சொல்லித்தான் ஆகவேண்டும்!…சொல்-18… அரசியல் பத்தித்தொடர்… தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்
கடல் சுரியும் வானத்து வெள்ளியும்
(கொக்குக்கு வாழையிலையில் பாயாசம் வைத்ததுபோல் தேர்தல் விஞ்ஞாபனம்)
இலங்கையின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராக பா. அரியநேத்திரனை நிறுத்தியுள்ள ‘தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு’ என தமக்கு நாமகரணம் சூட்டியுள்ள அமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை (அறிக்கையை) வெளியிட்டுள்ளது.
அதன் உள்ளடக்கங்களைப் படித்தால் கடந்த 75 வருட காலமாகத் தமிழரசுக் கட்சியும் பின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பின் மீண்டும் தமிழரசுக் கட்சியும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்) பாராளுமன்றத் தேர்தல்களின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்ட விடயங்களை-அரைத்த மாவையே-மீண்டும் ஒரு முறை அரைத்திருக்கிறார்கள்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளெல்லாம் விலாவாரியாகச் சொல்லப்பட்டுள்ளன. இவை அனைவரும் அறிந்த விடயங்களே. வழமையாகத் தமிழர் தரப்பு அரசியல் என்பது பிரச்சனைகளைக் கூறுவதே தவிர அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை ஒருபோதும் முன்வைப்பதல்ல.
அது போலவே இத் தேர்தல் அறிக்கையிலும் பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான தீர்வுகளை நாடவில்லை. தேடவும் இல்லை. மாறாகக் கற்பனை உலகில் சஞ்சரித்துக்கொண்டு நடைமுறைச் சாத்தியமற்ற ‘ஏட்டுச் சுரக்காய்’ க் கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.
கிராமங்களில் கதைத்துக் கொள்வார்கள், சாரைப்பாம்பு கடித்தால் அதற்கு மருந்து கடல் சுரியும் வானத்து வெள்ளியும் என்று. கடல் வற்றி சுரியெடுக்க வேண்டும். வானத்து வெள்ளியைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டும். இரண்டுமே நடைபெறமாட்டாது. வாழை இலையிலே கொக்குக்குப் பாயாசம் வைத்தது போல் தீர்வுக் கோரிக்கைகளைத் இத்தேர்தல் அறிக்கையிலே வைத்து ‘தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு’ தமிழர்களையே ஏமாற்றியுள்ளது. அதாவது தமிழர் தரப்பே தமிழர்களை ஏமாற்றியுள்ளது. இத்தேர்தல் அறிக்கையில் பிரச்சனைகளுக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கைகள் யாவுமே கடல் சுரியும் வானத்து வெள்ளியும் போன்றவைகளாகும். மக்களை மயக்கத்தில் ஆழ்த்துபவை.
1972 ஆம் ஆண்டு பிரதமர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் புதிய குடியரசு அரசியல் அமைப்பைக் கொணர்ந்தபோது எஸ் ஜே வி செல்வநாயகம் (தந்தை செல்வா) அதனைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை வெளிக்காட்டுவதற்குத் தனது காங்கேசன்துறைத் தொகுதிப் பாராளுமன்ற ஆசனத்தைத் துறந்து இடைத்தேர்தலுக்கு (1974) வழி வகுத்து இடைத்தேர்தலில் தான் வென்றால் தமிழ் மக்கள் இப்புதிய குடியரசு அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாகும் என ஓர் அரசியல் நிலைப்பாட்டை எடுத்து அதன்படி செயற்பட்டார்.
அவரது அந்த அரசியல் நிலைப்பாடு அல்லது செயற்பாடு சரியா? பிழையா? என்பதற்கும் அப்பால் அவர் ஒரு நிலைப்பாட்டைத் தெளிவாக முன் வைத்தார். அதில் ஒரு தர்க்கம் இருந்தது.
1976 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானமான தமிழ் ஈழத்துக்குத் தமிழ் மக்களின் ஆணையைப் பெறுவதற்கான பொது வாக்கெடுப்பாக 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலைத் தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்கொண்டது. அந்த அரசியல் நிலைப்பாடு அல்லது செயற்பாடு சரியா? பிழையா? என்பதற்கும் அப்பால் அந்த நிலைப்பாடு தெளிவாக இருந்தது. அதிலும் ஒரு தர்க்கம் இருந்தது.
ஆனால், இப்போது தமிழ்ப் பொது வேட்பாளரினால் – தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினால்-முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் ஒரு தெளிவில்லை. வெறுமனே அப்பாவித் தமிழர்களை மயக்கத்திலே ஆழ்த்தும் வகையிலும்-கற்பனா உலகில் சஞ்சரிக்கவைக்கும் வகையிலும் அலங்காரமான வார்த்தைகளில் அறவே நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை அச்சடித்து வெளியிட்டிருக்கிறார்கள். அறிவு பூர்வமானதோர் அரசியற் செயற்பாடாக இது தெரியவில்லை.
ஒன்றில், தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தற்போதும் தனி நாடு ஒன்றே தீர்வு எனக் கருதுகிறார்கள், அதனை வெளிகாட்டவே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் என அறிவித்திருந்தால் அகோரிக்கை நடைமுறைச் சாத்தியமோ இல்லையோ ஆனால் அதில் ஒரு தர்க்கம் இருந்திருக்கும்.
அல்லது
தமிழ் மக்கள் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகச் ‘சமஸ்டி’ க் கட்டமைப்பையே வேண்டி நிற்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் எனக் கூறியிருந்தால் அதில் ஒரு தர்க்கம் இருந்திருக்கும்.
அல்லது
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கலைத்தான் தமிழ் மக்கள் அவாவி நிற்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டவே தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளோம் எனச் சொல்லியிருந்தால்கூட அதிலும் ஒரு தர்க்கம் இருந்திருக்கும்.
ஆனால், எந்தத் தெளிவும் இல்லாமல் திட்டவட்டமான தீர்வுக் கோரிக்கைகள் எதனையும் முன்வைக்காமல் தர்க்கரீதியற்ற முறையில் இப்பத்தியில் முன்பு சொல்லப்பட்டதுபோல் தமிழ் மக்களுக்குக் கடல் சுரியும் வானத்து வெள்ளியும் தரவேண்டும் என்னும் வகையில்தான் இத்தேர்தல் அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓர் அறிவுபூர்வமான நடைமுறைச் சாத்தியமான அரசியல் பாதையைத்தான் அவாவி நிற்கிறார்களே தவிர இவ்வாறான கற்பனாவாதக் கோரிக்கைகளையல்ல என்பதை வெளிப்படுத்தவாவது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தமிழ் மக்கள் இத்தேர்தலில் முற்றாக நிராகரிக்க வேண்டும்.