வெளவாலாக ஜனாதிபதி வேட்பாளர்கள்
21.09.24 இல் இலங்கையில் நடைபெறப் போகும் ஜனாதிபதித் தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதற்காக மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுவது போலவும்,நானும் உங்களுடைய பரம்பரைதான் என்று வெளவால் விலங்குகளுக்கும் நான் உங்கள் பரம்பரைதான் என்று பறவைகளுக்குச் சொல்வது போல தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இரட்டை வேடம் போட்டு வருகிறார்கள் தேர்தலில் போட்டியிடுபவர்கள்.
இது ஒருபுறமிருக்க சிறுபிள்ளைத்தனமான வேலையாக எதைப் பார்க்க வேண்டுமென்றால பொது வேட்பாளராக திரு.அரியநேந்திரனை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியதுதூன்.
அதாவது இலங்கை அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் மிகச் சாதாரண மனிதர்களுக்கே,பட்டுழைஞ்சது போதும் இனி என்ன அரசியல் தமிழர்களுக்கு உகந்தது என்பது தெரியும்,ஆனால் பல வருடங்களாக கதைப்பதை மட்டுமே அரசியலாக எண்ணி,அதைத்தான் மக்களும் அரசியல் என்று நினைப்பார்கள் என தமிழ் மக்களை மட்டி மடையன் பேதை மிலேச்சன் என எண்ணியும் இந்த மெத்தப் படித்த அரசியல்வாதிகள் தங்களை அதிவிவேகபூரணகுரு என்ற இடத்தில் வைத்து வருகிறார்கள்.
திரு.அரிநேந்திரன் அவர்கள் ,தனது வாழ்வில் தானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன் என பூரித்துப் புளகாங்கிதம் அடையளாமே தவிர இதனால் எள்ளளவும் நன்மை இல்லை.
காலத்தை எடை போடாது,சிங்கள மக்களின் மனநிலை என்ன என்பதை அறிய விரும்பாது தாம் ஒரு தேசிய இனம் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யலாம் என தமிழரசியல்வாதிகள் நினைத்தால் இவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தவறைச் செய்தவர்கள் தமிழ்மக்களேதான்.
சிறுநீர் கழிப்பதற்குக்கூட கதிரையைவிட்டு எழுந்தால் கதிரை போய்விடும் அதில் வேறொருவர் வந்து இருந்துவிடுவார்: எனத் தொடர்ந்தும் கானல் நீரை நீரெனவும், கற்பனையில் கோட்டை கட்டியும், வாய்ப்பந்தல் போட்டு நாடாளுமன்றத்துக்கு போவதை பொழுது போக்காக கொண்டு நாடாளுமன்றக் கதிரையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் தமிழரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைவருமே வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளே தமது வெற்றியைத் தீர்மானிக்கும் என நம்பித் தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறாவிட்டாலும்,வடக்குக் கிழக்கு தமிழர்களில் யாருமே வாக்களிக்காவிட்டாலும் போட்டியிடுபவர்களில் யாரேனும் ஒருவர் சிங்கள மக்களின் வாக்குகளினால் மட்டுமே ஜனாதிபதியாகத் தெரிவாவார்கள் என்பதைப் பரிந்து கொள்ள வேண்டும்.
வடக்குக் கிழக்குத் தவிர்ந்த மற்றைய இடங்களில் வாழும் தமிழர்கள் திரு.அரியநேந்திரன் தவிர்ந்த மற்றவர்களில் யாரேனும் ஒருவருக்கே வாக்களிப்பார்கள்.
தமிழ் மக்களின் வாக்குகளினால் திரு.மைத்திரிபால சிறிசேனா வென்ற ஒரு காலகட்டம் இனி ஒரு போதும் வராது.(அப்படி தமிழர்கள் நினைக்கலாம்,சிங்கள மக்களின் வாக்குகள்கூட அவரின் வெற்றியைத் தீர்;மானித்திருக்கும்) தமிழர்களின் வாக்குகள்தான் ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்பதைத் தீர்மானிக்கும் என்பது வெறும் வாய்ச்சவாடலாகும்.
சிங்கள மக்கள் தம்மை ஒழுங்கமைத்துவிட்டார்கள் என்பதை தமிழர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் உணர வேண்டும்.
தமிழ் மக்கள் உணரத் தலைப்பட்டாலும் தமிழீழத்தையும் மாவீரர்களையும் முன்னிறுத்தி தமிழர்களை நின்ற இடத்திலேயே நிற்கச் செய்துவிடுகிறார்கள் தமிழ் அரசியல்வாதிகள்.ஓ அது சரிதான் போல இருக்குது என விக்கித்து நின்றுவிடுகிறார்கள தமிழர்கள்.
மாவீர்ர்கள் எவர் மனதிலிருந்தும் மறையமாட்டார்கள்.ஆனால் அவர்களைப் பணயக் கைதிகளாக காட்டி அரசியல் செய்வது தமிழ் மக்களை ஏமாளிகள் என நினைப்பதற்குச் சமன் என்பது மட்டுமல்ல அது கேவலமான அரசியல் அனுகுமுறையாகும்.
காலத்தையும் தமிழர்களின் சனத் தொகையையும் நடந்து முடிந்த தமிழர்களின் அழிவுகளையும் ஆய்ந்தறிந்து அரசியல் செய்வதே புத்திசாலித்தனமாகும்.
அதை விட்டிட்டு கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் ஆற்றில் வைக்க தணல் அணையும் சத்தம் புஸ்ஸென்று கேட்க ஆறு நித்திரை கொள்ளவில்லை முழிப்பாயிருக்குது என்று அவிவிவேகபூரணகுருவுக்கு மடையன் சொன்ன கதை போல அரசியல் செய்யக்கூடாது.அதைத்தான் தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள அரசியல்வாதிகளில் திரு.சஜித் பிரேமதாசா தான் 13வது அரசியல் சட்டத்தை அமுல்படுத்துவேன் என்கிறார்.அது நடைபெறச் சாத்தியமே இல்லை.
அவர் வெற்றிபெற்றால் அதை அமுல்படுத்த நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைச் சம்மதம் வேண்டும் என அதைக் கதைத்துக் கதைத்து இழுபறிப்பட்டு முடிக்கவே ஐந்து வருடங்கள் முடிந்துவிடும்.பிறகு தேர்தல் வரும் பிறகும் 13 பற்றிக் கதைப்பார்கள். அடிச்சுப் பிடிச்சு தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாவது ஜனாதிபதித் தேர்தலில் வென்றுவிட வேண்டும் பிறகு சமாளிக்கலாம் என்ற எண்ணத்துடன் ஆகாயத்துக்கு பச்சை வண்ணம் தீட்டிக் காட்டுறன் என புழுகிக்: கொண்டு நிற்கிறார்கள் திரு.ரணிலையும்,திரு.நாமலையும் தவிர்ந்த மற்றவர்கள். இந்த விடயத்தில் திரு.ரணில் விக்கிரமசிங்காவைப் பாராட்டலாம்.13வது அரசியமைப்புச் சட்டத்தை நிராகரித்துள்ளார்.
உண்மையைச் சொல்லி தேர்தலில் போட்டியிடுவதுதான் அரசியல் நேர்மை.அவர் எதையெல்லாம் தம்மால் செய்ய முடியுமோ அதையே தேர்தல் வாக்குறுதிகளாகச் சொல்லியிருக்கிறார்.