அரசியல் களம் என்ன சொல்கிறது?…. ரணில், சஜித், அநுர கடும் சொற்போர்…ஆர்.சனத்
மாவட்ட, தொகுதி மற்றும் கிராமிய மட்டத்திலான கூட்டங்கள் தற்போது முழு வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதற்கிடையில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யும் நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது.
மறுபுறத்தில் அதிரடி அறிவிப்புகள், அனல் கக்கும் அறிக்கைகள், விமர்சனக் கணைகள் என்பவற்றால் அரசியல் களம் என்றுமில்லாத வகையில் பெரும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாகக் கருதப்படும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் நடவடிக்கையும் இடம்பெற்றுவருகின்றது.
பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இவ்வாரம் முதல் ஓயாத அலையாக பரப்புரைகளில் ஈடுபடவுள்ளனர். இதற்கிடையில் சமூக வளைத்தளங்கள் ஊடாகவும் கட்சிகள் தீவிர பரப்புரைகளை முன்னெடுத்துவருகின்றன.
தேர்தல் விஞ்ஞாபனங்கள் கையிலெடுப்பு
ஜனாதிபதி வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பிலும் அரசியல் மேடைகளில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுவருகின்றன.
உள்ளடக்கங்கள் பற்றியும், வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் தொடர்பிலும் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக தம்மால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம் மாத்திரமே நடைமுறை சாத்தியமானது எனவும், ஏனைய வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வாக்கு வேட்டைக்கான பொறியெனவும் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களும் குறிப்பிட்டுவருகின்றனர்.
வழமையாக பெருந்தொகையான தேர்தல் விஞ்ஞாபனங்கள் அச்சிடப்படும். இம்முறை அச்சுக்கான செலவு அதிகம் என்பதால் பிரதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன், வட்ஸ்அப் உட்பட இணையவழி பரிமாற்றங்கள் ஊடாகவே மக்களிடம் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிமாறிவருவதை காணமுடிகின்றது.
73 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் உள்ள பழமையான அரசியல் கட்சிகளுள் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரொருவர் முதன்முறையாக உரையாற்றியுள்ள சம்பவம் இம்முறை இடம்பெற்றுள்ளது.
சுதந்திரக் கட்சியின் 73 ஆவது தேசிய மாநாடு செப்டம்பர் 02 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பங்கேற்றிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்துசென்றே 1951 செப்டம்பர் 2 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க உருவாக்கி இருந்தார்.அதன்பின்னர் இவ்விரு கட்சிகளுக்கிடையிலேயே போட்டி நிலவியது.
கொள்கை ரீதியிலும் பாரிய முரண்பாடுகள் உள்ளன. இலங்கையில் 2015 ஆம் ஆண்டுவரை இவ்விரு கட்சிகளே பிரதான கட்சிகளாக கருதப்பட்டன.
நாட்டை மாறிமாறி ஆட்சி செய்தன. சுதந்திரக்கட்சி மாநாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைவரோ அல்லது ஐ.தே.க. மாநாட்டுக்கு சுதந்திரக் கட்சி தலைவரோ அழைக்கப்படுவதில்லை.
இந்நிலைமை 7 சதாப்தங்களுக்கு பிறகு மாறியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல் ரீதியில் அநாதையாக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும், கூட்டு வைத்திருந்த பங்காளிகளும் இணைந்து புதியதொரு அரசியல் கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் உதயமாகியுள்ள இக்கூட்டணியின் தலைவராக பிரதமர் தினேஷ் குணவர்தனவும், பொதுச்செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் செயற்படவுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ யாப்பா ஜயவர்தன, ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அமைச்சர் டிரான் அலஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பில் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோரும், ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் அரவிந்த குமார், தேசிய ஐக்கிய முன்னணி சார்பில் அசாத் சாலி, தேசப்பற்றுள்ள மக்கள் சக்தி சார்பில் சுகத் ஹேவாவிதாரண ஆகியோரும் புதிய அரசியல் கூட்டணியுடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ள தேர்தல்களில் இக்கூட்டணி ஊடாகவே அரசியல் பயணத்தை தொடர்வதற்கு மேற்படி தரப்புகள் இணங்கியுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலிலும் இக்கூட்டணியே களம் காணவுள்ளது.
இந்நிலையில் மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உட்பட ராஜபக்சக்கள் முகாமில் உள்ள 27 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரியவருகின்றது.
இதன்பிரகாரம் அரசின் எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் அவர்கள் பங்கேற்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ச பக்கம் நிற்கும் 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி பறித்துள்ளார். இந்நிலையிலேயே ஏனையோரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ச முகாமில் உள்ள சிபி ரத்னாயக்க, சஞ்ஜீவ எதிரிமான்ன, சாகர காரியவசம், ஷசீந்திர ராஜபக்ச, நிபுன ரணவக்க உட்பட 27 எம்.பிக்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர்
ஜனாதிபதி தேர்தக்கு பின்னர், ஒக்டோபர் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் குறுகிய காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு திட்டமிட்டுள்ளார். தற்போதைய நாடாளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டு, புதிய தொடரே அவர் தலைமையில் ஆரம்பமாகும்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றால், இடைக்கால வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, கடந்தவார நாடாளுமன்ற அமர்வுடன், அரசியல் ரீதியிலான மாற்றங்களின் பின்னரே அடுத்த சபை அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எட்டு திக்கிலும் அநுர அலை
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாட்டில் ஆதரவு வலுத்துவருவதை அவதானிக்க முடிகின்றது. போரை முடித்த பின்னர் 2010 காலப்பகுதியில் சிங்கள கிராம பகுதிகளில் மஹிந்தவுக்கு இருந்த ஆதரவுக்கு ஒப்பான ஆதரவு அலை தற்போது அனுரவுக்கு வீசுகின்றது எனக் கூறப்படுகின்றது.
கருத்து கணிப்பு அறிக்கைகளின் பிரகாரமும் அநுரவே முன்னிலையில் இருக்கின்றார் எனக் கூறப்படுகின்றது. இதற்கிடையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்கள் தன்னை ஆதரிப்பாளர்கள் என அநுர நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒட்டு மொத்த நாடும் மாற்றமொன்றை எதிர்பார்த்துள்ள நிலையில், வடக்கு மக்களின் மாற்றத்தின் பங்காளிகளாக வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
சொற் சமர்
ஜனாதிபதி தேர்தல் போட்டியில் மும்முனைக் கட்டமைப்புக்குள் இருக்கும் பிரதான வேட்பாளர்கள் மூவரும் தற்போது கடும் சொற்போரில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அரசியல் களம் அனல் கக்குகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில்தான் இவ்வாறு சொற் சமர் ஏற்பட்டுள்ளது.
மூவரும் ஒருவர்மீது ஒருவராக விமர்சனக் கணைகளைத் தொடுத்துக்கொள்வதால் பிரதான ஊடக செய்திகளில் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்குரிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
தொலைக்காட்சி செய்திகளிலும் பெரும்பாலான நேரம் இவர்களின் உரைகளுக்கு ஒதுக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது.ஜனாதிபதி ரணிலும், அநுரவும் தன்னை தோற்கடிப்பதற்கு கூட்டு சேர்ந்துள்ளனர் என இருவரையும் சஜித் விமர்சித்துவருகின்றார்.
சஜித்தால் தேர்தலில் வெற்றிபெற முடியாது எனவும், எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை அவர் சரிவர நிறைவேற்றாததால்தான் அநுர எழுச்சி பெற்றுள்ளார் என ஜனாதிபதி குறிப்பிட்டுவருகின்றார்.
இதற்கிடையில் ரணிலையும், சஜித்தையும் அநுர விளாசித்தள்ளிவருகின்றார். இவ்வாறு மூவருக்கிடையில் கடும் மோதல் மூண்டுள்ளது.
ஆர்.சனத்