் எனச் சாமாளித்துவிடுகின்றனர்.

அவ்வாறு செய்பவர்களையும் குறைசொல்ல முடியாது. காரணம்: அதற்குரிய வாய்ப்பை தேர்தல் முறையே ஏற்படுத்துகின்றது. “விருப்புவாக்கு” என்பதன் மூலமாக நேரெதிர் கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் “குழப்பகரமான” தேர்தல்முறையே முறைகேட்டின் ஆரம்பப் புள்ளியாகின்றது.

இத்தகையவொரு சூழலிலேயே வேட்பாளர்கள் “டீல்” பேசுகின்றனர். கொள்கையாவது, கூட்டாவது என எல்லாவற்றையும் “கடாசி” விட்டு வாக்குகளை “வறுகுவதற்கு” ஆலாய்ப் பறக்கின்றனர்.

அத்தோடு, கட்சிகள் உடைகின்ற வேகமும் கவனிப்பைப் பெறுகின்றது.

தமிழ், முஸ்லிம், சிங்கள என்ற வேறுபாடில்லாத ஒரே விடயமாகக் கட்சிகளின் உடைவையே சொல்லலாம்.

எல்லாக் கட்சிகளுமே தொடர்ச்சியாக உடைகின்றன. நீதிமன்றப் படியேறாத கட்சி என்று சொல்லக்கூடிய கட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

அரசியல்வாதிகளின் தில்லுமுல்லுகளிலே, அரசகட்டமைப்பை சின்னாபின்னமாக்குகின்றமையே உச்சமானதகும்.

உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், அரசஅதிபர் நியமனம், பொலிஸ்மா அதிபர் நியமனம் என அதிகாரத் துஷ்பிரயோகத்தின் பட்டியல் வானுயர்ந்ததாகும்.

பொலிஸ்மா அதிபருடைய நியமனத்துக்கு எதிரான நீதிமன்றத்தின் இடைகாலத் தடையையும், பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பான வழிகாட்டுதல்களையும் கூட அரசாள்வோர் கண்டுகொள்வதில்லை. அதனால், தேசத்தின் முக்கியமான தேர்தல் காலத்திலே, பொலிஸ் துறையின் தலைமைப் பதவி வெற்றிடமாகவே காணப்படுகின்றது.

சில மாவட்டங்களிலே பதில் அரசஅதிபர்களே, தேசத்தின் முக்கியமான தேர்தலொன்றை, மாவட்ட மட்டத்திலே தலைமைதாங்குகின்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

உள்ளுராட்சித்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமையினால், பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கூட எருமைமாட்டில் பெய்த மழையாகிவிட்டது. இவ்வாறானதொரு சுழலிலே நியாயமானவகையிலே சனாதிபதித் தேர்தல் நடைபெறுமென நம்பமுடியவில்லை.

 

 

 

 

Loading

3 Comments

  1. சிறப்பான பதிவு! ஆஸ்ட்ரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநில முதலமைச்சரின் ஊழல் பற்றிய எடுத்துக்காட்டு அருமை. “திருடனா பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற கதையாக, இலங்கை அரசியல்வாதிகளின் கைகளில் சிக்கித் திணறுகிறது மக்களாட்சி (சன நாயகம்)!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.